
இருபது வருடங்களுக்கு முன்பெல்லாம் தியேட்டர்களில் ‘அ.செ.இப்ராஹிம் ராவுத்தர் வழங்கும் புரட்சி கலைஞர் விஜயகாந்த் நடிக்கும்’ என ஸ்கிரீனில் டைட்டில் போடும்போதே கைதட்டல் அதிரும். அந்த அளவுக்கு விஜயகாந்தின் உயிர் நண்பனாக இருந்து அவரது படங்களை தொடர்ந்து தயாரித்து வந்தவர் தான் இப்ராஹிம் ராவுத்தர்.
புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன் ஆகியவை இவரது தயாரிப்புகள் தான். ஒருகட்டத்தில் இருவருக்குமான நட்பில் இடைவெளி அதிகமாகி, ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்வதும் பேசிக்கொள்வதும் நின்றுவிட்டது… இடைப்பட்ட இந்த காலங்களில் சில படங்களை தயாரித்த ராவுத்தர், சமீப காலமாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார்.
தற்போது சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் அவர் சுயநினைவின்றி இருக்கிறார். இந்த தகவல் கேளிப்பட்டதும் மருத்துவமனைக்கு விரைந்த கேப்டன், அங்கே தனது ஆருயிர் நண்பன் சுயநினைவில்லாத நிலையில் இருப்பது கண்டு கண்ணீர் வடித்திருக்கிறார்.
அதன்பின் வீடு திரும்பிய கேப்டன், சிறிய பேப்பரை எடுத்து அதில், தன் நண்பன் நலமுடன் திரும்பிவர இறைவனிடம் பிரார்த்திப்பதாக தனது கைப்பட கடிதம் எழுதி தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் மதுரையில் இருந்து தாங்கள் இருவரும் சினிமாவுக்காக வந்து ஒன்றாக போராடி ஜெயித்த நினைவுகளையும் பகிர்ந்துள்ளார். ராவுத்தர் நலம் பெற்று திரும்ப கேப்டனுடன் சேர்ந்து நாமும் பிரார்த்திப்போம்.
Attachments
Comments are closed.