ஆமையும் முயலும் – விமர்சனம் (மலையாளம்)


 

நடிகர்கள் : ஜெயசூர்யா, அனூப் மேனன், சுகன்யா, பியா, அம்பிகா, நெடுமுடி வேணு, இன்னொசன்ட், ஹரிஸ்ரீ அசோகன், மம்முக்கோயா, சோனா மற்றும் பலர்…

கதை தொடக்க பின்னணி குரல் : மோகன்லால்

படத்தொகுப்பு : ஐயப்பன் நாயர்

இசை : எம்.ஜி.ஸ்ரீகுமார்

ஒளிப்பதிவு : திவாகர் மணி

கதை, இயக்கம் : பிரியதர்ஷன்

கிராமத்தையே தனது அதிகாரத்தால் கட்டி ஆளும் பண்ணையாரம்மா சுகன்யா.. அவரது தம்பி ஹரிஸ்ரீ அசோகன்.. பால்காரர் இன்னொசன்ட்.  இன்னொசன்ட்டின் மகள் பியா… தந்தை வாங்கிய கடனுக்காக இன்னொசன்ட்டிடம் வேலைபார்த்துக்கொண்டு, அவரது மகள் பியாவை காதலிக்கும் ஜெயசூர்யா.. இவர்கள்தான் கிராமத்தின் முக்கிய கதாபாத்திரங்கள்..

இன்னும் ஒருவரும் இருக்கிறார்.. அதே கிராமத்தில் லாட்டரி டிக்கெட் விற்கும் நெடுமுடி வேணு.. இவர் விற்ற டிக்கெட்டுகளில் ஒன்றிற்கு ஐந்துகோடி பரிசு விழுந்ததாக டிவி செய்தி மூலம் அறிகிறார். கிராமத்தில் அவ்வளவாக படிப்பறிவு இல்லாததால் யாருக்கு பரிசு விழுந்திருக்கிறது என்று அவராக தேடிப்போய் சொன்னால்தான் உண்டு.

இந்த நிலையில் யாருக்கு அந்த லாட்டரியை விற்றோம் என அறிய லாட்டரி வாங்கிய அனைவரையும் அழைத்து விருந்து வைத்து லாட்டரி டிக்கெட்டுகளையும் வாங்கிக்கொள்கிறார்.. எஸ். நீங்கள் நினைத்து போல சரியாக பரிசு விழுந்த லாட்டரி டிக்கெட்டை வாங்கியவர் மட்டும் வரவில்லை.

கவனமாக ஞாபகப்படுத்தி பார்த்தபோது, எந்நேரமும் தண்ணியில் மிதக்கும் பங்களாவாசியான அந்தோணி என்பவரிடம் அந்த டிக்கெட் இருப்பதாக அறிந்து, அவரை சந்திக்க வீட்டிற்கு செல்கிறார் நெடுமுடி வேணு.. ஆனால் அங்கே லாட்டரி விழுந்த விஷயம் தெரிந்த அந்தோணி சந்தோசத்திலேயே இறந்துவிட்டார்.. ஐந்து கோடி அடித்த லாட்டரிக்கு, கமிஷனை கணக்கு பண்ண சென்ற நெடுமுடி வேணு அந்த லாட்டரியையே சொந்தமாக்க நினைக்கிறார்.

ஆனால் அப்போது அங்கே ஏதேச்சையாக பால் காசு வாங்க வரும் பால்காரர் இன்னொசன்ட், அந்தோணி இறந்து கிடப்பதை பார்த்து நெடுமுடி வேணுதான் அவரை கொன்றதாக நினைக்க, அவருக்கு உண்மையை விளக்க, இப்போது பங்கு இரண்டாகிறது.

பிணத்தை மறைக்க செல்லும் வழியில் ஜெயசூர்யா இவர்களை பார்த்துவிட இப்போது பங்கு மூன்றாகிறது.. மறுநாள் காலை இறந்துபோன அந்தோணியின் சகோதரி கே.பி.ஏ.சி.லலிதா வர, அவருக்கும் விஷயம் தெரிந்து அது நாலு பங்காக மாறுகிறது..

இந்த நால்வரும் சேர்ந்து லாட்டரி தொகையை கைப்பற்றுவதற்காக அந்தோணி இறக்கவில்லை என சொல்லி சமாளிக்கின்றனர்.. ஆனால் அந்தோணி இறப்பதற்கு முன் பலரையும் அழைத்து விஷயத்தை சொல்லி இருந்ததால் கடன் கொடுத்த ஒவ்வொருவராக விஷயம் தெரிந்து கிட்டத்தட்ட முப்பது பேர்கள் பங்குக்கு வந்துவிடுகின்றனர்.

