அரண்மனை-2 ; விமர்சனம்


ஏற்கனவே ரசிகர்களை ‘அரண்மனை’ படம் மூலம் ஈர்த்த சுந்தர்.சி அதற்கு கிடைத்த வரவேற்பை ‘அரண்மனை-2’ ஆக மாற்றியிருக்கிறார்.. இந்த அரண்மனை பயம் காட்டுகிறதா..? இல்லை படம் காட்டுகிறதா..? பார்க்கலாம்

கிராமத்தில் உள்ள அம்மன் சிலையை எடுத்து மறு பிரதிஷ்டை செய்வதற்காக பீடத்தை விட்டு தனியே வைக்கிறார்கள்.. அம்மன் ஓய்வெடுத்தால் பேய்கள் டபுள் டூட்டி பார்க்கும் என்கிற விதிப்படி, பேய் ஒன்று ஜமீன்தார் ராதாரவியின் அரண்மனைக்குள் புகுந்துகொண்டு அவரை தாக்கி கோமாவில் தள்ளுகிறது.

தொடர்ந்து அவரது குடும்ப வாரிசுகள் ஒவ்வொருவராக குறிவைத்து சிலரை போட்டுத்தள்ளுகிறது.. இதில் பத்து வயது பையனையும் டார்கெட் பண்ணுகிறது. அந்த வீட்டிற்கு வரும் சுந்தர்.சி வழக்கமான தனது கேமரா உபகரணங்கள் மூலம் பேய் யார் என்பதை கண்டறிகிறார்.. அது பழிவாங்குவதற்கான அதிர்ச்சிகரமான காரணத்தையும் கண்டறிந்து, மந்திரவாதிகள் உதவியால் தடுக்க நினைக்கிறார்.. கிளைமாக்ஸில் வழக்கம்போல அம்மன் உதவியுடன் பேயை பேக் பண்ணி அனுப்பி மீதமுள்ள வாரிசுகளை காப்பாற்றுகிறார்.

இரண்டாம் பாகம் என்பதற்காக கதையில் மிகப்பெரிய மெனக்கெடல் எல்லாம் சுந்தர்.சி பண்ணவில்லை. நடிகர்களில் சில ஆட்களை மாற்றி, சிலரின் உறவு முறைகளை மாற்றிய சுந்தர்.சி, பேய் பழிவாங்குவதற்கான காரணத்தை மட்டும் புதிதாக யோசித்திருக்கிறார்.. சித்தார்த், த்ரிஷா, ஹன்ஷிகா, பூனம் பஜ்வா என எல்லோரும் ஒதுக்கப்பட்ட ஏரியாவில் நின்று சொன்னதை செய்திருக்கிறார்கள். ஹன்ஷிகா இதிலும் நம்மை பரிதாபப்பட வைக்கிறார்.. த்ரிஷாவுக்கு பேய் எபக்ட் சூட் ஆகவில்லை. சுந்தர்.சியும் தன பங்குக்கு பேயாக மாறி நம்மை கொஞ்சம் மிரட்டவும் செய்திருக்கிறார்.

சந்தானம் இல்லாத குறையை சூரியை வைத்து சரி செய்திருக்கிறார்கள்.. அதுவும் ஓரளவுக்கு ஒர்க் அவுட் ஆகவே செய்திருக்கிறது. குறிப்பாக கோவை சரளாவை சூரியுடன் கோர்த்து விட்டு கோக்குமாக்கு காமெடிக்கு புது ரூட் பிடித்திருக்கிறார் சுந்தர்.சி. க்ளைமாக்ஸில் பேயுடன் ஹோட்டலுக்கு பயணிக்கும் பத்து நிமிட காட்சிகள் சிரிப்புக்கு உத்தரவாதம்.

மிரட்டலாமா வேண்டாமா என யோசித்து யோசித்து வெகு சாதாரணமான பின்னணி இசையை தந்திருக்கிறார் ஹிப் ஹாப் ஆதி. பேய் இருக்கிறதை கண்டுபிடிக்கனும்னா, பேய் சுயமா யோசிச்சு இந்த கேமரா டெக்னிக்கை எல்லாம் கண்டுபிடிக்கிற வரைக்கும் எத்தனை பாகம் எடுத்தாலும் சுந்தர்.சியின் இந்த வேலை தொடரத்தான் செய்யும் போல. தன் பட காட்சிகளை தானே தைரியமாக ரிப்பீட் செய்திருக்கிறார் சுந்தர்.சி..

மேலே சொன்னவை அனைத்தும் இந்தப்படத்தின் உருவாக்கத்தில் நிகழ்ந்த குறைகளாக தெரிந்தாலும், படம் பார்க்க வரும் ஆடியன்ஸை தேவையான அளவு சிரிக்க வைத்து, தேவைக்கு அதிகமாகவே பயப்படுத்தி தான் அனுப்பி வைக்கிறார் சுந்தர்.சி.

மொத்தத்தில் பேமிலி ஆடியன்ஸுக்கு பிடித்த பொழுதுபோக்கு படம் தான்.

Aranmanai 2 ReviewAranmanai-2HanshikaKhushbuKovai SaralamanobalaPoonam BajwaSiddharthSooriSundhar CTrisha