வளர்ந்துவரும் முன்னணி நடிகர்கள், சினிமாவில் நல்ல ஸ்திரமான ஒரு இடத்தைப் பிடித்ததும் அடுத்தகட்டமாக குறிவைப்பது டபுள் ஆக்ஷன் கதாபாத்திரத்தை தான். ஒவ்வொரு நடிகருக்கும் அவர்கள் முதன் முதலாக நடிக்கும் டபுள் ஆக்ஷன் படங்கள் முக்கியமானவை. இன்றைய இளம் நடிகர்களில் சிம்பு, ஜீவா, ஜெயம் ரவி, பரத் அனைவரும் டபுள் ஆக்ஷன் படங்களில் நடித்துவிட்டார்கள். இதில் பாக்கி இருப்பது கார்த்தியும் தனுஷும் தான்.
இப்போது கார்த்திக்கு ஆல் இன் ஆல் அழகுராஜா மூலம் அந்த ஆசையும் நிறைவேறிவிட்டது. ஆனால் அதிலும் ஒரு வித்தியாசம் காட்டியுள்ளார் கார்த்தி. கதைப்படி பிரபு, சரண்யா தம்பதிகளின் மகன்தான் கார்த்தி. படத்தில் பிரபுவுக்கு இளம் வயது ஃபிளாஷ்பேக் ஒன்று வருகிறது. முதலில் பிரபுவையே வாலிப வயது கேரக்டரில் நடிக்க வைக்கலாம் என்றுதான் முடிவு செய்து வைத்திருந்தார்கள்.
ஆனால் அது சரியாக பொருந்தவில்லையாம். என்ன செய்யலாம் என குழம்பிய இயக்குனர் ராஜேஸ், ‘பெரும்பாலான மகன்கள் தந்தையின் சாயலில்தானே இருக்கிறார்கள், பிரபுவின் மகனான கார்த்தியும் இளம் வயது பிரபு போலத்தானே இருந்திருப்பார், எனவே கார்த்தியையே இளம் வயது பிரபுவாக நடிக்க வைத்தால் என்ன’ என்று யோசித்தார்.
அதற்கேற்ற மாதிரி மேக்கப் டெஸ்ட்டிலும் கார்த்தி ஓகே ஆக, இப்போது இளம் வயது பிரபுவாக கார்த்தி நடித்துக் கொண்டிருக்கிறார். இதற்காக பிரபுவின் இளமைக்கால படங்களை டிவிடியில் போட்டுப்பார்த்து, அவரது இளமைக்கால மேனரிசங்களை கவனித்து அதை உள்வாங்கி நடித்து வருகிறாராம் கார்த்தி.