ஆங்ரி பேபீஸ் (ANGRY BABIES in love ) – விமர்சனம் (மலையாளம்)

நடிகர்கள் : அனூப் மேனன், பாவனா, அனுஸ்ரீ மற்றும் பலர்

இசை : பிஜிபால்

ஒளிப்பதிவு : அனில் நாயர்

கதை : கிருஷ்ணா பூஜப்புரா

இயக்கம் : ஷாஜி சுரேந்திரன்

கதை : அனூப் மேனனும் பாவனாவும் காதலர்கள். முதல் காட்சியிலேயே பாவனா தனக்கு சர்ச்சில் நடக்க இருக்கும் திருமணத்தை நிறுத்திவிட்டு அனூப் மேனனுடன் மும்பைக்கு செல்கிறார். இதற்கு அனூப்பின் மூன்று நண்பர்களும் உதவி செய்கிறார்கள்.

ஆறு மாதங்கள் ஜாலியாக போகும் வாழ்க்கையில் அதன் பின் இருவருக்கும் முட்டலும் மோதலும் அடிக்கடி ஏற்படுகிறது. காரணம்  அனூப் போட்டோ கிராபர்.. பாவனாவோ சொந்தமாக ரெஸ்டாரண்ட் வைத்து நடத்துகிறார். ரெஸ்டாரண்ட்டில் வந்து தனக்கு உதவும்படி பாவனா கேட்க, அனூப்போ போட்டோகிராபி மட்டுமே தனது தொழில் என்கிறார்.

இருவரும் சேர்ந்து வாங்கிய ஃப்ளாட்டிற்கு மாத தவணை கட்ட மட்டும் எப்படியோ பாதி தொகையை சில மாதங்களுக்கு தருகிறார் அனூப். ஆனால் ஓரளவுக்கு மேல் பணத்தட்டுப்பாடு ஏற்பட, அனூப்பிற்கு இக்கட்டான நிலை உருவாகிறது. அப்போது அனூப்பின் நண்பர்கள் பெண் மாடல் ஒருவருக்கு போட்டோ ஷூட் பண்ணும் வாய்ப்பை வாங்கித்தருகிறார்கள்.

நிறைய பணம் கிடைக்கும் என்பதற்காக ஒப்புக்கொள்ளும் அனூப் தன் வீட்டிலேயே போட்டோ ஷூட் நடத்துகிறார். கிளாமர் ஸ்டில் எடுக்கும்படி அந்தப்பெண் போஸ் கொடுக்க, அந்த நேரத்தில் வீட்டிற்குள் நுழையும் பாவனா அதை பார்த்து தப்பாக அர்த்தம் கொண்டு அனூப்பின் மீது சந்தேகப்படுகிறார்.

விளைவு விவாகரத்து வரை போகிறது. குடும்ப கோர்ட் அவர்கள் மீண்டும் ஆறுமாதம் வரை சேர்ந்து வாழவேண்டும் என்றும் அதிலும் உடன்பாடு ஏற்பட வில்லையென்றால் விவாகரத்து வழங்குவதாகவும் சொல்கிறது. வேறு வழியில்லாம் இருவரும் எலியும் பூனையுமாக ஒரே ஃப்ளாட்டிலேயே வாழ்க்கையை தொடர்கின்றனர்.

இந்த காலாட்டா சூழ்நிலையில் ஒரு நாள் எதிர்பாராத விதமாக இவர்கள் காதலை சேர்த்து வைத்து உதவிய நண்பர்கள் மூவரும் அதில் ஒருவரது காதலியும் மும்பைக்கு இவர்களை தேடி வந்துவிடுகின்றனர். இரண்டு மாதம் வரை அவர்கள் தங்க இருப்பதாக சொல்ல அவர்கள் முன்னால் மீண்டும் ஒற்றுமையான தம்பதி போல இருவரும் நடிக்க வேண்டியிருக்கிறது.. ஒருகட்டத்தில் அந்த நடிப்பே அவர்களையும் அறியாமல் மீண்டும் அவர்களை ஒன்று சேர்க்க, முடிவு சுபம்.

இன்றைய இளைஞர்களிடம் காதலுக்காக போராடும் குணம் இருக்கும் அளவுக்கு அதன் மூலம் கிடைத்த மண வாழ்க்கையை தக்கவைத்துக் கொள்ளும் பொறுமையும் புரிந்துணர்வும் இல்லை என்பதை இரண்டு மணிநேர காமெடி ட்ராமாவாக ஆக்கியிருக்கிறார்கள்.

ஹீரோ அனூப் மேனனும் பாவனாவும் சேர்ந்தே காமெடியையும் கவனித்துக்கொள்வதால் நகைச்சுவைக்கு என்று தனியாக காமெடி நடிகர்கள் யாருமில்லை. பாவனாவிடம் இவ்வளவு நகைச்சுவை திறமையா..? தமிழ் இயக்குனர்கள் மிஸ் பண்ணிவிட்டார்களே…

ஃப்ளாட்டில் பாவனாவுக்கு உதவியாக தமிழ் பேசும் தேனி மாவட்ட பெண்ணாக வரும் அனுஸ்ரீ தமிழை நன்றாக மென்று தின்று பேசினாலும் அவர் வரும் காட்சிகள் எல்லாம் கலாட்டாதான். அதேபோல அனூப்பின் எதிர் ஃப்ளாட்டிற்கு குடிவரும் நபரும் இவர்கள் திருமணம் ஆனவர்கள் என தெரியாமல் பாவனாவிடம் ஜொள்ளு விடும் இடங்கள் எல்லாம் சரியான காமெடி.

கதை கிட்டத்தட்ட ஒரே ஃப்ளாட்டில் 60 சதவீதம் நடக்கிறது என்றாலும் மும்பையின் அழகையும் விதவிதமாக காட்டத்தவறவில்லை.. மீண்டும் பாவனாவும் அனூப்பும் ஒன்று சேரும் காட்சிகளை  இன்னும் நீட்டிப்பு செய்திருந்தால் கொஞ்சம் அழுத்தமாக நம் மனதை ஆக்கிரமித்திருக்கும். தமிழ்சினிமாவில் பாக்யராஜ் காலத்தில் இருந்து நாம் பார்த்துப் பழகிய கதையை இன்றைய ட்ரெண்டிற்கு ஏற்றமாதிரி கொடுத்திருக்கிறார்கள். ஒருமுறை பார்த்து ரசிக்கலாம்

ANGRY BABIES in loveAnnop MenonAnusriBavanaஅனுஸ்ரீஅனூப் மேனன்ஆங்ரி பேபீஸ்பாவனா