1பந்து 4ரன் 1விக்கெட் – விமர்சனம்

 

நாயகன் வினய்கிருஷ்ணா, தனது காதலி ஹாசிகா தத்துடன் ஊரைவிட்டு ஓடி சென்னைக்கு வருகிறார். அவருக்கு கோவளத்தில் பங்களா ஒன்றில் வேலைபார்க்கும் லொள்ளுசபா ஜீவா அடைக்கலம் தருவதுடன், இரண்டு நாட்கள் கழித்து அவர்களது பதிவுத்திருமணத்தை நடத்தி வைப்பதாக சொல்கிறார்.

அப்போது ஜாலியாக பொழுதை கழிக்க கிரிக்கெட் விளையாடுகிறார்கள். விளையாட்டின் இறுதியில் 1பந்து இருக்கும்போது 4ரன் எடுக்கவேண்டும் அல்லது 1விக்கெட் விழ வேண்டும் என்கிற  சூழ்நிலையில் (டைட்டில் ஓகேவா) பந்து வீசப்படுகிறது. அது அந்த பங்களாவில் இருக்கும் பேயை தட்டி எழுப்பி விடுகிறது.

ஹாசிகாவை பிடிக்கும் பேய் வினய்கிருஷ்ணா, ஜீவா மற்றும் வேலைக்காரன் மூவரையும் அடித்து துவைக்கிறது.. அந்த பங்களாவிற்கு ஹாசிகாவை தேடிவரும் சென்றாயன், பின் தொடர்ந்து வரும் போலீஸ் அனைவரையும் சாத்து சாத்தென்று சாத்தி பங்களாவை விட்டு வெளியேறாமல் தடுக்கிறது.

எப்படியும் பேயாக மாறுவதற்கு ஒரு காரணம் இருக்கும் அல்லவா.? அதை தெரிந்துகொள்ள ஹீரோ முயற்சிக்கிறார். அது என்ன காரணம், அதை கண்டுபிடித்து பேயிடம் இருந்து அனைவரும் மீண்டார்களா என்பதை வித்தியாசமான(!) கோணத்தில் சொல்லியிருக்கிறார் இயக்குனர் வீரா.

இந்த மாதிரி படங்களுக்கென்றே ரெடிமேடாக உருவாக்கப்பட்டவர் போல கச்சிதமாக பொருந்துகிறார் நாயகன் வினய்கிருஷ்ணா. கதாநாயகி ஹாசிகா தத்திற்கு பேய் வேஷம் (தான்) நன்றாக செட்டாகிறது. திகிலாக நகரும் கதையில் காமெடி கும்மி அடிக்க முயற்சிக்கிறார்கள் லொள்ளு ஜீவாவும் சென்றாயனும்..

பிளாஸ்பேக்கில் வரும் ஸ்ரீமன்-மதுமிதா ஸ்டோரியும் அந்த தற்கொலை எபிசோடும் தமிழ்சினிமா இதுவரை காணாதது. இதை வைத்துக்கொண்டுதான் முழுப்படத்தையும் வளர்த்திருக்கிறார் இயக்குனர் வீரா. பங்களாவிற்குள் சுற்றிவரும் வேலையை சரவணனின் கேமராவும் அதற்கு ஒத்து ஊதும் வேலையை உமேஷின் இசையும் சரியாக செய்திருக்கின்றன.

தற்கொலைக்கு இதெல்லாம் காரணமாகுமா என வித்தியாசமாக(!) சிந்தித்து அதில் பேய்க்கதையை உருவாக்கி, தமிழ்சினிமாவை  அடுத்தகட்டத்தை(!) நோக்கி நகர்த்தும் விதமாக படமாக்கியிருக்கும் இயக்குனர் வீராவை… என்ன சொல்லி பாராட்டுவதென்றே தெரியவில்லை. அந்த அனுபவம் படம் பார்த்தால் மட்டுமே கிடைக்கும்.

1பந்து 4ரன் 1விக்கெட்1பந்து 4ரன் 1விக்கெட் – விமர்சனம்மதுமிதாலொள்ளுசபா ஜீவாவினய்கிருஷ்ணாவீராஸ்ரீமன்ஹாசிகா தத்