அம்மா கணக்கு – விமர்சனம்

225

amma kanakku review
படிப்பில் அலட்சியம் காட்டும் மகள், பரிதவிக்கும் அம்மா இருவருக்குமான உணர்வு போராட்டம் தான் ‘அம்மா கணக்கு’ படமாக வெளியாகி உள்ளது.

பத்தாம் வகுப்பு படிக்கும் வயதுள்ள மகளுக்கு அம்மாவாக, கணவனை இழந்த அமலாபால்.. வயதான பணக்கார முதலாளி ரேவதி வீட்டில் வேலைபார்த்துகொண்டு இன்னும் சின்னச்சின்ன வேலைகளையும் செய்து மகள் யுவஸ்ரீயை கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறார். ஆனால் பத்தாவது படிக்கும் மகள் யுவஸ்ரீயோ வேலைக்காரி மகள் கலெக்டராகவா ஆகமுடியும் என்கிற எண்ணத்தில் படிப்பில் அலட்சியம் காட்டுகிறார்.

மகளின் படிப்பை தூண்டும் விதமாக ரேவதி தரும் ஆலோசனைப்படி அமலாபாலும் மகள் படிக்கும் பள்ளியில் பத்தாம் வகுப்பு சேருகிறார் அமலாபால். மகளுக்கு போட்டியாக மதிப்பெண்கள் வாங்குகிறார். வீட்டை தொடர்ந்து பள்ளியிலும் தனக்கு தொந்தரவாக வந்த அம்மாவை பள்ளியில் இருந்து நிறுத்துவதற்காக அவரை விட நன்றாக படிக்க ஆரம்பிக்கிறார் யுவஸ்ரீ.. தாயிடம் இதை சவாலாகவே மேற்கொள்ளும் யுவஸ்ரீ ஜெயித்தாரா..? அமாலாபால் எதை நினைத்து பள்ளியில் சேர்ந்தாரோ அது நிறைவேறியதா என்பது க்ளைமாக்ஸ்.

ஒரு விதவைத்தாய்க்கு இயல்பாகவே இருக்கும் தனது மகளின் படிப்பு பற்றிய கனவு, அவளது வளமான எதிர்காலம் குறித்த பயம் என அனைத்தையுமே காட்சிக்கு காட்சி இயல்பாக பிரதிபலித்திருக்கிறார் அமலாபால். மாணவியின் தாயாக, அதேசமயம் பள்ளி மாணவியாக என இரண்டு கேரக்டர்களுக்குமே அவரது உருவம் கச்சிதமாக பொருந்தியிருப்பது பிளஸ்.

தந்தை இல்லாமல் உடன்பிறப்புகளும் இல்லாமல் அம்மாவின் அரவணைப்பில் மட்டுமே வளரும் ஒரு குழந்தையின் மனநிலையையும் அதன் கல்வித்தரத்தையும் மாணவி யுவஸ்ரீ நன்றாகவே பிரதிபலித்திருக்கிறார். குறிப்பாக இன்றைய டீனேஜ் மாணவியின் விட்டேத்தியான மனப்போக்கை மிகச்சரியாகவே வெளிபடுத்தி சபாஷ் பெறுகிறார் யுவஸ்ரீ… சமுத்திரக்கனியின் பாத்திரப்படைப்பு கொஞ்சம் புதுமையாக இருந்தாலும் வழக்கமான அவரது மிடுக்கான நடிப்பு இதில் மிஸ்ஸிங். இளையராஜாவின் பின்னணி இசை, படம் மெதுவாக நகரும்போதேல்லாம் நம்ம தட்டிக்கொடுத்து ஆசுவாசப்படுத்துகிறது.

அம்மாவும் மகளும் ஒரே பள்ளியில் படித்தால் எப்படி இருக்கும் என்கிற லாஜிக் இல்லாத ஆனால் சுவாரஸ்யமான ஒன்லைனை எடுத்த இயக்குனர் அஸ்வினி ஐயர் திவாரி, அதன்மீது திரைக்கதை என்னும் கோட்டையை சரிவர கட்டாமுடியாமல் தடுமாறி இருக்கிறார்.. அம்மா மகள் இருவரும் பெரும்பாலும் எலியும் பூனையுமாக இருப்பதாக காட்டியவர், அதன் பின்னணியில் உள்ள விஷயங்களை நமக்கு மறைத்து விடுவதுடன், அதை களைவதற்கு ஒரு இயக்குனராக நேரடி தீர்வு ஏதும் சொல்லாமல் சுற்றி வளைத்து கதை சொல்லியிருக்கிறார்..

சரி.. அம்மா 9ஆம் வகுப்பு முடித்திருந்ததால் மகளுடன் பத்தாம் வகுப்பில் சேர முடிகிறது. ஒருவேளை பத்தாம் வகுப்பு பாஸாகி இருந்தால்..? இல்லை எட்டாம்வகுப்பு மட்டுமே முடித்திருந்தால் என நாம் எங்கெங்கே லாஜிக்குகளை எதிர்பார்க்கிறோமோ அங்கெல்லாம் தனக்கு வசதியாக திரைக்கதையை இழுத்து தடம் மாற்றியுள்ளார் இயக்குனர் அஸ்வினி ஐயர் திவாரி.. படத்தின் பலவீனனும் அதுவே.

மற்றபடி பெண் கல்வி, விதவைத்தாயின் கஷ்டம், மாணவர்களின் கற்கும் திறனை மேம்படுத்துதல் என சில நல்லவிஷயங்களையும் தொட்டிருப்பது ஆறுதல் அளிக்கிறது.. அம்மா கணக்கு கூட்டி கழித்து பார்த்தால் கணக்கு சரியாகத்தான் வரும்.

Comments are closed.