’பேச்சுலர்’ விமர்சனம்


நடிகர்கள் : ஜி.வி.பிரகாஷ் குமார், திவ்யபாரதி, முனிஸ்காந்த், மிஷ்கின், பகவதி பெருமாள்
இசை : சித்து குமார், திபு நினன் தாமஸ், ஏ.எச்.காசிப்
ஒளிப்பதிவு : தேனி ஈஸ்வர்
தயாரிப்பு : ஜி.டில்லிபாபு
இயக்கம் : சதிஷ் செல்வகுமார்

பெங்களூரில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் ஜி.வி.பிரகாஷும், திவ்யபாரதியும் ஒரே வீட்டில் தங்குகிறார்கள். நண்பர்களாக பழகும் இவர்கள் வயது கோளாறு காரணமாக நெருக்கமாக பழக, அந்த நெருக்கத்தால் திவ்யபாரதி கர்ப்பமடைகிறார். கர்ப்பத்தை கலைக்க வேண்டும் என்று ஜி.வி.பிரகாஷ் குமார் சொல்ல, திவ்யபாரதியோ குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புகிறார். இதனால் இருவருக்கும் இடையே ஏற்படும் சண்டையும், அதனால் ஏற்படும் விளைவுகளும் தான் படத்தின் கதை.

இளைஞர்களின் இளமை துள்ளல் வாழ்க்கையை, பெண் தரப்பு காதல் வலியோடு சேர்த்து சொல்லியிருக்கும் இயக்குநர் சதிஷ் செல்வகுமார், பேச்சுலர்களின் வாழ்க்கையை சுவாரஸ்யமிக்க திரைக்கதையோடும், சுவைமிகு காட்சிகளோடும் சொல்லியிருக்கிறார்.

ஜி.வி.பிரகாஷ் குமார் கதாப்பாத்திரத்திற்கு ஏற்ற தோற்றத்தில் இருப்பதோடு, நடிப்பிலும் அசத்தியிருக்கிறார். சிறு சிறு எக்ஸ்பிரஷன்களை கூட மிக நேர்த்தியாக செய்திருப்பவர், குறைவாக பேசி நிறைவாக நடித்திருக்கிறார்.

முதல் படத்திலேயே மிகப்பெரிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் திவ்யபாரதியின் நடிப்பு படத்திற்கு மிகப்பெரிய பலம். தனது காதலை சொல்லாமலேயே வயிற்றில் கருவை சுமந்துக்கொண்டு, போராடும் அவருடைய நடிப்புக்கு ஆயிரம் அப்ளாஷ் கொடுக்கலாம்.

பேச்சுலர்களின் வாழ்க்கையை நினைவுப்படுத்தும் வகையில் ஜி.வி.பிரகாஷ் குமாரின் நண்பர்கள் கதாப்பாத்திரம் அமைந்திருக்கிறது. அதிலும் அவர்களுடைய பார்ட்டியும், அதனால் ஏற்படும் விளைவுகளும் நம்மை சிரிக்கவும் வைக்கிறது, பதறவும் வைக்கிறது.

முனிஷ்காந்த், இயக்குநர் மிஷ்கின், பகவதி பெருமாள் என அனைவரும் தங்களது வேலையை நேர்த்தியாக செய்திருப்பதோடு ரசிகர்களை அவ்வபோது சிரிக்கவும் வைக்கிறார்கள்.

சித்து குமார், திபு நினன் தாமஸ், ஏ.எச்.காசிப் ஆகியோரது இசையில் பாடல்கள் முனு முனுக்க வைக்கிறது. பின்னணி இசை கதாப்பாத்திரங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக பயணிக்கிறது.

பேச்சுலர்களின் வாழ்க்கையையும், ஐடி ஊழியர்களின் ஆடம்பர வாழ்க்கையையும் அழகாக காட்சிப்படுத்தியிருக்கும் ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர், படம் பார்ப்பவர்களையும் படத்துடன் பயணிக்கும் விதமாக முழு படத்தையும் படமாக்கியிருக்கிறார்.

இளைஞர்களின் வாழ்க்கையை மிக இயல்பாக காட்சிப்படுத்தியிருக்கும் இயக்குநர் சதிஷ் செல்வகுமார், ஒரு பெண்ணின் காதல் வலியை மிக அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.

காதல் இல்லாத திரைப்படங்கள் இல்லை என்றாலும், அதை வித்தியாசமாக கையாளும் இயக்குநர்களுக்கு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இடம் கிடைப்பது வழக்கம். அப்படி ஒரு இடம் இயக்குநர் சதிஷ் செல்வகுமாருக்கு நிச்சயம் கிடைக்கும் என்பது அவருடைய மேக்கிங் ஸ்டைலில் நன்றாக தெரிகிறது.

இரண்டாம் பாதி சற்று நீளமாக இருப்பது குறையாக தோன்றினாலும், அதிலும் நம்மை சிரிக்க வைத்து காட்சிகளை சுவாரஸ்யமாக நகர்த்தி சென்று, முழு படத்தையும் ரசிக்க வைத்து விடுகிறார் இயக்குநர் சதிஷ் செல்வகுமார்.

மொத்தத்தில், ‘பேச்சுலர்’ கொண்டாட்டம்.

bachelor reviewdivyabharathifilm newsGV Prakash KumarMovie Reviewtamil film bachelor reviewtamil movie bachelor review