நடிகர்கள் : தம்பி ராமையா, சமுத்திரக்கனி, ஸ்ரீரஞ்சனி, சஞ்சிதா ஷெட்டி, முனிஸ்காந்த், தீபக் மற்றும் பலர்
இசை : சி.சத்யா
ஒளிப்பதிவு : என்.கே.ஏகாம்பரம்
இயக்கம் : சமுத்திரக்கனி
தயாரிப்பு : அபிராமி ராமநாதன்
பெரிய நிறுவனம் ஒன்றில் உயரதிகாரியாக பதவி, அழகான மனைவி, இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன், ஆடம்பரமான வீடு, கார் என வசதியாக வாழும் தம்பி ராமையா, தனது 25 வது திருமண நாளை கொண்டாடுவதற்கு முந்தைய இரவு விபத்தில் சிக்கி உயிரிழக்கிறார். ஆனால், மரணத்தில் இருந்து மீண்டு, குறிப்பிட்ட நாட்கள் உயிருடன் வாழ்வதற்கான வாய்ப்பு அவருக்கு கிடைக்கிறது. அதன் பிறகு என்ன நடக்கிறது? என்பது தான் ‘வினோதய சித்தம்’ படத்தின் கதை.
ஒரு முழுப்படத்தையும் தன் தோளில் சுமக்கும் முதன்மை கதாப்பாத்திரத்தில் தம்பி ராமையா ஏறி அடித்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். உடல்மொழி மற்றும் வசன உச்சரிப்பு என அனைத்திலும் பட்டையை கிளப்பியிருப்பவர், தனது பேவரைட்டான மைண்ட் வாய்ஸ் மூலம் படம் பார்ப்பவர்களை கைதட்டி சிரிக்க வைக்கிறார்.
படத்தின் முக்கிய கதாப்பாத்திரம் ஒன்றில் நடித்திருக்கும் சமுத்திரக்கனி, எந்தவித அலட்டல் இல்லாமல் அசால்டாக நடித்து அமர்க்களப்படுத்துகிறார். உதடு அசைவது கூட தெரியாதபடி அவர் பேசும் வசனங்களில் உள்ள ஒவ்வொரு வார்த்தைகளும் ஆழமாகவும், குழப்பமான மனநிலையில் இருப்பவர்களை தெளிவுப்படுத்தும் வகையிலும் இருக்கிறது.
சஞ்சிதா ஷெட்டி, ஸ்ரீரஞ்சனி, தீபக், மணிகண்டன், ஜெயபிரகாஷ், ஷெர்லினா, முனிஸ்காந்த் உள்ளிட்ட அனைவரும் தங்களது வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.
ஸ்ரீவத்சனின் எளிமையான கதையை, விஜியின் கூர்மையான மற்றும் ஆழமான வசனங்கள், படத்தை எளியவரிடம் கொண்டு சேர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
சத்யாவின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்க்கிறது. என்.கே.ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவு கதையுடன் பயணித்துள்ளது.
பல வருடங்களுக்கு முன்பு வெளியான மேடை நாடகம் ஒன்றின் கதைக்கு திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கும் சமுத்திரக்கனி, சினிமாவுக்கான மிக சுவாரஸ்யமான முடிச்சைக் கொண்டு திரைக்கதை அமைத்திருப்பதும், கிடைக்கும் வாய்ப்புகளில் நல்ல கருத்துக்களை பேசுவதும், அவருடைய இமேஜுக்கு பலம் சேர்த்துள்ளது.
நம் வாழ்க்கையில் நடப்பவை அனைத்தும், ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டவை என்றும், வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள் அனைத்துக்கும் ஒரு பின் காரணம் இருக்கிறது, என்றும் சொல்லும் இத்திரைப்படம், சொல்லியிருக்கும் கருத்துக்களை அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும்படி இயக்குநர் சமுத்திரக்கனி, திரைக்கதை மற்றும் காட்சிகளை வடிவமைத்திருக்கிறார்.
அதே சமயம், இப்படத்தின் மையக்கரு உழைப்பு மற்றும் முயற்சியின் மீது மட்டுமே நம்பிக்கை வைத்து பயணிப்பவர்களால் ஏற்றுக்கொள்ள கூடியது அல்ல.