
குறுக்கு வழியில் பணம் சம்பாதிப்பது பற்றி சி.வி.குமாரின் தயாரிப்பில் வந்திருக்கும் இன்னொரு படம் தான் ‘சரபம்’.
நவீன் சந்திரா பிரபல கம்பெனியின் ஆர்க்கிடெக்ட்.. அவர் தனது கம்பெனிக்காக தரும் ‘தீம் பார்க்’ ப்ராஜெக்ட்டை ஓகே செய்யும் ‘ஆடுகளம்’ நரேன் ப்ராஜெக்ட் மேனேஜராக நவீன் வேண்டாம் என்கிறார். இந்த ப்ராஜெக்டால் தனது வருமானம் இரட்டிப்பாகும், வசதியான வாழ்க்கை வாழலாம் என கனவுகண்ட நவீன் நொறுங்கிப்போகிறார்..
இன்னொரு பக்கம் போதைக்கு அடிமையான நரேனின் மகள் சலோனி தந்தையிடம் எப்போதும் பணம், பணம் என்று கேட்டு டார்ச்சர் பண்ண அவரை உதாசீனப்படுத்துகிறார் நரேன். இப்போது நரேனின் மீது கோபத்தில் இருக்கும் நவீனும் சலோனியும் சேர்ந்து அவரிடம் பணம் பறிக்க திட்டமிடுகிறார்கள்.
சலோனியை நவீன் கடத்தியுள்ளதாக நாடகமாடி நரேனிடம் இருந்து முப்பது கோடி ரூபாய் டிமாண்ட் பண்ணி அதையும் கைப்பற்றுகிறார்கள். இரண்டு நாட்கள் கழித்து பணத்தை பங்கு போட்டுக்கொள்ளலாம் என்று முடிவுசெய்து, தங்களது திட்டப்பட்டி சலோனியை கைகளை கட்டி ஓரிடத்தில் இறக்கிவிட்டு வீட்டிற்கு செல்கிறார் நவீன்..
மறுநாள் காலை செய்திகளில் சலோனி கொலை செய்யப்பட்டார் என செய்தி வெளியாகிறது. அதிர்ச்சியில் உறையும் நவீன் பழி தன் மீது விழுமோ என பதறி நிற்கையில், அவரது வீட்டிற்கே தனது தந்தையுடன் உயிருடன் வந்து மற்றுமொரு அதிர்ச்சியை கொடுக்கிறார் சலோனி.. இடையில் நடந்தது என்ன..?, இறுதியில் நடப்பது என்ன என்பதை சஸ்பென்சை குலைக்காமல் உங்கள் யூகத்திற்கே விட்டுவிடுகிறோம்.
சீட்டிங் கதை, பரபர ட்விஸ்ட்கள் கொண்ட களம் தான் தங்களது பிராண்ட் தயாரிப்பு என்பதை மீண்டும் ஒருமுறை உறுதி செய்திருக்கிறார் தயாரிப்பாளர் சி.வி.குமார்..
பலமாடி கட்டத்தில் இருந்து தலைகீழாக தொங்கும் அளவு தைரியசாலி கதாபாத்திரம் நாயகன் நவீன் சந்திராவுக்கு.. மாட்டிக்காம பணம் சம்பாதிக்கிரதுன்னா ஓகே என்று கதாநாயகியும் இவரும் சேர்ந்து போடும் கடத்தல் நாடகம் இவருக்கு எதிராக திரும்பியபின் தான் கதையில் சீரியசாகவே அடாப்ட் ஆகிறார் நவீன்.
அறிமுக நாயகியாக சலோனி.. முதல் படத்திலேயே இவருக்கு சவாலான கதாபாத்திரம் தான். ஆரம்பத்தில் அவர் உருவம் நமக்கு அந்நியமாக இருந்தாலும் கதை நகர ஆரம்பிக்கு வேகத்தில் மனதில் பதிந்து விடுகிறார்.. அதிலும் க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் தரும்போது ‘சபாஷ்’ சொல்லவைக்கிறார்..
ஆடுகளம் நரேன்.. கம்பீரமும் கள்ளத்தனமும் கொண்ட தொழில அதிபராக கsச்சிதம். படத்தில் அடிக்கடி திருப்பங்களை ஏற்படுத்துவதில் ஆரம்பித்து கதையின் இன்னொரு நாயகனாகவே படம் முழுவதும் வருகிறார். கிருஷ்ணன் வெங்கட்டின் ஒளிப்பதிவும் பிரிட்டோ மைக்கேலின் பின்னணி இசையும் கதையின் வேகத்திற்கு கைகொடுத்திருக்கின்றன.
படத்தை இயக்கியுள்ளார் அருண்மோகன்.. நடிகர் அனுமோகனின் மகன். கதையை பரபரப்பாக கொண்டு செல்ல முயற்சித்து அதில் ஓரளவு வெற்றியும் பெறுகிறார். அவர் வைத்திருக்கும் டிவிஸ்ட்டுகளும் ஆடியன்சுக்கு ஓகேதான். ஆனால் ஹீரோயின் கதாபாத்திர வடிவமைப்புதான் ஏற்கனவே ஒரு மலையாளப்படத்திலும், சில வருடங்களுக்கு முன் வெளியான ஒரு தமிழ்ப்படத்த்திலும் வந்துள்ளதை ஞாபகப்படுத்துகிறது.
மேலும் கதாநாயகி, அவரது தந்தை ஆகியோரின் வழியாக அடிக்கடி ரிப்பீட் காட்சிகளாக விரியும் பிளாஸ்பேக் காட்சிகளில் எடிட்டர் லியோ ஜான் பால் கத்திரி போட்டு இன்னும் ட்ரிம் பண்ணியிருந்தால் வேகம் கூடியிருக்கும். இருந்தாலும் இறுதிவரை என்ன நடக்கிறது என்பதை யூகிக்கவிடாமல் திரைக்கதையை கொண்டு சென்றதில் இயக்குனரின் சாதுர்யம் தெரிகிறது.
Comments are closed.