லட்சிய நடிகராகவே வாழ்ந்தவர் எஸ்.எஸ்.ஆர்..!

181

லட்சிய நடிகர் என்று அனைவராலும் பாராட்டப்படும் எஸ்.எஸ்.ஆர் என்கிற எஸ்.எஸ்.ராஜேந்திரன் நேற்று காலமானார். நடிகர் திலகம் சிவாஜிகணேசன் பராசக்தி படம் மூலம் அறிமுகம் செய்த இரட்டை இயக்குனர்களான கிருஷ்ணன்-பஞ்சு தான் எஸ்.எஸ்.ஆரையும் தமிழ்த் திரையுலகுக்கு அறிமுகம் செய்தனர். பராசக்தி மூலம் தான் அவரது அறிமுகம் பிரபலமானது என்றாலும் அதற்கு ஐந்து வருடங்களுக்கு முன்னரே இதே இயக்குனர்கள் இயக்கிய ‘பைத்தியக்காரன்’ படத்தில் எம்.ஜி.ஆருடன் இணைந்து நடித்திருந்தார் எஸ்.எஸ்.ஆர்.

சேடபட்டி சூரியநாராயண ராஜேந்திரன் என்பதன் சுருக்கம்தான் எஸ்.எஸ்.ஆர். நாடகக் காவலர்களான டி.கே.எஸ். சகோதரர்களின் நாடகக் கம்பெனியில் சிறப்பான வேடங்களில் எஸ்.எஸ்.ஆர் நடித்துக்கொண்டிருந்தபோது அவருக்கு திராவிடர் இயக்கத் தலைவர்களான பெரியார், அண்ணா ஆகியோரின் அறிமுகம் கிடைத்தது. திராவிட இயக்கத்துக்கும் ஓர் இலட்சிய நடிகர் கிடைத்தார்.

பிறகுதான், கலைஞரின் வசனத்தில் உருவான மனோகரா படத்திலும் எஸ்.எஸ்.ஆர் நடித்தார். எம்.ஆர்.ராதா நடித்த ‘ரத்தக்கண்ணீர்’ படத்தில் எஸ்.எஸ்.ஆருக்கு முக்கிய பாத்திரம் கிடைத்தது. அறிஞர் அண்ணாவின் ‘சொர்க்கவாசல்’ படத்திலும் நடித்தார். அண்ணா கதை, கலைஞரின் வசனம், என சிறப்பம்சங்களுடன் வெளியான ‘ரங்கோன் ராதா’ படத்தில் சிவாஜிக்கு மகனாகவும் நடித்தார் எஸ்.எஸ்.ஆர்.

ஆலயமணி, தெய்வப்பிறவி, பச்சைவிளக்கு, கைகொடுத்த தெய்வம், பழனி, சாந்தி எனப் பல படங்களில் சிவாஜியுடன் சேர்ந்த நடித்த எஸ்.எஸ்.ஆர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடன் காஞ்சித்தலைவன், ராஜா தேசிங்கு போன்ற படங்களில் நடித்தார்.

ஆனால் 1958ல் வெளியான முக்தா சீனிவாசன் இயக்கிய ‘முதலாளி’ படத்தின் வெற்றிதான் எஸ்.எஸ்.ஆரை தமிழ்த்திரையுலகின் கதாநாயகர்கள் வரிசையில் நிலைநிறுத்தியது. தொடர்ந்து குமுதம், தைபிறந்தால் வழிபிறக்கும், சாரதா உள்ளிட்ட வெற்றிப்படங்கள் எஸ்.எஸ்.ஆரை புகழின் உச்சியில் ஏற்றிவைத்தன.

எஸ்.எஸ்.ஆரின் திரைப் பயணத்தில் குறிப்பிடத்தக்க படங்களில் முக்கியமான படம் ‘பூம்புகார்’. சிலப்பதிகாரத்தை திரைவடிவமாக மாற்றிய கலைஞரின் படைப்பு. அதில் கோவலனாக எஸ்.எஸ்.ஆரும், கண்ணகியாக விஜயகுமாரியும் நடித்தனர். நிஜவாழ்விலும் இவர்கள் இணைந்தனர்..

நடிகராக மட்டும் இல்லாமல் பாடல், திரைக்கதை எழுதுவது எனப் படைப்பாளியாகவும் தன்னை வெளிப்படுத்தினார் எஸ்.எஸ்.ஆர். ஜெயலலிதாவுடன் சேர்ந்து நடித்த ‘மணிமகுடம்’, ‘தங்கரத்தினம்’, ‘அல்லி’ ஆகிய மூன்று படங்களை இயக்கியிருக்கிறார்.

வெள்ளையரை எதிர்த்து போர் செய்து வீரமரணம் அடைந்த மருது சகோதரர்களின் வாழ்க்கையை ‘சிவகங்கை சீமை’ என்ற பெயரில் திரைப்படமாக எடுத்தார் கவிஞர் கண்ணதாசன். அந்தப் படத்தில் எஸ்.எஸ்.ஆர்தான் நாயகன்.

அழகு தமிழில் வசனங்களை மிகத் தெளிவாகவும் ஏற்ற இறக்கத்துடனும் கம்பீரமாக உச்சரிக்கக்கூடியவர் எஸ்.எஸ்.ஆர். மத்திய-மாநில அரசுகளின் விருதுகளும் அவருக்கு கிடைத்துள்ளன. கலைமாமணி விருது, எம்.கே.தியாகராஜபாகவதர் விருது ஆகியவற்றையும் தமிழக அரசு அளித்துள்ளது. தென்னிந்திய நடிகர் சங்கத்தை உருவாக்கியதில் முக்கிய பங்கு வகித்த எஸ்.எஸ்.ஆர், அதன் தலைவராக மூன்று முறை பதவி வகித்தவர்.

திராவிட இயக்கக் கொள்கைகளை ஏற்றுக்கொண்டு, தி.மு.க உறுப்பினராக செயல்பட்ட எஸ்.எஸ்.ஆர் தனது நடிப்பிலும் அதனை பிரதிபலிக்கும் விதமாக புராண படங்களில் நடிப்பதைத் தவிர்த்தார். திரையில் வாய்ப்பு கிடைத்த இடங்களில் எல்லாம் திராவிட இயக்கக் கொள்கைகளைப் பேசினார்.

அதேபோல ஒரு நடிகர் தேர்தல் களத்தில் நின்று மக்களின் வாக்குகளைப் பெற்று சட்டமன்றத்திற்கு சென்ற சாதனையை முதன்முதலில் நிகழ்த்தியவர் இந்திய அரசியல் வரலாற்றில் எஸ்.எஸ்.ஆர்தான். நேற்று மறைந்தது அவர் உடல் தான். அவரது ஆன்மா அவர் நடித்த படங்கள் மூலம், அவர் பேசிய வசனங்கள் மூலம் சரித்திரம் உள்ளவரை உலாவரும் என்பதில் ஐயமில்லை.

Comments are closed.