நடிகர்கள் : சதீஷ் குமார், மிருனாளினி, இயக்குநர் வேலு பிரபாகரன், கருணாகரன், ஹரிஷ் பேகடியா மற்றும் பலர்
இசை : ஜிப்ரான்
ஒளிப்பதிவு : கார்த்திக் கே.தில்லை
இயக்கம் : மனோ கார்த்திகேயன்
தயாரிப்பு : சி.வி.குமார்
ஹாலிவுட்டில் வெளியாகும் அறிவியல் சார்ந்த திரைப்படங்களைப் போல் தற்போது தமிழ் சினிமாவிலும் சில திரைப்படங்கள் வெளியாகின்றன. ஆனால், இந்திய சினிமாவிலேயே முதல் முறையாக டைம் லூப் என்ற அறிவியல் சார்ந்த ஐடியாவோடு வெளியாகியிருக்கும் படம் தான் ‘ஜாங்கோ’.
ஒரே நேரம் அல்லது ஒரே நாள், ஒருவர் வாழ்வில் திரும்ப திரும்ப நடந்தால் அது தான் டைம் லூப். இந்த டைம் லூப்பில் ஒருவர் எப்படி சிக்கிக்கொள்கிறார், அவ்வாறு சிக்கிக்கொள்ளும் அவருக்கு எப்படிப்பட்ட பிரச்சனைகள் ஏற்படுகிறது, அதை எவ்வாறு சமாளிக்கிறார், இப்படி ஒரு விஷயம் சாத்தியமா, போன்றவற்றை விளக்குவது தான் இப்படத்தின் கதை.
மூளை அறுவை சிகிச்சை மருத்துவரான நாயகன் சதீஷ் குமார், டைம் லூப்பில் சிக்கிக்கொண்டு குழப்பமான நிலையில் இருக்கிறார். அதே சமயம், தனக்கு பிரச்சனையாக இருக்கும் டைம் லூப்பை பயன்படுத்தி, ஏற்கனவே நடந்த தவறான விஷயங்களை மாற்றும் முயற்சியில் ஈடுபடும் போது தனது மனைவியின் உயிருக்கு ஆபத்து இருப்பது தெரிய வருகிறது.அவரை அந்த ஆபத்தில் இருந்து காப்பாற்ற முயற்சிப்பவர், அதில் வெற்றி பெற்றாரா இல்லையா, அவருடைய டைம் லூப் பிரச்சனை எப்படி முடிவுக்கு வந்தது, என்பதே படத்தின் மீதிக் கதை.
இதுவரை இந்திய சினிமாவில் எந்த ஒரு இயக்குநரும் தொடாத ஒரு விஷயத்தை தொட்டிருக்கும் அறிமுக இயக்குநர் மனோ கார்த்திகேயன் அவர்களை முதலில் பாராட்டியாக வேண்டும்.
முதல் படத்திலேயே மிக வலுவான கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் சதீஷ் குமார், பலவிதமான உணர்வுகளை பக்காவாக வெளிப்படுத்தி, அனுபவம் வாய்ந்த நடிப்பை கொடுத்திருப்பதோடு, ஒரு நடிகராக கதாப்பாத்திரத்திற்காக அதிகமாக உழைத்திருக்கிறார் என்பது திரையில் தெரிகிறது.
நாயகியாக நடித்திருக்கும் மிருணாளினி படம் முழுவதும் வந்தாலும், ஒரே வேலையை திரும்ப திரும்ப செய்வதால் அவருடைய கதாப்பாத்திரம் பெரிதாக எடுபடவில்லை.
கருணாகரன், ரமேஷ் திலக் ஆகியோரை காமெடிக்காக மட்டும் இன்றி, திரைக்கதையின் ஓட்டத்திற்காகவும் பயன்படுத்தியிருப்பது படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.
இயக்குநர் வேலு பிரபாகரன் மற்றும் ஹரிஷ் பேடியா ஆகியோர் குறைவான காட்சிகள் வந்தாலும், கவனம் ஈர்க்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் கார்த்திக் கே.தில்லை மற்றும் இசையமைப்பாளர் ஜிப்ரான் ஆகியோர் படத்திற்கு பங்கம் ஏற்படாத வகையில் பயணித்திருந்தாலும், படத்தொகுப்பாளர் ஷான் லோகேஷின் பணி படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது. குறிப்பாக, ஒரே காட்சி திரும்ப திரும்ப வரும்போது, அது படம் பார்ப்பவர்களை குழப்பாத வகையில், காட்சிகளை கச்சிதமாக வெட்டியிருக்கும் ஷான் லோகேஷ், இயக்குநரின் பக்கபலமாக இருந்திருப்பது படம் முழுவதும் தெரிகிறது.
படத்தில் வில்லன் யார்? என்பதில் இயக்குநர் வைத்த ட்விஸ்ட் எதிர்பாரதது. அதேபோல், கருணாகரனை போலீஸ் இன்ஸ்பெக்டராக காட்டியதும் எதிர்பாரத அதிர்ச்சியாக இருக்கிறது.
அறிவியல் சார்ந்த ஒரு புது விஷயத்தை கருவாக கொண்டு, ஒரு சுவாரஸ்யமான சஸ்பென்ஸ் த்ரில்லர் படத்தை கொடுத்திருக்கும் இயக்குநர் மனோ கார்த்திகேயன், புதிய முயற்சியாக இருந்தாலும், எளியவர்களுக்கும் புரியும் வகையில், திரைக்கதை மற்றும் காட்சிகளை வடிவமைத்திருப்பது வரவேற்கத்தக்கது.
ஒரே காட்சிகள் திரும்ப திரும்ப வருவது, கதைக்கு முக்கியமானதாக இருந்தாலும், அவை சில இடங்களில் ரசிகர்களை சலிப்படைய செய்வதை மறுக்க முடியாது. அதே சமயம், அந்த காட்சிகளில் கூட சில வேறுபாடுகளை கையாண்டிருக்கும் இயக்குநர், ஒரே நாள் திரும்ப திரும்ப வரும் போது, காட்சிகளின் வேகத்தை அதிகரித்து, நம் கவனத்தை முழுமையாக ஈர்க்கிறார்.
மொத்தத்தில், தமிழ் சினிமாவில் புதிய ஜானரை அறிமுகப்படுத்தியிருக்கும் ‘ஜாங்கோ’ திரைப்படம் பார்க்க வேண்டிய படம் மட்டும் அல்ல, வரவேற்க வேண்டிய முயற்சியும் கூட.