’ஆகக் கடவன’ விமர்சனம்

89

நடிகர்கள் : ஆதிரன் சுரேஷ், வின்சென்ட்.எஸ்,சி.ஆர்.ராகுல், மைக்கேல்.எஸ், சதிஷ் ராமதாஸ், தஷ்ணா, ராஜசிவன், விஜய் ஸ்ரீநிவாஸ்
இசை : சாந்தன் அன்பழகன்
ஒளிப்பதிவு : லியோ வி.ராஜா
இயக்கம் : தர்மா
தயாரிப்பு : சாரா கலைக்கூடம் – அனிதா லியோ, லியோ வி.ராஜா

ஆதிரன் சுரேஷ், சி.ஆர்.ராகுல், ராஜசிவன் மூவரும் ஒரு மருந்தகத்தில் வேலை செய்கிறார்கள். சொந்தமாக மருந்தகம் வைக்கும் முயற்சியில் இருக்கும் இவர்கள், அதற்காக ரூ.6 லட்சம் பணம் சேர்க்கிறார்கள். ஆனால், அந்த பணம் திருட்டு போய் விடுகிறது. இதனால், ஊரில் உள்ள நிலத்தை விற்று பணம் ரெடி செய்வதற்காக இருசக்கர வாகனத்தில் ஊருக்கு செல்கிறார்கள். அப்போது வழியில் வாகனம் பஞ்சராகி விட, பொட்டல் காட்டுப் பகுதியில் இருக்கும் பஞ்சர் கடைக்கு பஞ்சர் போட செல்கிறார்கள்.

அந்த இடத்தில், கடத்தல், கொள்ளை, கொலை போன்ற குற்ற செயல்களில் ஈடுபடும் வின்சென்ட்.எஸ், சதிஷ் ராமதாஸ், மைக்கேல்.எஸ் ஆகியோர் இருக்க, சிறுவன் ஒருவன் பஞ்சர் போடும் வேலை செய்கிறார். பஞ்சர் போட வந்தவர்களை, வின்சென்ட்.எஸ், சதிஷ் ராமதாஸ், மைக்கேல்.எஸ் அடிக்கடி முறைத்துக் கொண்டிருப்பதோடு, அந்த இடத்தில் ஏதோ மர்மமான சில விசயங்களை செய்து வருகிறார்கள். இதற்கிடையே, பஞ்சர் போடும் வேலை தாமதமாக ஒரு கட்டத்தில் ஆதிரன் மற்றும் ராகுலை சுற்றி மர்மமான சம்பவங்கள் நடக்கிறது. எதற்காக இது நடக்கிறது? என்று யோசிக்கும் போது, அங்கிருந்து ராகுல் மாயமாகி விடுகிறார். ராகுலை ஆதிரன் தேட, குற்ற பின்னணி கொண்ட கும்பல் ஆதிரனை தாக்க முயற்சிக்கிறது.

குற்றப் பின்னணி கொண்ட கும்பல் இவர்களை எதற்காக தாக்க வேண்டும்?, அவர்களுக்கும் இவர்களுக்கும் என்ன தொடர்பு? அந்த இடத்தில் நடக்கும் மர்ம சம்பவங்களின் பின்னணி என்ன? என்பதை வார்த்தைகளுக்கு உள்ள வலிமையை உணர்த்தும் வகையில் சொல்வதே ‘ஆகக் கடவன’.

நல்லவர்கள் மூன்று பேர், கெட்டவர்கள் மூன்று பேர் என கதையின் முதன்மை வேடத்தில் நடித்திருக்கும் 6 நபர்களை தவிர்த்து, சிறு சிறு வேடங்களில் நடித்திருப்பவர்கள் என படத்தில் நடித்திருக்கும் அனைவரும் அவர் அவர் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.

முதன்மை வேடத்தில் நடித்திருக்கும் ஆதிரன், மிக இயல்பாக நடித்திருக்கிறார். எந்த இடத்தில் கோபமடைய வேண்டும், எந்த இடத்தில் அமைதியாக செல்ல வேண்டும், என்பதை புரிந்து செயல்படும் அவரது ஒவ்வொரு அசைவுகளும், சரியான மீட்டரில் பயணித்திருக்கிறது.

ஆதிரனுக்கு நேர் எதிர் வேடத்தில் நடித்திருக்கும் ராகுல், அவசரப்பட்டு செய்யும் அனைத்து செயல்களும் விபரீதத்தில் முடிந்தாலும், கதையின் திருப்புமுனை கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி நடித்திருக்கிறார்.

பட்டாணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சதீஷ் ராமதாஸ், வெகுளித்தமான முகத்தை வைத்துக் கொண்டு, கோழி கூவுவதற்கும், நாய் சிறுநீர் கழிப்பதற்கும் சொல்லும் கதைகள் திரையரங்கில் சிரிப்பலையை நிச்சயம் எழுப்பும்.

வின்சென்ட் .எஸ் மற்றும் மைக்கேல்.எஸ் இருவருமே கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருப்பதோடு, தங்களது பணியை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

பஞ்சர் கடை பையனாக நடித்திருக்கும் தஷ்ணா, ஆதிரனின் அப்பா, காவலர் வேடத்தில் நடித்திருப்பவர், என படத்தில் வரும் சிறு சிறு கதாபாத்திரங்கள் கூட பார்வையாளர்கள் மனதில் நிற்கும் வகையில் பயணித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் லியோ வி.ராஜா, பொட்டல் காட்டையும், அமைதியான அந்த பஞ்சர் கடை இடத்தையும் பயமுறுத்தும் வகையில் காட்சிப்படுத்தியிருக்கிறார். கதாபாத்திரங்களின் முகங்களில் இருக்கும் இறுக்கத்தின் பின்னணியில் ஏதோ பெரிய விசயம் இருக்கிறது, என்பதை தனது கேமரா மூலம் பார்வையாளர்களிடம் எளிதில் கடத்தி விடுகிறார்.

இசையமைப்பாளர் சாந்தன் அன்பழகனின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை திரைக்கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.

படத்தொகுப்பாளர்கள் சுமித் பாண்டியன் மற்றும் பூமேஷ் தாஸ், சாலை பயணம் முதல், பஞ்சர் கடைக்குள் நடக்கும் சம்பவங்கள் வரை, அடுத்தது என்ன நடக்கும்? என்ற எதிர்பார்ப்புடன் படத்தை பார்க்க வைக்கிறார்.

எழுதி இயக்கியிருக்கும் தர்மா, நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் வலிமை உண்டு என்பதை உணர்த்தும் வகையிலான கதைக்கருவை வைத்துக் கொண்டு, சுவாரஸ்யமான சஸ்பென்ஸ் திரில்லர் படத்தை கொடுத்திருக்கிறார்.

கதைக்களம் மற்றும் அதை காட்சிப்படுத்திய விதம், கதாபாத்திரங்களை கையாண்ட விதம் என புதியக்குழு என்ற உணர்வே ஏற்படாத வகையில், படத்தின் ஒவ்வொரு காட்சியும் நம்மை படத்துடன் ஒன்றிவிட செய்கிறது. குறிப்பாக பெண் கதாபாத்திரங்கள் இன்றி, ஆண்களை மட்டுமே வைத்துக் கொண்டு தான் சொல்ல வந்ததை இயக்குநர் தர்மா, மிக சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார்.

ரேட்டிங் 4/5

Comments are closed.