நடிகர்கள் : விஜய் சேதுபதி, ருக்மணி வசந்த், யோகி பாபு, திவ்யா பிள்ளை, பப்லு பிரித்விராஜ், பி.எஸ்.அவினாஷ், ராஜ்குமார்\
இசை : ஜஸ்டின் பிரபாகர் – சாம்.சி.எஸ்
ஒளிப்பதிவு : கரண் பி.ராவத்
இயக்கம் : ஆறுமுககுமார்
தயாரிப்பு : 7CS எண்டர்டெயின்மெண்ட் – ஆறுமுககுமார்
சிறையில் இருந்து விடுதலையாகும் விஜய் சேதுபதி, புதிய வாழ்க்கை வாழ்வதற்காக மலேசியா செல்கிறார். யோகி பாபு வீட்டில் தங்குபவர், அவர் மூலம் திவ்யா பிள்ளை உணவகத்தில் வேலைக்கு சேருகிறார். அப்போது அந்த பகுதியில் இருக்கும் ருக்மணி வசந்துடன் நட்பு ஏற்பட, அது நாளடைவில் காதலாக மாறுகிறது.
இதற்கிடையே ருக்மணிக்கு பணம் தேவை ஏற்படுகிறது. அதனால் கடன் வாங்க சென்ற இடத்தில் சூதாடி, ஒரு கோடி ரூபாய்க்கு விஜய் சேதுபதி கடனாளியாகி விடுகிறார். ஒரு வாரத்தில் கடனை திரும்ப செலுத்தவில்லை என்றால் உயிர் போய்விடும் சூழ்நிலையில், வங்கியில் கொள்ளையடிக்க விஜய் சேதுபதி திட்டம் போடுகிறார். அவரது திட்டம் ஜெயித்ததா?, அதன் மூலம் அவர் எப்படிப்பட்ட பிரச்சனைகளில் சிக்கிக்கொள்கிறார், அதில் இருந்து எப்படி மீள்கிறார்?, என்பதை கமர்ஷியலமாகவும், மாஸாகவும் சொல்ல முயற்சித்திருப்பது தான் ‘ஏஸ்’.
விஜய் சேதுபதி வழக்கம் போல் தனது இயல்பான நடிப்பு மூலம் போல்ட் கண்ணன் என்ற கதாபாத்திரத்தை ரசிகர்கள் ரசிக்கும்படி கையாண்டிருக்கிறார். கூடுதலாக இளமையாகவும், ஸ்டைலிஷாகவும் வலம் வருபவர், ஆக்ஷன் மற்றும் மாஸ் காட்சிகளிலும் அசத்தியிருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் ருக்மணி வசந்த், அழகு மற்றும் நடிப்பு இரண்டிலும் அசத்துகிறார்.
யோகி பாபுவின் காமெடி காட்சிகள் சிரிப்புக்கு உத்தரவாதம் கொடுக்கிறது. படம் முழுவதும் வரும் யோகி பாபு, வரும் காட்சிகள் ஒருசிலது சோடை போனாலும், பெரும்பாலான காட்சிகளில் ரசிகர்கள் குலுங்கி குலுங்கி சிரிக்கிறார்கள்.
திவ்யா பிள்ளை, வில்லன்களாக நடித்திருக்கும் பப்ளு பிரித்விராஜ், பி.எஸ்.அவினாஷ், ராஜ்குமார் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான தேர்வாக பயணித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் கரண் பி.ராவத், இதுவரை திரைப்படங்களில் காட்டப்படாத மலேசியா லொக்கேஷன்களை தேடிப்பிடித்து காட்சிப்படுத்தியிருக்கிறார். காட்சிகளை கலர்புல்லாகவும், கமர்ஷியலாகவும் படமாக்கியிருக்கிறார்.
ஜஸ்டின் பிரபாகர் இசையில் பாடல்கள் அனைத்தும் இனிமை. சாம்.சி.எஸ்-ன் பின்னணி இசை காட்சிகளுக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.
ஃபென்னி ஆலிவரின் படத்தொகுப்பில் ஆரம்பத்தில் படம் வேகமாக பயணித்தாலும், இரண்டாம் பாதி முழுவதும் இழுவையாக இருக்கிறது. காட்சிகளின் நீளத்தை குறைத்திருக்கலாம்.
எழுதி இயக்கியிருக்கும் ஆறுமுககுமார், விஜய் சேதுபதியின் கால்ஷீட்டுக்காக ஒரு படம் எடுத்திருக்கிறாரே தவிர, அவருக்கான படமாக எடுக்கவில்லை.
வங்கி கொள்ளை கதைகள் பல நாம் பார்த்திருந்தாலும், அவற்றில் இருந்து எந்தவிதத்திலும் இந்த படம் தணித்து நிற்கவில்லை. தொழில்நுட்பம் நிறைந்த காலக்கட்டத்தில் தணி ஒருவராக விஜய் சேதுபதி வங்கியை கொள்ளையடிப்பது, காதில் வாழைப்பூ வைப்பது போல் இருக்கிறது. அதிலும், வங்கியை கொள்ளையடித்தப் பிறகு, லாட்டரியில் விழும் பணம், அதன் மூலம் பிரச்சனைகள் என்று கதையை நகர்த்துவதற்கு எதை எதையோ காட்சிப்படுத்தி படத்தை மிக நீளமாக நீட்டி, இயக்குநர் ஆறுமுககுமார் பார்வையாளர்களை சோதித்திருக்கிறார்.
ரேட்டிங் 3/5
Comments are closed.