நடிகர்கள் : மிர்ச்சி சிவா, நிக்கி கல்ராணி, அக்ஷரா கவுடா, ஆனந்தராஜ், ஊர்வசி
இசை : விக்ரம் செல்வா
ஒளிப்பதிவு : ராஜா பட்டாட்ஜார்ஜி
இயக்கம் : ராம்பாலா
தயாரிப்பு : ஸ்க்ரீன் சீன்ஸ் மீடியா
சொத்துக்காக தந்தையிடம் சண்டை போடும் நாயகன் சிவாவுக்கு, அவருடைய தந்தை பேய் இருக்கும் ஜமீன் கோட்டையை கொடுக்கிறார். அந்த கோட்டையை தேடி செல்லும் சிவா வழியில் விபத்தில் சிக்கி மனநலம் பாதிக்கப்படுகிறார். மனநல மருத்துவமனை நடத்தும் நிக்கி கல்ராணி சிவாவுக்கு சிகிச்சை கொடுக்க, அவரோ நிக்கி கல்ராணியை காதலிக்க தொடங்குகிறார். இதற்கிடையே மந்திரவாதியான அக்ஷரா கவுடா, நிக்கி கல்ராணியை பலி கொடுக்க கடத்தி ஜமீன் கோட்டைக்கு கடத்தி செல்ல, மனநலம் பாதிக்கப்பட்ட சிவா காதலியை தேடி ஜமீன் கொட்டைக்கு செல்கிறார். இறுதியில், நிக்கி கல்ராணியை சிவா காப்பாற்றினாரா இல்லையா, என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தின் நாயகன் என்று சிவாவை சொன்னாலும், அவருடைய வேடம் என்னவோ குணச்சித்திர வேடமாகத்தான் இருக்கிறது. காமெடி படம் என்பதால் சிவாவை ஹீரோவாக நடிக்க வைத்திருக்கிறார்கள். சில இடங்களில் சிரிக்க வைத்தாலும், பல இடங்களில் அவருடைய காமெடி எடுபடாமல் போகிறது.
நிக்கி கல்ராணி டாக்டராகவும், சிவாவின் காதலியாகவும், இறுதியில் பேயாகவும் நடித்திருக்கிறார். ஆனால், எந்த இடத்திலும் ஒரு நடிகையாக நடிக்கவே இல்லை.
சிவாவின் பெற்றோர்களா நடித்திருக்கும் ஆனந்தராஜ் மற்றும் ஊர்வசி ஆகியோர் வரும் காட்சிகள் வஞ்சனை இல்லாமல் சிரிக்க வைக்கிறது. இருவரும் போட்டி போட்டு சிரிக்க வைத்திருக்கிறார்கள்.
ரெட்டின் கிங்க்ஸ்லி, ரவி மரியா, மயில்சாமி என படத்தில் இருக்கும் மற்ற காமெடி நடிகர்கள் அனைவரும் திணிக்கப்பட்டவர்களாக இருப்பதால், அவர்களுடைய காட்சிகள் காமெடி என்ற அறிகுறியே தெரியவில்லை.
ராஜா பட்டாட்ஜார்ஜியின் ஒளிப்பதிவும், விக்ரம் செல்வாவின் இசையும் கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. செஞ்சி மாதவனின் படத்தொகுப்பு கரடு முரடாக பயணித்துள்ளது.
இயக்குநர் ராம்பாலா, தனது முந்தைய படங்களில் உள்ள கருவையே மீண்டும் கையில் எடுத்திருந்தாலும், காமெடி ஏரியாவில் பெரிய அளவில் கோட்டை விட்டுள்ளார்.
முழு படத்திலும், ஆரம்பத்தின் சுமார் 20 நிமிடங்களில் மட்டுமே சிரிக்கும்படியான காமெடிகள் இருக்கின்றன. பிறகு க்ளைமாக்ஸ் நெருங்கும் போது, ஆனந்தராஜ் மற்றும் ஊர்வசி ஜோடி வந்து மீண்டும் நம்மை சிரிக்க வைக்கிறார்கள்.
இயக்குநர் ராம்பாலா திரைக்கதையிலும், காட்சி அமைப்பிலும் கவனம் செலுத்த தவறியிருக்கிறார் என்பது படத்தின் அனைத்துக் காட்சிகளிலும் தெரிகிறது.
மொத்தத்தில், ‘இடியட்’ ஏமாற்றம்