நடிகர்கள் : அர்ஜுன் தாஸ், சஞ்சனா நடராஜன், ஜாரா வினீத் சந்தோக், ஸ்ரிஷ்டி Y, நீரவ் S, அனுபமா குமார், அர்ச்சனா சந்தோக், கார்த்திக் குமார், படவா கோபி
இசை : முஜீப் மஜீத் – தி ஆர்டிஸ்ட் 404 (கூடுதல் இசை)
ஒளிப்பதிவு : ப்ரீத்தா ஜெயராமன்
இயக்கம் : மதுமிதா
தயாரிப்பு : பிரசாத் தேவினேனி, ஷோபு யார்லகட்டா
அடையாளமற்ற ஒரு சிறுவனின் மரணத்தில் தொடங்கி, பல அதிர்ச்சிகரமான உண்மைகளை வெளிச்சத்திற்குக் கொண்டுவரும் விசாரணைப் பயணம். வழக்கமான கொலை, துரத்தல், வன்முறை என்ற திரில்லர் இலக்கணத்தைத் தவிர்த்து, உளவியல் ரீதியாக ரசிகர்களை அச்சுறுத்த முயற்சித்திருக்கிறது ‘ஜான் டோ’.
கேரளாவின் அமைதியான நீர்நிலையில் மூழ்கிக் கிடக்கும் ஒரு கார். அதற்குள் உயிரற்ற நிலையில் கிடக்கும் சிறுவனின் உடல். முதலில் சாதாரண சாலை விபத்தாகக் கருதப்படும் இந்தச் சம்பவம், சில தடயங்களும் பிரேதப் பரிசோதனை அறிக்கையும் எழுப்பும் சந்தேகங்களால் கொலை வழக்காக மாறுகிறது. இந்த மர்மத்தின் பின்னணியைத் தேடும் காவல்துறை அதிகாரி அர்ஜுன் தாஸ், சிறுவனின் மரணத்திற்குப் பின்னால் திட்டமிட்ட சதித்திட்டம் இருப்பதை உணர்கிறார்.
இதற்கிடையில் தமிழகத்தில் மற்றொரு சிறுவன் காணாமல் போகிறான். இரண்டு சம்பவங்களுக்கும் இடையே இருக்கும் ஒற்றுமையை உணரும் அர்ஜுன் தாஸ், விசாரணையைத் தொடர்ந்து தமிழகத்திற்கு வருகிறார். ஆனால், அங்கு சிறுவன் காணாமல் போன வழக்கை விசாரிக்கும் காவல்துறை அதிகாரி சஞ்சனா நடராஜனிடமிருந்து அவருக்கு எதிர்பார்த்த ஒத்துழைப்பு கிடைப்பதில்லை. இருவருக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள் விசாரணையின் வேகத்தை மட்டுமல்லாமல், கதையின் சுவாரஸ்யத்தையும் கூட்டுகின்றன.
ஒருகட்டத்தில் காணாமல் போன சிறுவன் கண்டுபிடிக்கப்படுகிறான். ஆனால், அவனது உடல் நிலையைவிட மனநிலைதான் பெரும் கவலையை ஏற்படுத்துகிறது. அந்தச் சிறுவனுக்கு நேர்ந்த கொடுமைகள், ஏற்கெனவே நடந்த மரணத்துடன் தொடர்புடையவை என்பதை உணரும் அர்ஜுன் தாஸ், குழந்தைகளை இலக்காகக் கொண்ட ஒரு கொடூரமான குற்றவாளியின் பின்னணியைத் தேடத் தொடங்குகிறார். அடுத்ததாக எந்தக் குழந்தையும் பாதிக்கப்படுவதற்கு முன்பு இந்த மர்மத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே அவரது இலக்காகிறது.
அடையாளம் தெரியாத நபரைக் குறிப்பிடப் பயன்படுத்தப்படும் பொதுவான பெயர்தான் ‘ஜான் டோ’. அடையாளமற்ற சிறுவனின் மரணத்தில் தொடங்கும் விசாரணை, பல குழந்தைகளின் வாழ்க்கையைச் சிதைத்த ஒரு குற்றவாளியின் உண்மையான முகத்தை வெளிப்படுத்துவதால் படத்தின் தலைப்பு கதையோடு பொருத்தமாக அமைந்திருக்கிறது.
