நடிகர்கள் ; வசந்த் ரவி, பாரதிராஜா, ரோஹினி, ரவீனா ரவி மற்றும் பலர்
ஒளிப்பதிவு : ஷ்ரேயாஸ் கிருஷ்ணன்
இசை : தர்புகா சிவா
தயாரிப்பு : சி.ஆர்.மனோஜ்
இயக்கம் : அருண் மாதேஸ்வரன்
17 வருடங்கள் சிறையில் தண்டனை அனுபவித்துவிட்டு வரும் நாயகன் வசந்த் ரவியின் கண் முன் அவரின் ரத்த சொந்தங்களை கொலை செய்ய பாரதிராஜா துடிக்கிறார். அவரிடம் இருந்து தனக்கு சொந்தம் என்று சொல்லிக்கொள்ள இருக்கும் ஒரே ஒரு உறவை காப்பாற்ற வசந்த் ரவி ஓடுகிறார். இறுதியில் என்ன நடந்தது என்பதை ரத்தமும், சதையுமாக சொல்வது தான் ‘ராக்கி’ படத்தின் கதை.
பல படங்களில் சொல்லப்பட்ட பழமையான பழிவாங்கும் தாதாஹிஷம் தான் கதை என்றாலும், அதை வித்தியாசமான முறையில் சொல்லியிருக்கிறார்கள்.
நாயகனாக நடித்திருக்கும் வசந்த் ரவி, பேசுவது குறைவு என்றாலும், தனது கண்களில் கோபத்தையும், செயலில் வீரத்தையும் வெளிக்காட்டி எதிரிகளை வீழ்த்தும் காட்சிகளில் அமர்க்களப்படுத்துகிறார்.
வில்லனாக நடித்திருக்கும் பாரதிராஜா, அலட்டிக்கொள்ளாமல் நடித்தாலும், தனது நடிப்பின் மூலமாக நடுங்க வைக்கும் வில்லனாக வலம் வந்திருக்கிறார்.
ரவீனா ரவி, பாரதிராவிடம் அடியாட்களாக இருப்பவர்கள் என படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.
ஷ்ரேயாஸ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவு சாதாரண காட்சிகளை கூட பிரமாண்டமாக காட்டும் வித்தையை கச்சிதமாக செய்திருக்கிறது. படம் முழுவதும் பயன்படுத்தப்பட்டிருக்கும் டோன் நம்மையும் கதாப்பாத்திரங்களுடன் பயணிக்க வைக்கிறது.
தர்புகா சிவாவின் இசையில் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் பயணித்திருக்கிறது. பல இடங்களில் சத்தங்கள் இன்றி மவுனம் மூலமாகவே காட்சிகளை பயணிக்க வைத்து, கதாப்பாத்திரங்களின் உணர்வுகளை படம் பார்ப்பவர்களிடம் கடத்திவிடுகிறார் இசையமைப்பாளர் தர்புகா சிவா.
சாதாரண கதை என்றாலும், அந்த கதையை சொல்லும் விதத்திலும், காட்சிகளை கையாண்ட விதத்திலும் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் கையாண்டிருக்கும் முறை புதியதாகவும், வித்தியாசமாகவும் இருக்கிறது.
காட்சிகளை மெதுவாக நகர்த்துவது மற்றும் குறிப்பிட்ட சில காட்சிகளின் நீளம் அதிகமாக இருப்பது, சற்று சலிப்படைய செய்தாலும், நாயகனின் கொடூரமான கொலைகளும், அதிரடி சண்டைக்காட்சிகளும் படத்தை ரசிக்க வைக்கிறது. அதிலும் இறுதிக் காட்சியில் தனி ஆளாக மிகப்பெரிய கூட்டத்தை வசந்த் ரவி எப்படி சமாளிக்கப் போகிறார், என்ற எதிர்ப்பார்ப்பு நம்மை சீட் நுணியில் உட்கார வைத்துவிடுகிறது.
மொத்தத்தில் ‘ராக்கி’ ரகளையான ரனகளம்