‘கோல்ட் கால்’ விமர்சனம்

21

நடிகர்கள் : சித்து மூலிமணி, சந்தோஷ், ஸ்ரீ வைஷ்ணவ், கிருஷ்ணா விஜய், பாலாஜி, ஸ்ரீகாந்த், அமிதா ரங்கநாதா, நிஷா ஹெக்டே, மேரி லிட்டி & கீர்த்தனா புல்கி
இசை : பிரணவ் கிரிதரன்
ஒளிப்பதிவு : சரவணன்
இயக்கம் : தம்பிதுரை
தயாரிப்பு : வாக்த்ரோவ் எண்டர்டெயின்மெண்ட் – கேசவ மூர்த்தி

அறிமுக இயக்குநர் தம்பிதுரை இயக்கத்தில், புதுமுகங்கள் நடிப்பில் உருவாகியுள்ள ‘கோல்ட் கால்’ ரசிகர்களை கூலாக்குகிறதா ? அல்லது சூடாக்குகிறதா ?, விமர்சனத்தை பார்ப்போம்.

பெங்களூரில் உள்ள நிறுவனம் ஒன்றில் விற்பனையாளர் பணியில் சேரும் வெவ்வேறு மாநிலத்தை சேர்ந்த சித்து மூலிமணி, சந்தோஷ், ஸ்ரீ வைஷ்ணவ், கிருஷ்ணா விஜய் ஆகிய நான்கு பேரும் நண்பர்களாகிறார்கள். விற்பனையாளர்கள் பணி கடினமானது என்றாலும், நான்கு நண்பர்களும் அதை மகிழ்ச்சியாக செய்கிறார்கள். இருப்பினும் அவர்களது நிறுவனம் எதிர்பார்க்கும் முன்னேற்றம் கிடைக்காததால் உயர் அதிகாரியின் கோபத்திற்கு ஆளாகிறார்கள்.

இதற்கிடையே, தொழிலதிபர் ஒருவரது மகன் கடத்தப்பட, அந்த கடத்தல் குற்றத்தின் பின்னணியில் நான்கு நண்பர்கள் இருப்பதாக காவல்துறை அறிவிக்கிறது. இதனால் ஒட்டுமொத்த காவல்துறையும் நான்கு பேரையும் தேடுகிறது. பிரச்சனையில் இருந்து தப்பிப்பதற்காக, தங்களது விற்பனையாளர் பணி மற்றும் அதற்கான பயிற்சியை பயன்படுத்தி தங்கள் மீது விழுந்த பழியை போக்கி, கடத்தப்பட்ட சிறுவனையும் காப்பாற்ற முடிவு செய்யும் நண்பர்கள், அதில் வெற்றி பெற்றார்களா ? இல்லையா ? என்பதை காமெடியாக சொல்வது தான் ‘கோல்ட் கால்’.

விற்பனையாளர் பணி சார்ந்த மொழியாக கோல்ட் கால் (Cold Call) என்ற வார்த்தை கடைபிடிக்கப்படுகிறது. கதை விற்பனையாளர்கள் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை மையப்படுத்தியது என்பதால், இந்த தலைப்பை வைத்திருக்கிறார்கள்.

கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் சித்து மூலிமணி, சந்தோஷ், ஸ்ரீ வைஷ்ணவ், கிருஷ்ணா விஜய் ஆகியோர் தமிழுக்கு புதியவர்கள் என்றாலும் தங்களது பணியை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.

தமிழகம், கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம் மற்றும் கேரளா என்று நான்கு மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்கள் தான் கதையின் நாயகர்கள் என்பதால் அந்த மாநிலங்களை சேர்ந்த இளைஞர்களாக தேர்வு செய்து நடிக்க வைத்திருக்கிறார்கள். நான்கு பேரும் ஒவ்வொரு வகையில் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.

நாயகிகளாக நடித்திருக்கும் அமிதா ரங்கநாதா, நிஷா ஹெக்டே, மேலி லிட்டி, கீர்த்தனா புல்கி ஆகியோரும் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.

நிறுவனத்தின் மேலாளர், விற்ப்னையாளர்களின் பயிற்சியாளர் என்று மற்ற கதாபாத்திரங்களில் நடித்தவர்களும் பொருத்தமான தேர்வு.

சரவணனின் ஒளிப்பதிவு எளிமையாக இருந்தாலும் கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. பிரணவ் கிரிதரனின் இசையில் பாடல்கள் அனைத்தும் கமர்ஷியல் அம்சங்கள் நிறைந்ததாகவும், கேட்கும்படியும் இருக்கிறது. பின்னணி இசை அளவு. சுரேஷ் ஆறுமுகத்தின் படத்தொகுப்பு பணியிலும் குறையில்லை.

விற்பணையாளர்கள் பணியில் இருக்கும் நான்கு இளைஞர்களின் வாழ்வில் நடக்கும் கஷ்ட்டமான சம்பவங்களை காமெடியாகவும், ருசிகரமாகவும் சொல்லியிருக்கும் இயக்குநர் தம்பிதுரை, படம் முழுவதையும் கலகலப்பாக நகர்த்தி ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தியிருக்கிறார்.

விற்பனையாளர்கள் பணி மற்றும் அவர்களது பணிச்சுமை பற்றி மட்டும் இன்றி, அவர்கள் என்ன பொருளை விற்பனை செய்கிறார்கள், என்பதை கூட சொல்லாமல், சுமார் இரண்டு மணி நேரம் படத்தை ஜாலியாக நகர்த்தி சென்றிருக்கும் இயக்குநர் தம்பிதுரை,
சிறிய பட்ஜெட்டில் ஒரு நிறைவான கமர்ஷியல் படத்தை கொடுத்திருக்கிறார்.

ரேட்டிங்3 / 5

Comments are closed.