இதுவரை தனது தனித்துவமான குரலால் ரசிகர்களைக் கவர்ந்த அர்ஜுன் தாஸ், இந்தப் படத்தில் காவல்துறை அதிகாரியாக முற்றிலும் வேறொரு பரிமாணத்தைக் காட்டியிருக்கிறார். காக்கி உடைக்கு ஏற்ற கம்பீரம், விசாரணையில் வெளிப்படும் நிதானம், குற்றவாளிகளின் மனநிலையைப் புரிந்துகொண்டு அவர்களிடமிருந்து உண்மையைப் பெறும் அணுகுமுறை என அவரது நடிப்பு கவனம் ஈர்க்கிறது.
குற்றவாளிகளை அடித்துத் துன்புறுத்துவதன் மூலம் உண்மையைப் பெறுவதற்குப் பதிலாக, அவர்களின் பலவீனங்களை அறிந்து மனரீதியாக அணுகும் காவல்துறை அதிகாரியாக அவர் வெளிப்படுத்தியிருக்கும் நடிப்பு புதுமையானது. இருப்பினும், சில இடங்களில் அவர் பேசும் வசனங்கள் தெளிவாகப் புரியாதது சிறிய குறையாக இருக்கிறது.
சஞ்சனா நடராஜன், தமிழக காவல்துறை அதிகாரியாக இயல்பான நடிப்பை வழங்கியிருக்கிறார். விசாரணையில் காட்டும் வேகம், கதாபாத்திரத்தின் உறுதி, உணர்வுப்பூர்வமான தருணங்களில் வெளிப்படும் மென்மை என அளவான நடிப்பால் கதைக்கு வலு சேர்க்கிறார். காவல்துறை அதிகாரி என்ற கம்பீரத்திற்குள் ஒளிந்திருக்கும் காதல் உணர்வுகளையும் சில காட்சிகளில் அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
சிறுவர்களாக நடித்திருக்கும் ஜாரா வினீத் சந்தோக் மற்றும் நீரவ் எஸ் ஆகியோர் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களைச் சிறப்பாகக் கையாண்டிருக்கிறார்கள். அவர்களின் அம்மாவாக நடித்திருக்கும் ஸ்ரிஷ்டி ஒய், அர்ஜுன் தாஸின் தாயாக வரும் விஜே அர்ச்சனா, தந்தையாக நடித்திருக்கும் படவா கோபி, மருத்துவராக வரும் கார்த்திக் குமார் என துணை நடிகர்களின் பங்களிப்பும் கதைக்கு ஏற்ற வகையில் அமைந்திருக்கிறது.
ஒளிப்பதிவாளர் ப்ரீத்தா ஜெயராமன், கேரளாவின் இயற்கை எழில் கொஞ்சும் நிலப்பரப்புகளையே மர்மமும் பதற்றமும் நிறைந்த பின்னணியாக மாற்றியிருக்கிறார். அழகான இடங்கள்கூட ஆபத்தின் அறிகுறியாகத் தோன்றும் வகையில் காட்சிகளை வடிவமைத்திருப்பது பாராட்டுக்குரியது. வன்முறையையும் ரத்தக் காட்சிகளையும் முன்னிறுத்தாமல், கதாபாத்திரங்களின் மனநிலை வழியாகவே அச்சத்தை உருவாக்கியிருப்பது படத்தின் தனித்துவம்.
முஜீப் மஜீத்தின் இசையும், தி ஆர்டிஸ்ட் 404 வழங்கிய கூடுதல் இசையும் காட்சிகளின் தன்மைக்கு ஏற்ப பயணிக்கின்றன. பின்னணி இசையை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தாமல், அமைதியையே ஒரு பதற்றத்தை உருவாக்கும் கருவியாக மாற்றியிருக்கிறார்கள். குறிப்பாக, ‘நான் போதுமா…’ பாடல் மனதில் நிற்பதுடன் கதையின் உணர்வுகளையும் பிரதிபலிக்கிறது.
