‘வடகறி’ – விமர்சனம்

239


மெடிக்கல் சேல்ஸ் ரெப்பான ஜெய் தனது பழைய செல்போனை தூக்கிப்போட்டுவிட்டு லேட்டஸ்டாக ஒன்று வாங்க ஆசைப்படுகிறார். ஆனால் பட்ஜெட்டில் துண்டு விழ என்ன செய்யலாம் என யோசிக்கும் தருணத்தில் திடீரென யாரோ ஒருவர் மிஸ் பண்ணிய செல்போன் ஜெய்க்கு கிடைக்கிறது.

கொஞ்ச நாள் அதை வைத்து சீன் போடும் ஜெய்க்கு ஆட்டோ ட்ரைவரான அவரது அண்ணன் அருள்தாஸின் நேர்மையான செயல் ஒன்று மனதை மாற்றுகிறது. அடுத்தவர் செல்போனை நாம் வைத்திருப்பது தவறு என அதை தொலைத்தவரிடமே ஒப்படைக்க நினைக்கிறார். அங்குதான் தொடங்குகிறது வில்லங்கம்.

தங்களிடமிருந்து பல லட்சம் மதிப்புள்ள மருந்துகளை ஏமாற்றி கொள்ளையடித்து விட்டு தலைமறைவாகிவிட்டான் என்பதற்காக இன்னொரு பக்கம் அந்த செல்போனுக்கு உரியவனை தேடுகிறது ஒரு கும்பல். இந்த விபரம் தெரியாமல் இப்போது ஜெய் நேரடியாக அவர்களிடம் போக தங்களை ஏமாற்றியது ஜெய்தான் என தப்பாக நினைத்து அவரை அடித்து உதைத்து சரக்கை கேட்டு டார்ச்சர் செய்கின்றனர்.. இந்த கும்பலிடம் இருந்து ஜெய் எப்படி தப்பிக்கிறார் என்பது தான் க்ளைமாக்ஸ்.

ஜெய்யின் ‘அம்மாஞ்சி’ பாவனைகள் நாம் பார்த்தது தான் என்றாலும் பிரச்சனைக்குள் சிக்கியதும் சீரியஸாகிவிடுவது கதையோட்டத்தின் வேகத்திற்கு உதவுகிறது. ஸ்வாதிக்குவித்தியாசமாக ரூட் விடும்போது ‘இத ஜெய் தாம்ப்பா பண்ண முடியும்”னு சொல்ல வைத்துவிடுகிறார். ஆனால் ஆரம்ப காட்சிகளில் ஜெய் தனது செல்போனை சைலண்ட்டில் போடாமல் வைத்திருந்து மற்றவர்களை டார்ச்சர் பண்ணும்போது நம்மையும் கொஞ்சம் டார்ச்சர் பண்ணத்தான் செய்கிறது அவரது கேரக்டர்.

ஸ்வாதிக்கு க்யூட்டான சீரியஸ் கேர்ள் வேடம்.. ஆனால் நம்மை நன்றாக சிரிக்க வைப்பதெனவோ உண்மை. ஜெய்யுடனான காதலில் ஸ்வாதியிடம் குறும்பு கொப்பளிக்கிறது. குறிப்பாக ஜெய்யின் பிரச்சனையை அறியாமல் அவரிடம் ‘லொடலொட’ என்று பேசுவது சரியான ‘கலகல’.

ஜெய்யின் நண்பனாக காமெடி கதாபாத்திரத்தில் படம் முழுவதும் வரும் அளவுக்கு புரமோஷன் ஆகியிருக்கிறார் ஆர்ஜே பாலாஜி. முதல் பாதியில் அவரது காமெடி எடுபடவில்லையென்றாலும் இடைவேளைக்குப்பின் தன்னைக் கடத்தியவர்களுடனேயே ‘கேரம்’ விளையாடும் அளவுக்கு மிங்கிள் ஆகும்போது நம்மையறியாமல் சிரிப்பு வந்து விடுகிறது.

ஜெய்யின் அண்ணனாக எம்.ஜி.ஆர் ரசிகராக, நேர்மையாளராக வரும் அருள்தாஸ் பளிச்சென்று நம்மை கவர்கிறார். ஜெய்யின் அண்ணியாக கஸ்தூரியா அது..? ரொம்பவே இளைத்திருக்கிறார். ஆனால் நடிப்பு அப்படியேதான் இருக்கிறது. ஸ்வாதியின் தோழியாக அரும் மிஷா கோஷலும் ஜெய்யின் மீது ஒன்சைட் லவ் என கேரக்டரோடு பொருந்தியிருக்கிறார்.

ஜெய்யின் ‘பாஸ்’ ஆக வந்து க்ளைமாக்ஸில் ட்விஸ்ட் அடிக்கும் ரோலில் வெங்கட்பிரபுவும், ஒரே ஒரு காட்சியில் மட்டும் வந்துபோகும் பிரேம்ஜியும் நட்புக்கரம் நீட்டியிருக்கிறார்கள். தயாளனாக வரும் அஜய்ராஜும் சரியான தேர்வுதான்.

விவேக் சிவா மற்றும் மெர்வின் சாலமனின் இசையில் இரண்டு பாடல்கள் பரவாயில்லை. செல்போன் அனிமேஷன் பாடல் குழந்தைகளை நிச்சயம் கவரும். துரத்தல் காட்சிகளில் எஸ்.வெங்கடேஷின் கேமரா பம்பரமாக சுற்றி சுழன்றிருக்கிறது.

செல்போன் மோகத்தையும் காலவதி ஆன மருந்து விற்பனையையும் முடிச்சுப்போட்டு சுவராஸ்யம் குறையாமல் அழகாக ஒரு சதுரங்க ஆட்டம் ஆடியிருக்கிறார்கள். போரடிக்காத ஒரு விறுவிறுப்பான படத்தை கொடுத்து அறிமுகப்படத்திலேயே பாஸ்மார்க் வாங்கிவிட்டார் இயக்குனர் சரவணராஜன்.

பின் குறிப்பு : இரவு 10 மணிக்கு மேல் நிகழும் சம்பவங்கள் எல்லாம் மறுநாள் காலை நியூஸ்பேப்பரில் அதுவும் முதல்பக்க தலைப்பு செய்தியாக வருவது சினிமாவில் மட்டும் தான் சாத்தியம்.. ‘வடகறி’யோடு அதற்கும் ஒரு முற்றுப்புள்ளி வைத்து விடுங்கள்.. ப்ளீஸ்.

Comments are closed.