நடிகர்கள் : ராகவ் ரங்கநாதன், யாமினி லக்ஷ்மணன், எல்.சண்முக சுந்தர், பிரேர்னா கண்ணா, ஐடி ஆச்சார்யா, அருண் மோகன், ஷ்ரவண் ராமகிருஷ்ணன், ஜுஹி சர்மா, பிரியதர்ஷினி, நிதிஷ், பாலாஜி, ராஜவேல்
இசை : பிரசாந்த் விஹாரி
ஒளிப்பதிவு : பிரதீப் பத்ம குமார்
இயக்கம் : எல்.சண்முக சுந்தர்
தயாரிப்பு : கோல் ஆர்.கணேசன்
எம்.பி.ஏ மாணவரான நாயகன் ராகவ் ரங்கநாதன், ஒரு புகைப்படத்தை பார்த்ததும் அதனுள் பயணித்து அங்கே என்ன நடந்திருக்கும் என்பதை அறிந்துக் கொள்ளும் அதிசய சக்தி படைத்தவராக இருக்கிறார். அவருக்கு கடவுள் கொடுத்த சக்தி, என்று அவரது நண்பர்கள் சொன்னாலும், அது அறிவியல் பூர்வமானது என்று அவர் நம்புகிறார்.
நடிகை ஒருவரது தீவிர ரசிகராக இருக்கும் ராகவ், அந்த நடிகையை நேரில் சந்திப்பதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறார். அப்போது அவருக்கு பாலியல் தொழிலாளியான யாமினி லக்ஷ்மணனின் நட்பு கிடைக்கிறது. யாமினியுடன் நட்பாக பழகி வரும் ராகவ், அவர் மீது அதிக அக்கறையும் காட்டி வரும் சூழலில், திடீரென்று யாமினி அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது தளத்தில் இருந்து விழுந்து இறந்து விடுகிறார். அவரது மரணம் கொலை தான் என்பது உறுதி செய்யப்பட்டாலும், அதற்கான ஆதாரங்கள் கிடைக்காமல் போலீஸ் விசாரணை மந்தமாகி விடுகிறது. மறுபக்கம் தனது அதிசய சக்தியை பயன்படுத்தி கொலைக்கான பின்னனி மற்றும் கொலையாளி யார் ? என்பதை கண்டுபிடிக்க முயற்சிக்கும் ராகவும் தோல்வியடைகிறார்.
இருப்பினும், எப்படியாவது கொலையாளியை கண்டுபிடித்து விட வேண்டும் என்பதில் ராகவ் தீவிரம் காட்ட, மறுபக்கம் காவல்துறையும் தனது பாணியில் தகுந்த ஆதாரங்களுடன் குற்றவாளியை பிடிப்பதில் தீவிரம் காட்டுகிறது. இறுதியில் கொலையாளியை யார் கண்டுபிடித்தது ?, அவர் யார் ?, எதற்காக யாமினியை கொலை செய்தார் ?, ஆகிய கேள்விகளுக்கான பதில்களை அறிவியல் சார்ந்த கிரைம் சஸ்பென்ஸ் திரில்லராக சொல்ல முயற்சித்திருப்பது தான் ‘பீப்’.
கதையின் நாயகனாக நடித்திருக்கும் ராகவ், அதீத புத்திசாலி மற்றும் நம்ப முடியாத அறிவியல் சக்திப் படைத்த மனிதர் என்ற கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். காவல்துறையையே மிஞ்சும் அளவுக்கு புலன்விசாரணை மேற்கொள்ளும் ராகவ், பல இடங்களில் கொஞ்சம் அதிகமாக பேசினாலும், தன் கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும்படி நடித்திருக்கிறார்.
பாலியல் தொழிலாளி சுனைனா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் யாமினி லக்ஷ்மணன், அரை பாவாடை, குட்டை டவுசர் என்று அறைகுறை ஆடைகளில் மட்டும் இன்றி புடவையிலும் கவர்ச்சி காட்டி பார்வையாளர்களை கிரங்கடித்து விடுகிறார். நடிப்பிலும் எந்தவித குறையும் இன்றி பயணித்திருக்கிறார்.
பேராசிரியர் சிதம்பரம் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் எல்.சண்முக சுந்தரம், ”இந்த பூனையும் பால் குடிக்குமா ?” என்பதற்கு ஏற்ப அப்பாவியான முகத்தை வைத்துக்கொண்டு செய்யும் விசயங்கள் அனைத்தும், “அடப்பாவி…” என்று சொல்ல வைக்கிறது. கதாபாத்திரற்கு ஏற்ப தனது முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு அவர் வெளிப்படுத்தும் நடிப்பு, அவரது கதாபாத்திரத்திற்கும், படத்திற்கும் பலம் சேர்த்திருக்கிறது.
நடிகை நயனா கபூராக நடித்திருக்கும் ஐடி ஆச்சார்யா, நாயகனின் நண்பர்களாக நடித்திருக்கும் பிரேர்னா கண்ணா, அருண் மோகன், ஷ்ரவண் ராமகிருஷ்ணன், ஜுஹி சர்மா, போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் நித்திஷ், சப் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் பாலாஜி என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் அதிகம் பரிட்சயம் இல்லாதவர்களாக இருந்தாலும், கதாபாத்திரங்களுக்கு ஏற்ப நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் பிரதீப் பத்ம குமார், இசையமைப்பாளர் பிரசாந்த் விஹாரி, படத்தொகுப்பாளர்கள் அபிஷேக் மற்றும் விக்னேஷ்.ஆர்.எல், கலை இயக்குநர் உமேஷ் குமார், சண்டைப்பயிற்சி இயக்குநர் ராம் குமார் ஆகியோர் குறிப்பிட்ட ஒரு வட்டத்திற்குள் பயணித்திருந்தாலும், கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் பாணிக்கு தேவையான அனைத்து அம்சங்களையும் படத்தில் திறம்பட கையாண்டிருக்கிறார்கள்.
நம்ப முடியாத ஒரு விசயத்தை அறிவியல் பூர்வமாக சொல்லி, இப்படியும் நடக்கலாம்..!, என்று நாயகனின் சக்தியை விளக்கியிருக்கும் இயக்குநர் எல்.சண்முக சுந்தரம், அதனுடன் கிரைம் திரில்லர் சப்ஜக்ட்டை இணைத்து சொல்லிய விதம் படத்திற்கு சுவாரஸ்யம் சேர்த்திருக்கிறது.
அறிவியல் சார்ந்த கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் பாணியிலான கதை என்றாலும், அதை கமர்ஷியலாக நகர்த்தி சென்று, எளிமையான முறையில் புரிய வைத்திருக்கும் இயக்குநர் எல்.சண்முக சுந்தர், இரண்டாம் பாதி படத்தை விறுவிறுப்பாக நகர்த்தி திரில்லர் உலகத்தில் ரசிகர்களையும் பயணிக்க வைத்திருக்கிறார்.
குற்றவாளி யார் ? என்ற சஸ்பென்ஸை உடைந்த பிறகும், எதற்காக கொலை நடந்தது ? என்ற பாணியில் விறுவிறுப்பு குறையாமல் இறுதி வரை திரைக்கதையை விறுவிறுப்பாக நகர்த்தி சென்றிருக்கும் இயக்குநர் சண்முக சுந்தர், தான் சொல்ல வந்ததை நேர்த்தியாக சொல்லிய விதம் பாராட்டுக்குரியது.
ரேட்டிங் 3/5
Comments are closed.