
சில வருடங்களுக்கு முன் மலையாளத்தில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியாகி சூப்பர்ஹிட்டான ‘மெமொரீஸ்’ படத்தை தமிழில் ‘ஆறாவது சினம்’ ஆக ரீமேக் செய்திருக்கிறார் ‘ஈரம்’ அறிவழகன்..
தனது மனைவி, குழந்தயை ரவுடி ஒருவனின் துப்பாக்கிக்கு பலி கொடுத்த சோகத்தில் வேலைக்கு போகாமல் குடித்துக்கொண்டே இருக்கிறார் போலீஸ் அதிகாரி அருள்நிதி. இந்த சமயத்தில் தென்மாவட்டங்களில் உள்ள அருகாமை நகரங்களில் தொடர் கொலைகள் நடக்கின்றன.. கொல்லப்படுபவர்கள் எல்லோருமே ஆண்கள் தான்.
இரண்டு கொலைகள் நடந்தபின்னும் போலீஸார் துப்புத்துலக்க திணறுகிறார்கள். இதனால் இந்த வழக்கை விசாரிக்க அருள்நிதியை அழைகிறார் உயர் போலீஸ் அதிகாரியான ராதாரவி. அப்போது மூன்றாவது கொலையும் நிகழ, தீவிர விசாரணையில் இறங்குகிறார் அருள்நிதி.
விசாரணையில் இன்னும் இரண்டு பேர் கொல்லப்பட இருப்பது தெரியவர, கொலையாளியை நெருங்கும் முன் நான்காவது கொலையையும் வெற்றிகரமாக நடத்துகிறான் கொலையாளி. அடுத்த ஐந்தாவது ஆள் தனது தம்பி என்பதும், கொலை செய்யப்பட்டவர்கள் அனைவருமே கொலையாளியுடன் நேரடியாக சம்பந்தப்படாமல், அதேசமயம் ஒரு வேறொரு வித்தியாசமான காரணத்துக்காக ‘பலி’ கொடுக்கப்படுகிறார்கள் என்பதும் அருள்நிதிக்கு தெரிய வருகிறது.. கொலைகாரனிடம் இருந்து தனது தம்பியை காப்பாற்றினாரா அருள்நிதி..?
அருள்நிதிக்கு நிச்சயம் டர்னிங் பாய்ண்டாக இந்தப்படம் இருக்கும் என அடித்து சொல்லலாம். எந்நேரமும் குடித்துகொண்டு இருப்பது உறுத்தலாக இருந்தாலும் கூட, காரண காரியத்துடன் அதை கையான்டிருப்பதும், வழக்கு விசாரணையில் அவர் நுணுக்கமாக ஈடுபடுவதும் படத்திற்கு பிளஸ் பாயிண்டுகள் தான். படம் முழுக்க குடும்பத்தை தொலைத்த மென் சோகத்தையும் குடிகாரர்களின் இயல்பையும் குறைசொல்லமுடியாத வண்ணம் வெளிப்படுத்தியுள்ளார்.
சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும் ஐஸ்வர்யா ராஜேஷ் பளீர் புன்னகையால் மனம் கவர்ந்துவிடுகிறார். துறுதுறு ரிப்போர்ட்டராக வரும் ஐஸ்வர்யா தத்தாவும் கூட கவனம் ஈர்க்கிறார். பக்குவமான அதிகாரியாக ராதாரவியும், பாந்தமான அம்மாவாக துளசியும் சிறப்பான கேரக்டர்களில் வெளிப்பட்டிருக்கிறார்கள்.
அசிஸ்டன்ட் கமிஷனர் ரேஞ்சுக்கு ரோபோ சங்கருக்கு பதவி உயர்வு கொடுத்துள்ளார்கள். அவரும் சீரியசாக செல்லும் படத்தில் அவ்வப்போது விஜயகாந்தின் ‘பிரஸ்மீட்’ காமெடியை பயன்படுத்தி சிரிக்கவைக்கிறார். நடிகர் சார்லியும் தனது இருப்பை காட்டியுள்ளார். தூங்கா நகரம் இயக்குனர் கௌரவிற்கு கௌரவமான வேடம் கொடுத்திருக்கிறார்கள்.
துப்பறியும் கதைகளில் சஸ்பென்ஸ் முடிச்சுகளும், அதை புத்திசாலித்தனமாக அவிழ்ப்பதும் தான் பிரதானம்.. இந்தப்படத்திலும் அதற்கு எந்த குறையும் இல்லை.. தமனின் பின்னணி இசையும் அரவிந்த் சிங்கின் திறமையான ஒளிப்பதிவும் காட்சிகளை விறுவிறுப்பாக நகர்த்த உதவி இருக்கின்றன.
கொலைசெய்யப்படுவர்களின் மரணத்திற்கு அவர்கள் மனைவிகளே காரணம் என்கிற புதிய ட்விஸ்ட் நிமிர்ந்து உட்கார வைக்கிறது. சைக்கோ கொலைகாரனுக்கு, தான் செய்யும் செயல் எப்போதுமே சரி என படுவதால் கொலைக்கான லாஜிக்கும் சரிசெய்யப்படுகிறது. கிளைமாக்ஸில் கொலைகாரனை ட்ரேஸ் செய்வதில் மட்டும் இயக்குனர் அறிவழகன் இன்னும் கொஞ்சம் புதுமையை கையாண்டு இருக்கலாம்.
கொடுத்த காசுக்கு வஞ்சனை இல்லாமல், ஒரு நல்ல இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் படத்தை பார்த்த திருப்தியை ரசிகனுக்கு நிச்சயம் கொடுக்கும் இந்த ‘ஆறாது சினம்’
Comments are closed.