மேகா – விமர்சனம்

193

ஒரு மழை நாளில் பஸ்டாப்பில் மேகாவை பார்த்து காதல் வயப்படுகிறார் அஸ்வின். அவரது வீட்டில் நடக்கும் திருமணத்திற்கு நண்பனுக்கு உதவியாக போட்டோ எடுக்க செல்லும் அஸ்வின், காதல் திருமணத்தால் பிரிந்துபோன மேகாவின் அண்ணனை மீண்டும் அவர்கள் குடும்பத்துடன் சேர்த்து வைக்கிறார். இதில் அஸ்வினுடன் தானும் காதலில் விழுகிறார் மேகா.

அஸ்வினுக்கு க்ரைம் பிராஞ்ச் ஆபீசில் வேலை கிடைக்கிறது. அவரது காட்பாதரான போலீஸ் அதிகாரி விஜயகுமார் திடீரென தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொள்கிறார். ஆனால் அஸ்வினோ அதை கொலை என்று கண்டுபிடிக்கிறார்.

இதனால் கோபமடையும் உண்மையான கொலையாளி, அஸ்வினின் நண்பரான சசியை கொல்கிறான்.. காதலி மேகாவை கடத்துகிறான்.. அஸ்வின் தனது காதலியை மீட்கப்போகும் நேரத்தில், அந்த விபரீதம் நடக்கிறது.. காதலி என்ன ஆனார்.. அஸ்வினால் அவரை உயிருடன் மீட்க முடிந்ததா என்பது க்ளைமாக்ஸ்..

துறுதுறு நாயகனாக அஸ்வின் ஹீரோயினை மட்டும் தனியே படம் எடுத்துத் தள்ளுவது… அவரது கையில் இதய வடிவில் மெகந்தி போட்டு விடுவது.. புகைப்படத்தில் நிற்கச் சொல்லும் சாக்கில் ஹீரோயினை தொட்டுத் தொட்டு பேசுவது.. ரவிக்கை தைக்க ஹீரோயினை வெளியே அழைத்துச் செல்வது.. போகும்போது இருவரும் காதில் ஒரே இயர்போனில் பாட்டு கேட்பது.. மழை பெய்யும் அந்த நள்ளிரவில் இருவரும் ஐஸ்கிரீம் சாப்பிடுவது என காதலில் உருகியிருக்கிறார் அஸ்வின்..

அதற்கு சற்றும் சளைக்கமால் திகட்ட திகட்ட காதலை கண்களால் அள்ளித்தந்திருக்கிறார் மெகாவாக நடித்திருக்கும் கதாநாயகி சிருஷ்டி. அவாது காதல் பார்வையும் கன்னக்குழி அழகும் சேர்ந்து நம்மை கிறங்கடிக்கின்றன. கூடவே இளையராஜாவின் ‘புத்தும் புது காலை’ பாடலும் சேர்ந்துகொள்ள நமக்கும் உடனே யாரையாவது காதலிக்க தோன்றுகிறது.

விஜயகுமார், ஒய்.ஜி.மகேந்திரன், நர்சாக வரும் அங்கனா ராய், சசி என அவரவர் பங்கை சரியாகவே செய்திருக்கிறார்கள். ஒரு பக்கம் காதலில் உருக வைத்தாலும் இன்னொரு பக்கம் கொலை, விசாராணை என தடக்க வைக்கிறார் இயக்குனர் கார்த்திக் ரிஷி..

திரைக்கதையின் வேகமும் அழகான இயக்கமும் சேர்ந்து படத்தை இறுதிவரையில் பார்க்க வைத்திருப்பது என்பது மட்டும் உண்மை. படத்தின் மிகப்பெரிய பலமே இளையராஜாவின் இசையும், 33 வருடங்கள் கழித்து இந்தப்படத்தில் இணைக்கப்பட்டிருக்கும் ‘புத்தம் புது காலை’ பாடலும் தான். அந்தப்பாடலுக்காகவே ஒருமுறை பார்த்துவிட்டுத்தான் வாங்களேன்.

Comments are closed.