பொதுவாக 3டி படங்கள் என்றாலே குழந்தைகளுக்கு கொண்டாட்டம் தான். சமீபத்தில் வெளியாகி இருக்கும் ஜம்புலிங்கம் 3டி படமும் குழந்தைகளுக்காகவே உருவாக்கப்பட்டுள்ளதாக சொல்லப்பட்டு வந்தது.. எந்த அளவிற்கு இந்தப்படம் குழந்தைகளை திருப்திப்படுத்துகிறது என பார்க்கலாம்..
கிராமத்தில் இருக்கும் மைமிங் திறமை கொண்ட கோகுல்நாத், மேஜிக் நிபுணரான யோக் ஜேபியிடம் உதவியாளராக சேர்கிறார்.. திடீரென அவருடன் ஜப்பானுக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கிறது.. சென்ற இடத்தில் அவரும் உடன் வந்த அஞ்சனா கீர்த்தியும் வழி தவறி விடுகிறார்கள்..
இந்த நேரத்தில் கடத்தல்காரர்களால் கடத்தப்பட்ட நாட்டிய கலைஞர் சுகன்யாவின் மகளை எதிர்பாராத விதமாக மீட்கின்றனர்.. கடத்தல்காரர்களிடம் இருந்து தப்பித்து, எப்படி சுகன்யாவிடம் அவரது மகளை பத்திரமாக ஒப்படைக்கின்றனர் என்பதுதான் மீதிக்கதை..
ஜப்பான் என்றாலே டோக்கியோ தான் என்கிற நினைப்பை மாற்றும் விதமாக டொயாமா என்கிற இன்னொரு சுற்றுலா பிரதேசத்தில் மொத்தப்படத்தையும் படமாக்கியுள்ளார்கள்.. படம் முழுவதும் சுற்றுலா சென்று வந்த உணர்வு ஏற்படுவது உண்மை.. கோகுல்நாத்தின் மைமிங் காட்சிகள் அசத்தலாக இருக்கின்றன. குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள ஹம்சி பாதி நேரம் மூடியாக இருந்தாலும் மீதி நேரம் கலகலக்க வைக்கிறார்..
மேஜிக் நிபுணராக வரும் யோக் ஜேபி நடிப்பில் நிதானம் காட்டுகிறார். ஈரோடு மகேஷ், லொள்ளுசபா ஜீவா, ரோபோ சங்கர் என சிலர் இருந்தாலும் காமெடிக்கு பஞ்சம் தான்.. விறுவிறுப்பில்லாமல் எந்தவித திருப்பங்களும் இல்லாமல் நகரும் திரைக்கதை கடுப்படிக்கவே செய்கிறது. குழந்தைகளுக்காகத்தான் படம் எடுக்கிறோம் என சொல்லிய இயக்குனர்கள் இன்னும் நிறைய மெனக்கெட்டு இருக்கவேண்டும்..