விஞ்ஞானி சேதுராமன் (சூர்யா) கடந்த காலம் மற்றும் எதிர்காலத்திற்கு செல்ல உதவும் கடிகாரம் ஒன்றை கண்டுபிடிக்கிறார். ஆனால் அவர்மீது தீவிர பகை கொண்ட அவரது சகோதரன் ஆத்ரேயா (இன்னொரு சூர்யா), கடிகாரத்தை கைப்பற்றும் முயற்சியில் சேதுராமனையும் அவரது மனைவி நித்யா மேனனையும் கொல்கிறார்..
ஆனால் தப்பிக்கும் சேதுராமன், தனது கடிகாரத்துடன் குழந்தையையும் சேர்த்து ரயிலில் பயணிக்கும் சரண்யாவிடம் கொடுத்துவிட்டு உயிர்விடுகிறார்.. அதன்பின் ஏற்படும் விபத்தில் ஆத்ரேயா கோமா நிலைக்கு போகிறார். சரண்யாவால் வளர்க்கப்பட்டு 26 வருடங்கள் கழித்து இளைஞனாகும் மணி (இதுவும் சூர்யா தான்) வாட்ச் மெக்கானிக்காக மாறுகிறார்.
ஒரு கட்டத்தில் அவரிடம் இருக்கும் அதிசய கடிகாரத்தின் மகிமை அவருக்கு தெரியவர, தான் காதலிக்கும் சமந்தாவை ஆச்சர்யப்படுத்துவதற்கு அவ்வப்போது அதை உபயோகிக்கிறார் மணி (சூர்யா). இந்தநிலையில் கோமாவில் இருந்து கண்விழிக்கும் வயதான ஆத்ரேயா, தனது உதவியாளர் மித்ரன் மூலமாக அந்த வாட்ச் குறித்த விளம்பரம் கொடுத்து, பரிசு தருவதாக அறிவிக்க சொல்கிறார்..
அதைப்பார்த்து பரிசுக்கு ஆசைப்பட்ட தனது நண்பன் சத்யனுக்காக தன்னிடம் உள்ள அதேபோல டயூப்ளிகேட் கடிகாரம் ஒன்றை செய்து தருகிறார் சூர்யா (மணி). இதன்மூலம் சூர்யாவிடம் அந்த கடிகாரம் இருப்பதை உறுதிசெய்த ஆத்ரேயன் அவரை கொன்று கடிகாரத்தை அபகரிக்க முயற்சிக்கிறார். அது முடியாமல் போகவே குயுக்தியாக மாற்றுத்திட்டம் போடுகிறார்.. இறுதியில் அந்த கடிகாரம் யாருக்கு சொந்தமாகிறது..? யாரை அழித்தது.? யாரை வாழவைக்கிறது என்பது க்ளைமாக்ஸ்.
டைம் மெஷின் என்பதுதான் படத்தின் அடித்தளம்.. அதைமட்டும் ஆரம்பத்தில் புரிந்துகொண்டால் பின்னர் படம் முழுவதும் கதையுடன் பயணிப்பதில் எந்த சிரமமும் ஏற்படாது.. ஏற்கனவே ‘நேற்று இன்று நாளை’ பட புண்ணியத்தில் ரசிகர்களுக்கு இந்த டைம் மெஷின்’ கணக்கு அத்துப்படி ஆகிவிட்டதால் இந்த முழுப்படத்தையும் எந்தவித குழப்பமும் இன்றி ஜாலியாக என்ஜாய் பண்ணி பார்க்க முடிகிறது..
மூன்று விதமான கேரக்டர்களில் வரும் சூர்யா மூன்றையும் ஒன்றுக்கொன்று துளிகூட சம்பந்தமில்லாமல் தனது வித்தியாசமான நடிப்பால் வேறுபடுத்தி இருக்கிறார். குறிப்பாக ஆத்ரேயா என்னும் வில்லன் கதாபாத்திரத்தில் இதுவரை நாம் பாராத முகம் காட்டி அசரவைக்கிறார்.. அதேசமயம் இளமை துள்ளும் சூர்யா கடிகாரம் கிடைத்தவுடன் சமந்தாவுடன் பண்ணும் காதல் குறும்புகள் ஜில் ஜில் ரகம்.
ஷட்டரில் தொங்க ஆரம்பிப்பதில் இருந்து அவ்வப்போது தன் பங்கிற்கு சிரிக்கவும் வைக்கும் சமந்தா, ரொமான்ஸிலும் சோடை போகவில்லை.. அதிலும் ரொமான்ஸ்போபியாவால் அவர் அவஸ்தைப்படுவது செம கலாட்டா.. பாந்தமான இன்னொரு கதாநாயகியாக நித்யா மேனன்.. ஆரம்பத்தில் கொஞ்ச நேரமே வந்து நம்மை ஏமாற்றும் இவர் கிளைமாக்ஸில் அதற்கு பரிகாரம் தேடிக்கொள்கிறார்.
வழக்கமான அம்மாவாக இல்லாமல் அழுத்தமான கேரக்டர் பின்னணியுடன் நடித்திருக்கும் சரண்யா, தனது பிளாஸ்பேக் கதை சொல்லும்போது சூர்யாவை மட்டுமல்ல, நம்மையும் கண்கலங்க வைக்கிறார். வில்லன் ஆத்ரேயாவின் வலதுகையாக படம் முழுவதும் வரும் விசுவாசி மித்ரனாக நடித்திருக்கும் அஜய்குமாருக்கு தனது திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அவரும் அதை சரியாக பயன்படுத்தியுள்ளார்..
சமந்தாவின் குடும்பம் வெள்ளிக்கிழமைகளில் மௌன விரதம் இருப்பது, சத்யன் பல்பு வாங்கும் காமெடி, தவிர அபூர்வ கடிகாரத்தை வைத்துக்கொண்டு சின்னதாக சூர்யா மூட்டும் கிச்சுகிச்சுக்கள் என படம் நெடுக்க சிரித்து மகிழ ஏராளமான இடங்கள் உண்டு..
ஹாலிவுட் தரத்திற்கு நிகரான திருநாவுக்கரசின் மிரட்டலான ஒளிப்பதிவும், படத்தில் மாறும் காலத்துக்கேற்ப, காட்சிகளின் பின்னணியில் ஊடறுத்து ஓடும் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசையும் நம் கண்களை கட்டிப்போடுகின்றன. ஆராரோ, ஆற்றலரசே, மெய்நிகரா பாடல்கள் படத்திற்கு இன்னும் பலம் சேர்க்கின்றன. உற்சாகமூட்டுகின்றன. படத்தின் ஆர்ட் டைரக்டர்களான அமித்ராய், சுபத்ரா சக்கரவர்த்தி இருவரும் நான்கு படங்களுக்காண உழைப்பை இதில் கொடுத்துள்ளார்கள். படத்தை பார்க்கும்போது உங்களுக்கே புரியும்.
டைம் மெஷின் கதை என்றாலும் அதில் துளியும் குழப்பம் ஏற்படாதவாறு, க்ளைமாக்சிலும் அர்த்தமுள்ள ட்விஸ்ட் வைத்து படத்தை முடித்துள்ள இயக்குனர் விக்ரம் கே.குமார், நம்மை ஏமாற்றாமல் சம்மருக்கேற்ற ஒரு அருமையான பொழுதுபோக்கு படத்தை தந்துள்ளார்.