இறந்துபோன அந்தோணியை அடக்கம் பண்ண ஏற்பாடு செய்துவிட்டு, ஒரு வழியாக இன்னொசன்ட்டையே அந்தோணியாக  ஆள் மாறாட்டம் செய்து, நடிக்க  வைத்து லாட்டரி இன்ஸ்பெக்டராக வரும் அனூப் மேனனை நம்ப வைத்தும் விடுகின்றனர். ஆனால் அந்த கிராமத்து பண்ணையாரம்மா சுகன்யாவுக்கும் அவரது தம்பி ஹரிஸ்ரீ அசோகனுக்கும் உண்மை தெரிந்து அதை தடுக்க முயல்கின்றனர்.

உண்மையை சொல்லாமல் இருக்கவேண்டும் என்றால், இன்னொசன்ட்டின் மகளான பியாவை தனது தம்பிக்கு கட்டித்தந்து, தங்களுக்கும் பங்கு கொடுக்க வேண்டும் என கெடு வைக்கிறார் சுகன்யா. ஆனால் ஜெயசூர்யாவோ விட்டுத்தர மறுக்க,  பணத்தில் பங்குக்காக காத்திருக்கும் மற்றவர்கள் அவரை அடித்து துவைக்கின்றனர்..

இதை அறிந்து பியா தற்கொலைக்கு முயல்கிறார்.. மணம் மாறும் இன்னொசன்ட், தனது மகளை ஜெயசூர்யாவுக்கு மணம் முடிக்க சம்மதிக்கிறார்.  கோபமான சுகன்யா, ஐந்து கோடிக்கான செக்கை கொடுப்பதற்காக கிராமத்திற்கு மீண்டும் வரும் லாட்டரி இன்ஸ்பெக்டர் அனூப் மேனனை சந்தித்து உண்மையை சொல்ல விரைகிறார்.. இறுதியில் என்ன நடக்கிறது என்பது சுபமான க்ளைமாக்ஸ்..

ஒரே ஒரு லாட்டரி.. அதை வைத்துக்கொண்டு இவ்வளவு சுவராஸ்யமாக கதை பின்ன முடியும்மா..? சும்மா பின்னு பின்னுன்னு பின்னியிருக்கிறார் பிரியதர்ஷன்…

ஏற்றுக்கொண்ட பாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தாலும் கதாநாயகன் என்கிற பெயருக்குத்தான் ஜெயசூர்யாவின் கதாபாத்திரம்… உண்மையைச்சொன்னால் அறுபது வயதை தாண்டிய நெடுமுடி வேணுவும் இன்னொசன்ட்டும் தான் படம் முழுவதும் உலாவரும் கதாநாயகர்கள்.. படத்தின் மொத்த காமெடியில் 75 சதவீதத்தை இவர்கள் இருவர் மட்டுமே கையில் எடுத்துக்கொள்கிறார்கள்.

லாட்டரி தொகையான 5 கோடியை கைப்பற்ற, நெடுமுடி வேணு (அந்நியனில் விக்ரமின் தந்தையாக நடித்தாரே அவர்தான்) ஒவ்வொரு சிக்கலையும் சமாளிக்கும் விதம் இருக்கிறதே.. அட..அடா..சமாளிப்பு திலகம் என்கிற பட்டம் இவருக்குத்தான் பொருந்தும். லாட்டரி இன்ஸ்பெக்டரான அனூப் மேனனுக்கு வழி காட்டுகிறேன் என ஒரு மைல் தூரத்தை, பத்து மைலாக சுற்ற விடும் காட்சி விலா நோக வைக்கும் காமெடி..

இன்னொசன்ட் (லேசா லேசா என்கிற ஒரு தமிழ்ப்படத்தில் மட்டும் நடித்திருக்கிறார்) மட்டும் சளைத்தவரா என்ன..? இறந்துபோன அந்தோணியின் விரைத்த கையை, இவர் ஒவ்வொரு முறை மடக்க முயற்சிக்கும்போதும் இந்தமாதிரி இன்னொசன்ட்டான கதாபாத்திரங்களுக்கேன்றே பிறந்தவன் நான் தான் என்பதை சொல்லாமல் சொல்லுகிறார். குறிப்பாக அந்தோணியாக மாறிய பின் அவரது அதிரடி ஆட்டம், அமர்க்களமான நாடகம்..

ஷோலே படத்தில் அமிதாப்- தர்மேந்திரா ஓட்டி வருவது போன்ற மாடல் ஸ்கூட்டரில் பந்தாவாக ட்ரைவர், அடியாள் சகிதம் உட்கார்ந்துகொண்டு வலம் வருவதில் சுகன்யா கிட்டத்தட்ட வில்லியாகவே மிடுக்கு காட்டியிருக்கிறார். சுகன்யா இதுவரை நடித்த கேரக்டர்களில் இது வித்தியாசமானது. பாவம்.. அவரது முடிவுதான் பரிதாபம்..

