ஒரு கிடாயின் கருணை மனு – விமர்சனம்

241

oru kidayin karunai manu

ஒரு ஆட்டு கிடாயாழ் கருணை மனு போட முடியுமா.? முடியும்.. ஆனால் நீதிபதியிடம் அல்ல.. அந்த ஆண்டவனிடம் என்பதை உணர்ச்சிப்பூர்வமாக சொல்லியிருக்கும் படம் தான் இது.

முப்பது வயதுக்கு மேல் திருமணம் செய்துகொள்ளும் விதார்த் திருமணம் முடிந்ததும் குலதெய்வம் கோவிலுக்கு நேர்ந்துவிட்ட கிடாயை வெட்டி நேர்த்திக்கடன் நிறைவேற்ற உறவினர்களுடன் செல்கிறார். போகும் வழியில் ஒரு அசம்பாவிதம் நடைபெறுகிறது.. அதை தொடர்ந்து விதார்த்தின் நேர்த்திக்கடனுக்கு மட்டுமல்ல.. விதாரத்துக்கே சிக்கல் வருகிறது.. நேர்த்திக்கடன் நிறைவேறியதா.. விதார்த்தின் சிக்கல் தீர்ந்ததா இல்லை.. கிடாயின் கருணை மனு தான் ஏற்றுக்கொள்ளப்பட்டதா என்பது மீதிக்கதை.

ஒரு கிராமத்தில் கிடாய் வெட்டும் நிகழ்வு என்பது யதார்த்தம். அதில் எதிராபாராத சூழல் ஒன்று ஏற்படும்போது மனிதர்களின் முகங்கள் எப்படி மாறுகின்றன என்பதை படத்தில் உள்ள ஒவ்வொரு கேரக்டரும் பிரதிபலிக்கின்றன.. விதார்த்தின் அமைதியான, அழுத்தமான நடிப்பு படத்தின் முதுகெலும்பு.. நடந்துவிட்ட அசம்பாவிதத்தை விட தனது வயதை கூட்டி சொன்னது யார் என்கிற ஆராய்ச்சியில் இறங்குவது இறுக்கமான சூழலில் கலகலப்பான காமெடி.

புதுமுகம் ரவீணா கதைக்கேற்ற கலையான முகம். படத்தில் இடம்பெற்றுள்ள சித்தன் மோகன், வீரசமர் உள்ளிட்ட அனைவருமே காமெடியில் கலக்குகிறார்கள். குறிப்பாக படத்தில் வக்கீலாக வரும் ஜார்ஜ் தான் திருப்புமுனை கதாபாத்திரம்…. சாதாரணமாக ரெண்டு சீனில் வந்துபோய்விடுவார் என்று பார்த்தால் அவர்தான் முழுப்படத்தையும் வழி நடத்துகிறார். என்னதான் சொந்தக்காரன் என்றாலும் வக்கீல் என்றால் கொஞ்சம் பார்த்துத்தான் இருக்கவேண்டும் என்கிற படிப்பினையை அவர் கேரக்டர் வாயிலாக இந்தப்படம் உணர்த்தியுள்ளது.

சரணின் ஒளிப்பதிவு ஒரு கிராமத்து கெடாவெட்டு விருந்துக்கு போய்வந்த உணர்வை தருகிறது. ராகுராமின் பின்னணி இசையும் நேரம் ஆக ஆக மனதில் திகில் கூட்டவே செய்கின்றது.. யதார்த்தமான கிராமத்து மாந்தர்கள் மத்தியில் சில நேரம் சூழலுக்கு ஏற்றாற்போல் கள்ளம் புகுந்துகொள்வதையும் அதன் பின் விளைவுகளையும் அழகாக படம் எடுத்து இல்லையில்லை பாடம் எடுத்திருக்கிறார்கள்.

மனிதன் செய்யும் தவறு ஒன்று, ஒரே நேரத்தில் ஒரு கிடாயின் கருணை மனுவாக மாறுவதையும், ஒரு அபலை தாய்க்கு வாழ்க்கையின் ஊன்றுகோலாக மாறுவதையும் சொல்லியிருக்கும் விதத்தில் இயக்குனர் சுரேஷ் சங்கையா கைதட்டல் பெறுகிறார்.

ஒரு கிடாயின் கருணை மனு – மிக நேர்த்தியான படம்

Comments are closed.