’ஆலகாலம்’ விமர்சனம்

நடிகர்கள் : ஜெயகிருஷ்ணா, சாந்தினி, ஈஸ்வரி ராவ், தீபா சங்கர், தங்கதுரை, சிசஸ் மனோகர்
இசை : என்.ஆர்.ரகுநந்தன்
ஒளிப்பதிவு : க.சத்யராஜ்
இயக்கம் : ஜெயகிருஷ்ணா
தயாரிப்பு : ஜெயகிருஷ்ணா

கூலி வேலை செய்யும் விதவைத்தாயான ஈஸ்வரி ராவ், தனது மகன் நாயகன் ஜெயகிருஷ்ணாவை பெரிய படிப்பு படிக்க வைத்து ஆளாக்க வேண்டும் என்பதற்காக கடுமையாக உழைக்கிறார். அம்மாவின் லட்சியத்திற்கு ஏற்ப நாயகன் ஜெயகிருஷ்ணாவும் நன்றாக படிப்பதோடு, சென்னையில் உள்ள பெரிய பொறியியல் கல்லூரியில் சேர்ந்து படிக்கவும் செய்கிறார். ஜெயகிருஷ்ணாவின் ஒழுக்கம் மற்றும் படிப்பு ஆகியவற்றைப் பார்த்து சக மாணவியான நாயகி சாந்தினிக்கு அவர் மீது காதல் ஏற்பட அந்த காதலை அவரிடம் தெரிவிக்கிறார். சாந்தினியின் காதலை ஜெயகிருஷ்ணாவும் ஏற்றுக்கொள்ள, இவர்களின் காதலைப் பார்த்து கடுப்பாகும் சக மாணவன், இவர்களை பிரிப்பதற்காக திட்டம் போட, அதன் விளைவாக ஜெயகிருஷ்ணாவும், சாந்தினியும் கல்லூரியில் இருந்து வெளியேற்றப்படுகிறார்கள்.

கல்லூரியில் இருந்து வெளியேறிய சாந்தினியும், ஜெயகிருஷ்ணாவும் திருமணம் செய்துக்கொள்ள, படிப்பு பறிபோன விசயம் அம்மாவுக்கு தெரிந்தால் விபரீதமாகிவிடும் என்று ஜெயகிருஷ்ணா பயப்படுகிறார். அவருக்கு தைரியமும், தன்னம்பிக்கையும் கொடுக்கும் சாந்தினி, படிப்பு இல்லை என்றால் என்ன? எதாவது வேலை செய்து, அதன் மூலம் ஒரு தொழில் தொடங்கி வாழ்க்கையில் முன்னேறிய பிறகு அம்மாவிடம் விசயத்தை சொல்லி சமாதானப்படுத்தலாம் என்று சொகிறார். அதன்படி, கிடைத்த வேலையை செய்ய முடிவு செய்யும் ஜெயகிருஷ்ணா, குடுப்பழக்கத்திற்கு அடிமையாக, அதன் பிறகு அவரது வாழ்க்கை எப்படி திசை மாறியது, அவரது அம்மாவின் கனவு நிறைவேறியதா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் ஜெயகிருஷ்ணா, எழுதி இயக்கி தயாரிக்கவும் செய்திருக்கிறார். முதல் படத்திலேயே மிக அழுத்தமான கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து ரசிகர்களில் கைதட்டலை பெற்றிருக்கிறார். கல்லூரி மாணவராகவும், மதுப்பழக்கத்திற்கு அடிமையானவராகவும் இரண்டு வித்தியாசமான வேடங்களில் திறம்பட நடித்திருப்பவருக்கு விருதுகள் பல கிடைப்பது உறுதி.

நாயகியாக நடித்திருக்கும் சாந்தினி, கல்லூரி மாணவியாகவும், மனைவியாகவும் கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்.

நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் ஈஸ்வரி ராவ், மகன் மீது வைத்திருந்த கனவு சிதைந்து போனதை பார்த்து கலங்குவதை விட, தனது மகனின் நிலையைக் கண்டு அதிர்ச்சியடைவதும், அவரது நிலைக்கு காரணமான சமூகத்தின் மீது கொண்ட கோபத்தை வெளிப்படும் காட்சியில் அழுத்தமாகவும், ஆக்ரோஷமாகவும் நடித்து அப்ளாஷ் பெறுகிறார்.

தீபா சங்கர், தங்கதுரை, சிசர் மனோகர் உள்ளிட்ட படத்தில் நடித்திருக்கும் நற்ற நட்சத்திரங்கள் திரைக்கதை ஓட்டத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்கள்.

கா.சத்தியராஜின் ஒளிப்பதிவு மற்றும் என்.ஆர்.ரகுநந்தனின் இசை இரண்டு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. பாடல்கள் மற்றும் பின்னணி இசை கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.

நாயகனாக நடித்ததோடு மட்டும் அல்லாமல் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராக சமூகத்திற்கு மிக அவசியமான ஒரு படத்தை ஜெயகிருஷ்ணா கொடுத்திருக்கிறார். படத்தின் மூலம் அவர் சொல்ல வரும் கருத்து பிரசாரம் செய்வது போன்று இருந்தாலும், அதை ரசிகர்கள் மனதில் அழுத்தமாக பதிய வைத்து யோசிக்க வைக்கிறார்.

படிக்கும் வயதில் படிப்பதை மட்டுமே பார்க்காமல் தேவையில்லாத சில விசயங்களில் நாட்டம் கொள்வதால், வஞ்சம், சூழ்சி போன்றவற்றில் சிக்கி, கொடிய விஷமான மதுவுக்கு அடிமையாகும் ஒரு இளைஞரின் வாழ்க்கை சிதைவையும், ஒரு தாயின் சிதைந்து போன கனவையும் உன்னத படைப்பாக கொடுத்திருக்கும் ஜெயகிருஷ்ணாவை நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராக கோடம்பாக்கம் நிச்சயம் கொண்டாடம்.

ரேட்டிங் 3.5/5

aalakalam reviewChandinieshwari raojayakrishnatamil movie aalakalam reviewtamilk film aalakalam reviewஆலகாலம் விமர்சனம்ஈஸ்வரி ராவ்சாந்தினிஜெயகிருஷ்ணாதமிழ்ப் படம் ஆலகாலம் விமர்சனம்