நடிகர்கள் : சமுத்திரக்கனி, பூஜா கண்ணன், ரீமா கலிங்கல் மற்றும் பலர்
இசை : சாம் சி.எஸ்
ஒளிப்பதிவு : மனோஜ் பரஹாம்சா, கே.ஜி.வெங்கடேஷ்
இயக்கம் : ஸ்டண்ட் சில்வா
தயாரிப்பு : திங் பிக் ஸ்டுடியோஸ், அமிர்தா ஸ்டுடியோஸ், ஜீ ஸ்டுடியோஸ்
பிரபல சண்டைப்பயிற்சி இயக்குநர் ஸ்டண்ட் சில்வா திரைப்பட இயக்குநராக அறிமுகமாகியிருக்கும் படம் ‘சித்திரைச் செவ்வானம்’. இயக்குநர் விஜய் கதை எழுதி தயாரித்திருக்கும் இப்படத்தில் சமுத்திரக்கனி, பூஜா கண்ணன், ரீமா கலிங்கல் ஆகியோர் நத்திருக்கிறார்கள். ஜீ 5 ஒடிடி தளத்தில் இப்படம் நேரடியாக வெளியாகியுள்ளது.
விவசாயியான சமுத்திரக்கனி தனது மகள் பூஜா கண்ணனை மருத்துவம் படிக்க வைக்க வேண்டும் என்ற கனவோடு வாழ்கிறார். அதற்காக அவரை நீட் தேர்வுக்கான பயிற்சி மையம் ஒன்றில் சேர்க்கிறார். அங்குள்ள விடுதியில் தங்கி படிக்கும் பூஜா கண்ணன் படித்து வர, ஒரு நாள் அவரது குளியலறை வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பரவிவிடுகிறது. அந்த வீடியோ வெளியான நாளில் இருந்து பூஜா கண்ணன் மாயமாகிவிட, மகளுக்கு என்ன ஆனது என்று தெரியாமல் பறிதவிக்கும் சமுத்திரக்கனி, தனது மகளை தவறாக வீடியோ எடுத்தவரை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்க, அதன் பிறகு நடக்கும் சம்பவங்கள் தான் படத்தின் மீதிக்கதை.
பாலியல் அச்சுறுத்தல்களால் பெண்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பதோடு, ஒரு குடும்பத்தின் லட்சியமும், கனவும் எவ்வாறு சிதைக்கப்படுகிறது என்பதை மிக அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்கள்.
மகளுக்காகவே வாழும் தந்தை கதாப்பாத்திரத்தில் வாழ்ந்திருக்கும் சமுத்திரக்கனி, மகளுக்கு நேர்ந்த கொடுமையை எண்ணி குமுறும் காட்சிகளில் திரையரங்கமே கலங்கி விடுகிறது.
முதல் படத்திலேயே முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கும் பூஜா கண்ணன், பாலியல் ரீதியில் பாதிக்கப்பட்ட பெண்களின் வலிகளை தன் நடிப்பு மூலம் படம் பார்ப்பவர்கள் மனதுக்குள் கடத்துகிறார்.
போலீஸ் வேடத்தில் நடித்திருக்கும் ரீமா கலிங்கல் கதாப்பாத்திரத்திற்கு ஏற்ற தேர்வாக இருப்பதோடு, கம்பீரமாகவும் நடித்திருக்கிறார்.
மனோஜ் பரஹம்சா மற்றும் கே.ஜி.வெங்கடேஷ் ஆகியோரது ஒளிப்பதிவு கதைக்கு ஏற்ப பயணித்திருப்பதோடு, கதாப்பாத்திரங்களின் உணர்வுகளை சிதைக்காமலும் காட்சிகளை படமாக்கியுள்ளது.
சாம் சி.எஸ் இசையில், வைரமுத்துவின் வரிகள் அனைத்தும் புரியும்படியான பாடலாக இருப்பதோடு, திரும்ப திரும்ப கேட்கை வைக்கும் ரகமாகவும் இருக்கிறது. பின்னணி இசை சுமார் ரகம் தான்.
இயக்குநர் விஜய் எழுதிய கதைக்கு விறுவிறுப்பான திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கும் ஸ்டண்ட் சில்வா, தந்தை, மகள் பாசத்துடன் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்கள் குறித்து பேசியிருந்தாலும், சினிமா ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையிலான சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாகவும் கொடுத்திருக்கிறார்.