7 நாட்களுக்குள் நடக்கும் கதை என்பதை டைட்டிலே சொல்லிவிடுகிறது.. என்னதான் படத்தின் கதை..?
முதல்வரையே தனது கை பொம்மையாக ஆட்டிவைக்கும் அளவுக்கு சக்தி வாய்ந்த தொழிலதிபர் பிரபு. அவரது மகன் ராஜீவ் பிள்ளை.. அவரது வளர்ப்பு மகன் கணேஷ் வெங்கட்ராமன் சைபர் க்ரைம் ஆபீசர்.. தனது மகன் ராஜீவுக்கு கோடீஸ்வரர் வீட்டு பெண்ணை நிச்சயம் செய்கிறார் பிரபு.. ஆனால் பல பெண்களுடன் நட்புகொண்ட தீராத விளையாட்டு பிள்ளையான ராஜீவ் சம்பந்தப்பட்ட சிடி ஒன்று தன்னிடம் இருப்பதாக பிரபுவுக்கு மர்ம நபரிடம் இருந்து மிரட்டல் வருகிறது.
திருமணத்திற்கு ஏழு நாட்களே இருக்கும் நிலையில் தனது வளர்ப்பு மகனிடம் இந்த சிக்கலை தீர்க்கும் பொறுப்பை ஒப்படைக்கிறார் பிரபு.. சிடி இருப்பதாக மிரட்டிய மர்ம நபர், கணேஷ் வெங்கட்ராமன் தன்னை நெருங்குவது கண்டு தன்னிடம் உள்ள சிடியை நண்பன் ஷக்தி வீட்டிற்குள் தூக்கிப்போட்டு விட்டு தப்புகிறார். ஆனால் கணேஷ் வெங்கட்ராமனின் துரத்தலில் மாடியில் இருந்து குதித்து உயிரை விடுகிறார்..
அவர் தூக்கிப்போட்ட சிடி சக்தியின் வீட்டிற்குள் விழுவதற்கு பதிலாக, எதிர்வீட்டில் சக்தியிடம் எந்நேரமும் சண்டக்கோழியாக சிலுப்பும் நிகிஷா படேல் வீட்டுக்குள் விழுகிறது.. அதனுள் இருக்கும் விபரம் என்னவென்றே தெரியாமல் வெவ்வேறு இடங்களுக்கு மாறுகிறது அந்த சிடி. இந்த நிலையில் சக்தியையும் நிகிஷாவையும் சிடிக்காக துரத்துகிறது கணேஷ் வெங்கட்ராமனின் போலீஸ் கேங்…
அந்த சிடியை கணேஷ் வெங்கட்ராமன் ஏழு நாட்களுக்குள் கைப்பற்றினாரா..? அந்த சிடியில் அப்படி என்னதான் இருந்தது..? குறித்தபடி மகனின் திருமணத்தை நடத்தினாரா பிரபு..? என்கிற கேள்விகளுக்கு சில சுவாரஸ்ய முடிச்சுகளுடன் விடைசொல்கிறது மீதிக்கதை.
தமிழ் சினிமாவில் பென் டிரைவ், சிடி என பல சஸ்பென்ஸ் திரில்லர் படங்கள் வந்திருந்தாலும், கொஞ்சம் புத்திசாலித்தனமான காட்சிகளால் படத்தை வித்தியாசப்படுத்தி இருக்கிறார்கள்… நாயகன் ஷக்தி ஓடுகிறார்.. ஓடுகிறார்.. அப்படி ஓடுகிறார்.. கூடவே கதாநாயகி நிகிஷா பட்டேலையும் இழுத்துக்கொண்டு. ஆனால் சென்டிமென்ட் மற்றும் காமெடி காட்சிகளில் ஒரு நாயையும் துணைக்கு சேர்த்துக்கொண்டு கலகலப்பூட்டுகிறார்.
ஹீரோயின் நிகிஷா பட்டேலுக்கு சக்தியிடம் முரண்டு பிடித்து சண்டக்கோழியாக சிலுப்புவது தான் மெயின் வேலை.. ஆனால் அப்படி சண்டை போட்ட பாவத்திற்கு இடைவேளைக்கு பிறகு அவரை நல்ல ரன்னிங் ரேஸ் ஓடவிட்டுள்ளார் இயக்குனர். அதிலும் அவரை கலாய்க்கும் பிளாக்கி என்ற நாய் பேசும் வசனங்கள் சிரிப்பு வெடி தான் என்றாலும் அதற்கு வி.எஸ்.ராகவன் குரலில் மைண்ட் வாய் கொடுத்துள்ளது கொஞ்சம் ஓவர்தான்.
இந்த படத்தில் காக்கி யூனிபார்ம் போடாமல், கோட் சூட்டில் ஸ்டைலாக வலம் வரும் போலீஸ் அதிகாரி கணேஷ் வெங்கட்ராம் கதாநாயகனை விட மிக அழுத்தமான கேரக்டரில் நடித்துள்ளார்.. வளர்ப்பு தந்தையின் மானத்தை காப்பாற்ற அவர் எந்த எல்லைக்கும் செல்ல துணிவது செஞ்சோற்று கடன் தீர்க்கும் நெகிழ்ச்சியான தருணம். மகனுக்காக உருகும், அதேசமயம் வளர்ப்பு மகனையும் விட்டுத்தராத கோடீஸ்வரர் கேரக்டரில் பிரபு செம பிட்டாக பொருந்துகிறார்.
கோடீஸ்வரனின் மகனாக காட்சிக்கு காட்சி பணத்திமிரை காட்டும் கேரக்டரில் ராஜீவ் பிள்ளை சரியான தேர்வென தன்னை நிரூபிக்கிறார். நாசர், எம்.எஸ்.பாஸ்கர் என்று மூத்த நடிகர்கள் தங்களது பணியை சிறப்பாக செய்து படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள். சின்னி ஜெயந்தும் நீண்ட நாள் கழித்து தலைகாட்டி இருக்கிறார். கொஞ்ச நேரமே வந்தாலும் அங்கனா ராய் மனதில் நிற்கிறார்.
விஷால் சந்திரசேகரின் இசையில் பாடல்களை காட்டிலும் பின்னணி இசைக்கு பாஸ் மார்க் போடலாம். எம்.எஸ்.பிரபுவின் ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் பிரம்மாண்டமாக உள்ளது. அறிமுக இயக்குநர் கெளதம் வி.ஆர், திருப்பங்களுடன் கூடிய திரைக்கதை மூலம் படத்தை சுவாரஸ்யமாக நகர்த்த முயற்சித்திருக்கிறார்.. அந்த சிடி அடிக்கடி தேவையில்லாமல் இடம் மாறும் காட்சிகளும், ஷக்தி-நிகிஷா அடிக்கடி சண்டையிட்டுக்கொள்ளும் காட்சிகள் தான் சற்றே அலுப்பை தருகின்றன.
ஏகப்பட்ட திருப்பங்களுடன் மிக நேர்மையான க்ளைமாக்ஸ் வைத்து ரசிகர்களை ஆசுவாசப்படுத்தி அனுப்புகிறார் இயக்குனர் கௌதம் வி.ஆர்.
Attachments area
Click here to Reply or Forward
11.46 GB (76%) of 15 GB used
Manage
Terms – Privacy
Last account activity: 1 minute ago
Details