’பேட்டரி’ விமர்சனம்

நடிகர்கள் : செங்குட்டுவன், அம்மு அபிராமி, தீபக் ஷெட்டி, நாகேந்திர பிரசாத், அபிஷேக், எம்.எஸ்.பாஸ்கர், ராஜ்குமார், ஜார்ஜ் மரியன், மோனிகா, யோக் ஜேபி
இசை : சித்தார்த் விபின்
ஒளிப்பதிவு : கே.ஜி.வெங்கடேஷ்
தயாரிப்பு : சி. மாதையன்
இயக்கம் : மணிபாரதி

சப் இன்ஸ்பெக்டராக புதிதாக வேலைக்கு சேருகிறார் ஹீரோ செங்குட்டுவன். அவர் சேர்ந்த முதல் நாளே சென்னையில் ஒருவர் கொலை செய்யப்படுகிறார். அந்த கொலை பற்றி விசாரணை நடந்துக் கொண்டிருக்கும் போதே போலீஸ் இன்ஸ்பெக்டர் கொடூரமாக கொலை செய்யப்பட, அவரை தொடர்ந்து மேலும் ஒரு கொலை என கொலை சம்பவங்கள் தொடர்கிறது. இந்த கொலைகளை யார் செய்வது? எதற்காக செய்கிறார்கள்? என்பதை விவரிப்பது தான் படத்தின் கதை.

ஹீரோ செங்குட்டுவன் போலீஸ் கதாப்பாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்துவதோடு, அளவான நடிப்பு மூலம் கவர்கிறார். புதுமுகமாக இருந்தாலும் கதாப்பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்.

குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த அம்மு அபிராமி கதாநாயகியாக அறிமுகமாகியிருக்கிறார். அவரது கதாப்பாத்திரம் கதையுடன் பயணிப்பது போல் அமைக்கப்பட்டிருந்தாலும், படத்துடன் ஒட்டாமலே நகர்கிறது.

போலீஸ் அதிகாரிகளாக நடித்திருக்கும் யோக் ஜேபி, தீபக் ஷெட்டி ஆகியோர் போலீஸ் கதாப்பாத்திரத்திற்கு ஏற்ற கம்பீரத்தை தோற்றத்திலும், நடிப்பிலும் நேர்த்தியாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

அபிஷேக், நாகேந்திர பிரசாத், எம்.எஸ்.பாஸ்கர், சிறுமி மோனிகா என படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் கொடுத்த வேலையை குறை இல்லாமல் செய்திருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் சித்தார்த் விபினின் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. கே.ஜி.வெங்கடேஷின் ஒளிப்பதிவு படத்திற்கு பக்கபலமாக பயணித்துள்ளது.

மருத்துவத்துறையில் நடக்கும் மோசடியை கருவாக எடுத்துக்கொண்ட இயக்குநர் மணிபாரதி, பல திருப்பங்கள் நிறைந்த திரைக்கதை மூலம் சுவாரஸ்யமான க்ரைம் சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக கொடுத்திருக்கிறார்.

படத்தின் ஆரம்பத்திலேயே நம்மை கதைக்கு ஈர்த்து விடும் இயக்குநர் மணிபாரதி, அடுத்தடுத்த காட்சிகள் மூலம் நம்மை சீட் நுணியில் உட்கார வைத்து, அடுத்தது என்ன நடக்கும்? என்ற எதிர்ப்பார்ப்போடு படம் பார்க்க வைக்கிறார்.

ரேட்டிங் 3.5/5

battery film reviewbattery reviewkollywood movie reviewtamil film battery reviewtamil movie batter review