அந்தோணியின் சகோதரியாக வரும் கே.பி.ஏ.சி.லலிதா (காதலுக்கு மரியாதையில் ஷாலினியின் அம்மாவாக நடித்தவர்) லாட்டரியில் பங்குத்தொகைக்காக பண்ணும் அலம்பல்கள் இருக்கிறதே.. அப்பப்பா, சொல்லப்போனால் கதாநாயகி பியாவை விட கதையின் நாயகி என்று கூட இவரை சொல்லலாம்.

முக்கியமாக சொல்லவேண்டிய ஒரு நபர், லாட்டரி அடித்த சந்தோஷத்திலேயே சிரித்த முகத்துடன் மரணத்தை தழுவி படம் முழுவதும் எப்போதும் அதே போஸில் பிணமாக காட்சியளிக்கும் அந்தோணியாக நடித்த நந்து தான்.. சான்ஸே இல்லை.. பிரமாதமான நடிப்பு.. இவர் தவிர, இன்னொசன்ட்டிடம் கடன் வாங்கிவிட்டு அதை திருப்பிக்கொடுக்காமல், அவர் தேடி வரும்போதெல்லாம் வேகமாக தனது யானையின் மீது ஏறி தப்பிக்கும் மம்முக்கோயா தனது செய்கைகளாலேயே நம்மை சிரிக்க வைக்கிறார்.

லாட்டரி இன்ஸ்பெக்டராக வந்து க்ளைமாக்சில் திருப்பத்தை ஏற்படுத்தும், வழக்கம் போல டீசண்டான கெஸ்ட்ரோலில் அனூப் மேனனின் நடிப்பு குறைசொல்ல முடியாதது. என்ன ஆச்சோ தெரியவில்லை.. கவர்ச்சி நடிகை சோனா வரவர, குணச்சித்திர கதாபாத்திரங்களில் மிளிர்கிறார்.. பார்க்கவும் நன்றாக இருக்கிறது.

இப்படி இன்னும் பலரையும் பாராட்டிக்கொண்டே போகலாம்.. படம் முழுவதும் நான்ஸ்டாப் காமெடியாக இருக்கவேண்டும்.. அதேசமயம் போரடிக்க கூடாது என்பதாக கங்கணம் கட்டி களம் இறங்கியிருக்கும் இயக்குனர் பிரியதர்ஷன் அவற்றில் எந்த ஒரு குறையுமில்லாமல் படத்தை நகர்த்திசென்றிருக்கிறார்..

படம் ஆரம்பித்ததும் அமையும் முயலும் கதையை தனது தென் மதுர காந்தக்குரலில் சொல்லி தனது நண்பர் பிரியதர்ஷனின் படத்தை சுவராஸ்யத்துடன்  துவக்கி வைத்திருக்கிறார்  நம்ம லாலேட்டன்.. எம்.ஜி.ஸ்ரீகுமாரின் இசையும் திவாகர் மணியின் ஒளிப்பதிவும் கதைக்கு வலுவூட்டுகின்றன.

ஆள் மாறாட்டம் என்றாலே சில லாஜிக்குகள் மிஸ்ஸாகும் தானே… அது இதிலும் இருந்தாலும், காமெடி படத்தில் லாஜிக் எதுக்குன்னேன்..? ஒரு லாட்டரியால் கிராமத்து மனிதர்களின் மனம், நொடியில் எப்படி எப்படியெல்லாம் மாறுகிறது என்பதை ஜெயசூர்யாவை ஊர் மக்கள் அடிக்கும் ஒரு காட்சியிலேயே விளக்கிவிடுகிறார் பிரியதர்ஷன்..

சூப்பர் ஹீரோ கதையில்லை.. லவ், ரொமான்ஸ் படமும் இல்லை.. ஆனால் காமெடி… அது ஒன்றே படத்தை தாங்கி நிற்கிறது.. பிரியதர்ஷன் சார்.. இதை தமிழ்ல எப்போ ரீமேக் பண்ணப்போறீங்க..? வி ஆர் வெயிட்டிங்…

 

அனூப் மேனன்அம்பிகாஇன்னொசன்ட்எம்.ஜி.ஸ்ரீகுமார்சுகன்யாசோனாஜெயசூர்யாநெடுமுடி வேணுபியாபிரியதர்ஷன்மம்முக்கோயாமோகன்லால்ஹரிஸ்ரீ அசோகன்