படத்தொகுப்பாளர் விஜய் வெங்கடரமணன், சிக்கலான கிரைம் த்ரில்லர் கதையை எளிமையாகப் புரிந்துகொள்ளும் வகையில் தொகுத்திருக்கிறார். ஆனால், இதுவே சில இடங்களில் படத்தின் பலவீனமாகவும் மாறுகிறது. விசாரணையில் அடுத்தடுத்து வெளிப்படும் திருப்பங்கள் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்துவதில்லை. குற்றவாளியை நாயகன் மிக எளிதாக நெருங்கிவிடுவதால், பார்வையாளர்களிடம் உருவாக வேண்டிய மர்மமும் எதிர்பார்ப்பும் குறைந்து போகின்றன.
கதை மற்றும் திரைக்கதையை உருவாக்கியிருக்கும் மதுமிதா, நிக்கோலஸ் செவாலியே ஆகியோர், குழந்தைகளை மையமாகக் கொண்ட கொடூரமான குற்றச் சம்பவங்களைச் சொல்வதற்குத் தேவையான உணர்வுப்பூர்வமான அணுகுமுறையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். குறிப்பாக, குழந்தைகள் எதிர்கொள்ளும் மனரீதியான பாதிப்புகளையும், அவை அவர்களின் எதிர்காலத்தில் ஏற்படுத்தும் தாக்கங்களையும் கதையின் முக்கிய அம்சமாகப் பதிவு செய்திருக்கிறார்கள்.
இயக்குநர் மதுமிதா, வழக்கமான சைக்கோ த்ரில்லர் படங்களின் பாதையைத் தவிர்த்து, குற்றவாளியின் உளவியல் பின்னணியையும் மனித மனத்தின் இருண்ட பக்கங்களையும் மையப்படுத்தியிருக்கிறார். குற்றவாளியின் செயல்களை அதிர்ச்சிக்காக மட்டும் பயன்படுத்தாமல், அவற்றுக்குப் பின்னால் இருக்கும் உளவியல் காரணங்களை ஆராய முயன்றிருப்பது வித்தியாசமான அணுகுமுறை.
ஆனால், ஒரு திரில்லர் படத்திற்குத் தேவையான பரபரப்பும் மர்மமும் திரைக்கதையில் இன்னும் வலுவாக இருந்திருக்கலாம். பார்வையாளர்கள் குற்றவாளியின் அடுத்த நகர்வு என்னவாக இருக்கும் என்று யோசிக்கத் தொடங்குவதற்குள், விசாரணை அவரை மிக எளிதாக நெருங்கிவிடுகிறது. இதனால் கதையின் இறுதிப்பகுதியில் எதிர்பார்த்த அளவுக்கு அழுத்தம் உருவாகவில்லை.
ரத்தம் தெறிக்கும் கொலைக் காட்சிகள், அதிரடியான துரத்தல்கள், அதீத வன்முறை ஆகியவற்றை மட்டுமே நம்பாமல், மனதிற்குள் ஏற்படும் அச்சத்தையும் குழந்தைகளின் உளவியல் பாதிப்புகளையும் மையப்படுத்தியிருக்கும் ‘ஜான் டோ’, வித்தியாசமான முயற்சி. திரைக்கதையின் விறுவிறுப்பிலும் திருப்பங்களிலும் இன்னும் கவனம் செலுத்தியிருந்தால், மிகச்சிறந்த உளவியல் கிரைம் த்ரில்லராக உயர்ந்திருக்க வேண்டிய படம்.
இருப்பினும், வழக்கமான சைக்கோ த்ரில்லர் படங்களிலிருந்து விலகி, நாகரீகமான முறையில் ஒரு கொடூரமான கதையைச் சொல்லியிருக்கும் இயக்குநர் மதுமிதாவின் முயற்சி பாராட்டுக்குரியது.
ரேட்டிங் 3 /5
Comments are closed.