நடிகர்கள் : சந்தானம், அதுல்யா சந்த்ரா, நமீதா கிருஷ்ணமூர்த்தி, பிரதீப் ராவத், மரியம் ஜார்ஜ், சாய் தீனா, மாறன், சேசு, பிபின்
இசை : சந்தோஷ் நாராயணன்
ஒளிப்பதிவு : விஜய் கார்த்திக் கண்ணன்
தயாரிப்பு : ராஜ் நாராயணன்
இயக்கம் : ரத்ன குமார்
நாடோடியாக வாழும் சந்தானம், யார் எந்த உதவி கேட்டாலும் மறுப்பு தெரிவிக்காமல் செய்யக்கூடிய குணம் கொண்டவர். ஆனால், அந்த உதவியால் பல நேரத்தில் உபத்தரங்களையும் எதிர்கொள்கிறார். இதை அறிந்த இளைஞர்கள் சிலர் கடத்தப்பட்ட தனது நண்பனை கண்டுபிடிக்க உதவி கேட்கிறார்கள். அவர்களுக்கு உதவி செய்ய களத்தில் இறங்கும் சந்தானத்தை மிகப்பெரிய பிரச்சனை பின் தொடர, அதில் இருந்து அவர் தப்பித்தாரா? இல்லையா?, கடத்தப்பட்டவரை கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பது தான் படத்தின் கதை.
காமெடியாக நடிப்பதா அல்லது சீரியஸாக நடிப்பதா என்ற பெரும் குழப்பத்தோடு படம் முழுவதும் நடித்திருக்கும் சந்தானம் ரசிகர்களையும் குழப்பமடைய செய்கிறார். எப்படியாவது காமெடி ஹீரோ என்ற இமேஜை உடைக்க வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டிருக்கும் சந்தானம், இந்த படத்தில் படுமொக்கையாக நடித்திருக்கிறார் என்பதை விட, எதுவும் செய்யாமல் சும்மாவே இருக்கிறார், என்று தான் சொல்ல வேண்டும்.
சந்தானத்துடன் பெரிய நட்சத்திர பட்டாளமே படத்தில் வருகிறார்கள். ஆனால், அவர்களில் பெரும்பாலனவர்கள் புதுமுகங்களாக இருப்பதோடு நடிப்பில் தத்துக்குட்டியாகவும் இருக்கிறார்கள். அவர்கள் என்ன செய்கிறார்களோ அதையே நடிப்பாக முடிவு செய்து இயக்குநர் ஓகே சொல்லியிருப்பது அனைத்து காட்சிகளிலும் தெரிகிறது.
சந்தானத்தை தவிற அவரை சுற்றி இருப்பவர்கள் அனைவரும் காமெடி செய்கிறார்கள். ஆனால், எந்த காமெடிக்கும் நம்மால் சிரிக்க முடியவில்லை. அந்த அளவுக்கு படுமொக்கையாக இருக்கிறது.
சந்தோஷ் நாராயணனின் இசையில் ஒரே ஒரு பாடல் மட்டும் திரும்ப திரும்ப கேட்க வைக்கிறது. படத்தின் பின்னணி இசையாக ஒலிக்கும் ”மாட்னா காலி…” எதற்காக வருகிறது என்றே தெரியவில்லை. அதுமட்டும் இன்றி, இந்த படம் காமெடி படமா? அல்ல சீரியஸ் படமா? என்பது தெரியாதவாறு பின்னணி இசை இருப்பது பெரும் சோகம்.
ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணன் கதையோடு பயணித்திருக்கிறார். ஆனால், கதை எந்த திசையில் பயணிக்கிறது என்பது தான் நமக்கு புரியவில்லை.
மொழி பற்றியும், மொழி வைத்து நடக்கும் அரசியல் பற்றி பேசியிருக்கும் இயக்குநர் ரத்ன குமார், சந்தானத்தை வைத்து மிகப்பெரிய சமூக படத்தை கொடுக்க முயற்சித்திருக்கிறார். ஆனால், அது முடியாமல் போனதால் காமெடியை நடுவில் சொருகியிருக்கிறார். அதுவும் எடுபடாமல் போக இறுதியில் என்ன செய்வது என்று தெரியாமல் எடுத்தக் காட்சிகளை சேர்த்து ஒர் படமாக கொடுத்திருக்கிறார்.
ஆள் கடத்தல் அதை சுற்றி நடக்கும் குழப்பங்கள், அதனால் ஏற்படும் பிரச்சனைகள் என்று அரைத்த மாவையே அரைத்திருக்கும் இயக்குநர் ரத்ன குமார், அதை புதுவிதமாக அரைக்கிறேன் என்ற பெயரில், இரண்டரை மணி நேரம் போரடிக்க வைத்துவிட்டார்.
ரேட்டிங் 2.5/5