‘தி டார்க் ஹெவன்’ (The Dark Heaven) விமர்சனம்

18

நடிகர்கள் : சித்து, தர்ஷிகா, ரித்விகா, பிரதீப், வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, ஜெயக்குமார், அருள் டி சங்கர், சத்தியா, சாப்ளின் பாலு
இசை : சக்தி பாலாஜி
ஒளிப்பதிவு : மணிகண்டன் பிகே
இயக்கம் : பாலாஜி
தயாரிப்பு : கோதை என்டர்டெயின்மென்ட் மற்றும் எம்எஸ் ஸ்விஸ் ஃபிலிம் ஃபேக்டரி

கிரைம் திரில்லர் திரைப்படமான ‘தி டார்க் ஹெவன்’ ரசிகர்களை இருள் உலகத்தில் மூழ்கடித்து திகைக்க வைக்கிறதா ? , விமர்சனத்தை பார்ப்போம்.

இளம் பெண் மாயம், அவரை தேடி பயணிக்கும் போது அந்த பெண்ணின் காதலர் மற்றும் தோழி இருவரும் மாயம். மூவர் மாயம் குறித்து விசாரணையை தொடங்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர், அடுத்த சில நாட்களில் மூவரையும் சடலமாக மீட்கிறார். கொடூரமாக கொலை செய்யப்பட்ட இந்த மூவர் பின்னணி குறித்து தொடர்ந்து விசாரிக்கும் போது, சைக்கோ கொலையாளி உள்ளே வருகிறார். அவரை போலீஸ் ஒரு புறம் தேட மறுபுறம் மேலும் இரண்டு கொலைகள் நடப்பதோடு, ஒரே நேரத்தில் மூன்று இடங்களில் சைக்கோ கொலையாளி இருக்கும் தகவல் நாயகன் சித்துவுக்கு கிடைக்கிறது. அதில் ஒன்று அவரது வீடு. குழப்பத்தோடு தனது மனைவியை காப்பாற்ற வீட்டுக்கு விரைகிறார். ஆனால், ஒரு காவலர் என்று கொலைகள் தொடர்கிறது.

இதற்கிடையே தொடர் கொலைகளுக்கும் சைக்கோ கொலையாளிக்கும் தொடர்பில்லை என்ற உண்மையை சித்து கண்டுபிடிப்பதோடு, கொலையாளி மிக சாதாரணமாக நம் அருகே தான் நடமாடிக் கொண்டிருப்பதையும் அறிகிறார். யார் அந்த கொலையாளி ?, எதற்காக இந்த கொலைகள், அதை எப்படி நாயகன் சித்து கண்டுபிடிக்கிறார், என்பது தான் ‘தி டார்க் ஹெவன்’ படத்தின் கதை.

தொடர் கொலைகள், கொலையாளி மற்றும் பின்னணியை கண்டுபிடிக்கும் காவல்துறை அதிகாரி, என்ற சாதாரண ஒன்லைனாக இருந்தாலும், அதை திரைக்கதையாக்கிய விதத்தில் இயக்குநர் பாலாஜி ரசிகர்களை திகைக்க வைத்திருக்கிறார்.

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் நாயகனாக அறிமுகமாகியிருக்கும் சித்து, முதல் படத்திலேயே பலவித உணர்வுகளை வெளிப்படுத்தும் அழுத்தமான கதாபாத்திரத்தில் அமர்க்களமாக நடித்திருக்கிறார். அதிகம் பேசாமல், உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி பயணிக்க கூடிய காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தை சித்து மிக சிறப்பாக கையாண்டிருக்கிறார்.

சித்துவின் மனைவியாக நடித்திருக்கும் தர்ஷிகா, மலை கிராமத்து பெண்ணாக நடித்திருக்கும் ரித்விகா, போலீஸ் கான்ஸ்டபிளாக நடித்திருக்கும் பிரதீப், வேல ராமமூர்த்தி, நிழல்கல் ரவி, ஜெயக்குமார், அருள் டி.சங்கர், சத்தியா, சாப்ளின் பாலு உள்ளிட்ட படத்தில் நடித்திருக்கும் அனைத்து நட்சத்திரங்களும் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான தேர்வாக பயணித்திருக்கிறார்கள். சிறு சிறு கதாபாத்திரங்கள் மீதும் பார்வையாளர்கள் கவனம் திரும்பும் வகையில் திரைக்கதை எழுதப்பட்டிருப்பதால் அனைத்து நடிகர்களும் மக்கள் மனதில் நின்று விடுகிறார்கள்.

ஒளிப்பதிவாளர் மணிகண்டன் பி.கே, குறிப்பிட்ட ஒரே ஒரு லொக்கேஷனில் பெரும்பாலான காட்சிகளை படமாக்கியிருந்தாலும், அதை பல்வேறு கோணங்களில் காட்சிப்படுத்தி, பார்வையாளர்களை பதட்டப்பட வைத்திருக்கிறார். இசையமைப்பாளர் சக்தி பாலாஜி, தனது பின்னணி இசை மூலம் பதட்டத்தை அதிகரித்திருப்பதோடு, வயலின் பீஜியம் மூலம் படம் பார்ப்பவர்களை பீதியடைய செய்திருக்கிறார். படத்தொகுப்பாளர் ராஜா ஆறுமுகம், ஆரம்பக் காட்சி முதல் இறுதிக் காட்சி வரை படத்தின் மீதான எதிர்பார்ப்பு குறையாமல் காட்சிகளை தொகுத்திருக்கிறார்.

எளிமையான கதைக்கரு என்றாலும், அதை மர்மம் நிறைந்த கிராம, அமானுஷ்யமா ? அல்லது அதிசயமா ?, என்று சொல்ல முடியாத ஒரு புத்தகத்தின் பின்னணியை இணைத்து அமைத்த திரைக்கதை படத்தை வித்தியாசமாக்கியிருக்கிறது.

கதையின் ஆரம்பத்திலேயே ரசிகர்களை கதைக்குள் இழுத்து விடும் இயக்குநர் பாலாஜி, அடுத்தடுத்த காட்சிகள் மூலம் திக் திக் நிமிடங்களோடு பயணிக்க வைத்து, எதிர்பாரத திருப்பங்கள் மூலம் திகைக்க வைத்து, சூப்பரான கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் படத்தை கொடுத்திருக்கிறார்.

இவர் கொலையாளியாக இருப்பாரோ…, எதற்காக இந்த கொலைகள் ?, என்று ரசிகர்கள் மனதில் காட்சிக்கு காட்சி கேள்விகளை எழுப்பினாலும், அவர்களது யூகங்கள் அனைத்தையும் பொய்யாக்கி எதிர்பார்க்காத கிளைமாக்ஸ் மூலம் கைதட்டல் பெற்றிருக்கும் இயக்குநர் பாலாஜி, ஒரு கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் கதையை எப்படி கையாளவது, படம் முழுவதும் ரசிகர்களின் கவனத்தை சிதறாமல் வைத்துக்கொள்வது என்ற வித்தையை மிக சிறப்பாக செய்து வெற்றி பெற்றிருக்கிறார்.

ரேட்டிங் 4/5

Comments are closed.