நடிகர்கள் : சமுத்திரக்கனி, ஹரி கிருஷ்ணன், இனியா, ஆண்டனி, கவிதா பாரதி மற்றும் பலர்
ஒளிப்பதிவு : பிரதீப் காளிராஜா
இசை : கோவிந்த் வசந்தா
தயாரிப்பு : பா.இரஞ்சித், அபையானந்த் சிங், பியுஷ் சிங், அதிதி ஆனந்த்
இயக்கம் : பிராங்ளின் ஜேக்கப்
திருச்சி மாவட்டத்தில் உள்ள காவல் நிலையம் ஒன்றில் காவலராக பணியாற்றும் சமுத்திரக்கனி, காவலர்களுக்கு தனி சங்கம் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்கிறார். இதனால் உயர் அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகும் அவர் சென்னைக்கு பணி மாற்றம் செய்யப்படுகிறார். அதேபோல், திருச்சி மாவட்டத்தில் உள்ள கிராமத்தை சேர்ந்த ஹரி கிருஷ்ணன் சென்னை பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி படித்துக்கொண்டிருக்கிறார்.
சமுத்திரக்கனி சென்னையில் காவலராக பணியில் சேரும் காவல் நிலையத்தை சேர்ந்த இன்ஸ்பெக்டர் மற்றும் காவலர் குழுவினர் ஹரி கிருஷ்ணனை கைது செய்வதோடு, அவர் மீது பொய்யான வழக்கு ஒன்றை பதிவு செய்ய, அதனால் ஹரி கிருஷ்ணனின் உயிருக்கே ஆபத்து ஏற்படுகிறது. மனசாட்சிபடி நடக்கும் காவலரான சமுத்திரக்கனி, ஹரி கிருஷ்ணனை காப்பாற்றும் முயற்சியில் இறங்க, அதில் அவர் வெற்றி பெற்றாரா இல்லையா, என்பதே படத்தின் மீதிக்கதை.
காவல்துறையில் இருக்கும் கடைநிலை காவலர்களை உயர் அதிகாரிகள் ஒடுக்குவதும், காவலர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் மற்றும் அதன் பின்னணி குறித்தும் பேசப்பட்டிருக்கும் இப்படத்தின் களம் மற்றும் கதை சொன்ன விதம் இதுவரை தமிழ் சினிமாவில் வராத போலீஸ் திரைப்படமாக உள்ளது.
பணி ஓய்வு பெற சில மாதங்களே இருக்கும் வயதான காவலர் வேடத்தில் சமுத்திரக்கனி கதையின் நாயகனாக நடித்து, முழு படத்தையும் தன் தோளில் சுமந்திருக்கிறார். இதுவரை பார்க்காத ஒரு சமுத்திரக்கனியை அவரது நடிப்பில் பார்க்க முடிகிறது.
கல்லூரி மாணவராக நடித்திருக்கும் ஹரி கிருஷ்ணன், காவல்துறையின் வஞ்சக வலையில் சிக்கி தவிக்கும் காட்சிகள் நம்மை பதற வைக்கிறது.
ஹரி கிருஷ்ணனின் அண்ணன் வேடத்தில் நடித்திருக்கும் இயக்குநர் சுப்பிரமணிய சிவா, தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக உயர்வது நிச்சயம். தன் தம்பியை, ‘என் பிள்ளையை பாருங்க…” என்று சொல்லி கதறும் காட்சிகளில் படம் பார்ப்பவர்களையும் கண்ணீர் விட வைக்கிறது அவரது நடிப்பு.
சில காட்சிகளில் வந்தாலும், ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடிக்கும் இனியா, மன அழுத்தத்தில் தவிக்கும் காவலர்களின் மன குமுறலாக வருகிறார்.
மேற்குத்தொடர்ச்சி மலை பட புகழ் ஆண்டனியின் கதாப்பாத்திரம் படத்தின் விறுவிறுப்பை கூட்டுவதோடு, சிரிக்கவும் வைத்து சிந்திக்கவும் வைக்கிறது.
ஒரு காட்சியில் வரும் போஸ் வெங்கட், போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் கவிதா பாரதி, போலீஸ் உயர் அதிகாரியாக நடித்திருக்கும் நடிகர் என படத்தில் நடித்திருப்பவர்கள் அனைவரும் பல மாதங்கள் பயிற்சி செய்து நடித்தது போல் மிக இயல்பாக நடித்திருக்கிறார்கள்.
பிரதீப் காளிராஜாவின் ஒளிப்பதிவு கதாப்பாத்திரங்களின் இயல்பு தன்மை மாறாமல் காட்சிகளை கையாண்டிருக்கிறது.
கோவிந்த் வசந்தாவின் இசையில் பாடல்கள் ரசிக்க வைப்பதோடு, சிந்திக்கவும் வைக்கிறது. பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் பயணித்துள்ளது.
படத்தை எழுதி இயக்கியிருக்கும் பிராங்ளின் ஜேக்கப், காவல்துறையில் இருக்கும் சாதி ஒடுக்குமுறையை தைரியமாக சுட்டிக்காட்டியிருப்பதோடு, காவலர்களின் தற்கொலையை தடுப்பதற்கான தீர்வையும் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.
படத்தின் சில காட்சிகள் வேறு சில படங்களை நினைவுப்படுத்தினாலும், இயக்குநர் பிராங்ளின் ஜேக்கப் எடுத்துக்கொண்ட களமும், அதை கையாண்ட விதமும் பாராட்டும்படி உள்ளது.
மொத்தத்தில் ‘ரைட்டர்’ நல்ல காவலர்களை உருவாக்கும்.