களம் – விமர்சனம்

277

kalam tamil movie

பேய்ப்பட வரிசையில் இன்னொரு படமா என ஆரம்பத்தில் அலுப்படைய வைத்தாலும் இறுதியில் ‘அட’ என ட்விஸ்ட் கொடுத்து ஆச்சர்யப்பட வைத்து அனுப்புகிறார்கள்..

ஊரில் பலபேரின் நிலங்களை, வீடுகளை அடியாட்கள் துணையுடன் அபகரித்து தன் பெயருக்கு மாற்றும் மதுசூதன்.. பாரினில் இருக்கும் இவரது மகன் அம்ஜத் தனது காதல் மனைவி லட்சுமி ப்ரியாவுடன் ஊர் திரும்புவதால் அவருக்காக ஜாமீன் பங்களா ஒன்றை தனது ‘வழக்கமான’ பாணியில் சொந்தமாக்கி மகனுக்கு பரிசளிக்கிறார்.

ஆனால் அந்த வீட்டில் இருவரும் தங்களது குழந்தையுடன் குடியேறிய நாட்களில் இருந்து சில அமானுஷ்யமான விஷயங்கள் நடக்கின்றன. லட்சுமி ப்ரியா இன்டீரியர் டெகரேட்டரான பூஜாவை அழைத்து வந்து காட்ட, அவரும் அந்த வீட்டில் அமானுஷ்ய சக்தி இருப்பதை உறுதிப்படுத்துகிறார். பூஜாவின் ஆலோசனைப்படி ஹைடெக் மந்திரவாதியான ஸ்ரீனியை அழைத்து வந்து காரணம் அறிய முற்படுகிறார்கள்..

அவரும் அங்கிருக்கும் துர் ஆத்மாவை விரட்டும் முயற்சியில் இறங்க, அதன் பலனாக அம்ஜத், தன் மனைவி குழந்தையுடன் அந்த வீட்டை ஸ்ரீனிக்கே எழுதிவைத்து விட்டு கிளம்புகிறார். கடைசி ஐந்து நிமிடத்தில் சின்னதாக ஒரு ட்விஸ்ட் வைத்து லைட்டான ஆச்சர்யத்துடன் நம்மை அனுப்பி வைக்கிறார்கள்.

பேய்ப்படம் என்பதற்கான வழக்கமான கிளிஷேக்கள் இந்தப்படத்திலும் இருப்பதால் இடைவேளைவரை அவற்றை ஒரு அலுப்பும் சலிப்புமாகவே கடந்து செல்லவேண்டி இருக்கிறது. அம்ஜத் வழக்கமான பேய்ப்பட நாயகனின் வேலையை இம்மி பிசகாமல் செய்துவிட்டு போகிறார். லட்சுமி ப்ரியா மற்றும் பூஜாவின் நடிப்பு பரவாயில்லை. வில்லத்தனத்தில் மதுசூதன் தமிழுக்கு கிடைத்த இன்னொரு மலையாள லால் என்றே சொல்லலாம். மனிதர் மிரட்டுகிறார். பேயை விரட்ட வரும் நகுலன் சின்னதாக கவனம் ஈர்க்கிறார்..

கொஞ்ச நேரமே வரும் நாசரின் மாஸ்டர் பிளான் ஆச்சர்யப்படுத்தினாலும் நடைமுறையில் இதெல்லாம் எவ்வளவு சாத்தியம் என கேட்கவும் வைக்கிறது. பிரகாஷ் நிக்கி பின்னணி இசையில் ஓரளவு மிரட்டுகிறார். இயக்குனர் ராபர்ட் எஸ்.ராஜ் முதல் பாதியில் வழக்கமான பாணியை சற்று மாற்றியிருந்தால் இன்னும் மிரட்டலாக இருந்திருக்கும்.

Comments are closed.