மணல் நகரம் – விமர்சனம்

228


துபாயில் மார்க்கெட்டிங் வேலைபார்க்கும் பிரஜின், தனது நண்பன் கௌதம் கிருஷ்ணாவையும் தமிழ்நாட்டில் இருந்து வரவழைக்கிறார். பிரஜின் ஹோட்டலில் வேலை பார்க்கும் தனிஷ்காவை காதலிக்கிறார். கௌதமுக்கோ வருணா ஷெட்டியின் கம்பெனியில் வேலை கிடைகிறது. கூடவே அவரின் காதலும்.

தான் வேலைபார்க்கும் ஹோட்டல் முதலாளி வி.கே.வின் தொந்தரவு ஒருபுறம், அவரது நண்பர் ஒருவருக்கு ஐம்பது லட்ச ரூபாய் செட்டில் செய்யவேண்டிய அவஸ்தை மறுபுறம் என தவிக்கிறார் தேஜஸ்வினி.. பிரஜின் தனது நண்பர் மூலமாக அந்தப்பணத்தை ஏற்பாடு செய்ய, அதுவும் கடைசி நேரத்தில் கைவிட்டுப் போய்விடுகிறது.

அந்த தொகையை தானே செட்டில் செய்வதாக கூறும் முதலாளி வி.கே, அதற்கு ஈடாக தேஜஸ்வினியின் உடலை கேட்கிறார். அதற்கு மறுக்கும் தேஜஸ்வினியை வலுக்கட்டாயமாக பலாத்காரம் பண்ண முயற்சிக்கும்போது அங்கே வரும் கௌதம் வி.கேவை கொல்கிறார். துபாய் போலீஸ் அவர்கள் இருவரையும் கைது செய்கிறது. அங்குள்ள கடுமையான சட்ட திட்டங்களை மீறி அவர்கள் விடுதலை ஆனார்களா என்பதுதான் க்ளைமாக்ஸ்..

பிரஜின், கௌதம் கிருஷ்ணா, தேஜஸ்வினி, வருணாஷெட்டி என ஒவ்வொருவரும் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தவும் தவறவில்லை..காதலுக்காக வருணா ஷெட்டி கொடுக்கும் விளையும், நட்புக்காக கௌதம் செய்யும் காரியமும் அவர்கள் கதாபாத்திரத்தின் மேல் மரியாதையை ஏற்படுத்துகின்றன.

இப்ராஹிம் ரப்பாணியாக நடித்திருக்கும் சங்கர், இயக்குனராக மட்டுமல்லாமல் அமைதியான, அழுத்தமான கதாபாத்திரமாகவும் மிளிர்கிறார். துபாயின் எதார்த்த முகத்தை கண்முன்னால் கொண்டுவந்ததோடு, துபாய் வீதிகளிலும் நம்மை சுற்றிக்காட்ட அழைத்து செல்கிறது ஸ்ரீதரின் ஒளிப்பதிவு. ரெணில் கௌதமின் பின்னணி இசையும் கதையை விரட்டுகிறது.

துபாயின் சட்டதிட்டங்களை வைத்தும் பிழைப்புக்காக வேலை தேடி அங்கே செல்பவர்கள் எதிர்கொள்ளும் அவலங்களையும் வைத்து ஓரளவு ரசிக்கும் விதமாகவே படத்தை இயக்கியுள்ளார் ‘ஒருதலை ராகம்’ சங்கர்.. பிழைப்புக்காகவோ, அல்லது பணம் சம்பாதிக்கவோ துபாய் செல்பவர்களுக்கு அது ஒன்றும் சொர்க்க பூமி அல்ல என்கிற நிதர்சனத்தையும், தவறுகளில் ஈடுபடாமல் உழைப்பவர்களுக்கு அது ‘பண நகரம்’.. கவனம் பிசகினால் அதுவே ‘மணல் நகரம்’ என பயம் காட்டியிருக்கிறார்கள்.

Comments are closed.