ஏற்கனவே விஜய், சூர்யா ஆகியோரின் படங்கள் கைவிட்டுப் போயிருந்த சூழ்நிலையில் அஜீத் கைகொடுத்தால் மட்டுமே மீண்டும் தன்னை தமிழ் திரையுலகில் நிலை நிறுத்திக்கொள்ள முடியும் என நம்பினார் கௌதம் மேனன். அதற்கேற்ற மாதிரி அஜீத் படம் மட்டுமல்ல, சிம்பு நடிக்கும் படத்தையும் இயக்கும் வாய்ப்பு கிடைக்கவே மீண்டும் பிஸியாகிவிட்டார் கௌதம் மேனன்.
தற்போது சிம்புவை வைத்து இரவு பகலாக முழுவீச்சில் படப்பிடிப்பு நடத்திவரும் கௌதம் மேனன், ஜனவரிக்குள் இதன் படப்படிப்பை முடித்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின் பிப்ரவரியில் அஜீத் படத்தை துவங்க இருக்கிறார். அதற்கேற்ற மாதிரி பொங்கல் தினத்தில் வெளியாகும் ‘வீரம்’ படத்தை தொடர்ந்து, காதலர்தின கொண்டாட்டத்திற்கு மறுநாள் அதாவது பிப்ரவரி-15ல் தனது புதிய படத்தை ஆரம்பிக்க சொல்லியிருக்கிறார் அஜீத். இந்தப்படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரிக்கிறார்.
அதேபோல ஒருமுறை கைவிட்டுப்போய் மீண்டும் அஜீத் படத்தை இயக்கும் வாய்ப்பு தனக்கு மீண்டும் கிடைத்திருப்பதால் கௌதம் தற்போது தாங்க முடியாத உற்சாகத்தில் இருக்கிறார். மேலும் சமீபத்தில்தான் அஜீத்திடம் படத்தின் முழு ஸ்கிரிப்ட்டையும் கொடுத்திருக்கிறார். படித்துப்பார்த்துவிட்டு ரொம்பவே சந்தோஷமாகி விட்டாராம் அஜீத். “இந்தப்படம் ஒரு ஸ்டைலிஷான மாஸ் எண்டெர்டெயின்மெண்ட் விருந்தாக இருக்கும்” என தெரிவித்துள்ளார் கௌதம் மேனன்.