’பரிமளா அண்ட் கோ’ விமர்சனம்

22

நடிகர்கள் : ஜெயராம், ஊர்வசி, மிஷ்கின், யோகி பாபு, சாண்டி, சந்தோஷ் சோபன், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, அனந்திகா சனில்குமார், பூர்ணிமா ரவி, காயத்ரி
இசை : ஃபாக்ஸன்
ஒளிப்பதிவு : ஜார்ஜ் சி.வில்லியம்ஸ்
இயக்கம் : பாண்டிராஜ்
தயாரிப்பு : லைகா புரொடக்‌ஷன்ஸ், தமிழ்குமரன் புரொடக்‌ஷன்ஸ், பசங்க புரொடக்‌ஷன்ஸ் – சுபாஷ்கரன், ஜி.கே.எம்.தமிழ்குமரன், பாண்டிராஜ்

அப்பா ஜெயராம், அம்மா ஊர்வசி, மகள்கள் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி மற்றும் அனந்திகா சனில்குமார், நடுத்தர குடும்பத்தின் அனைத்து சண்டைகளும், சச்சரவுகளும் நிறைந்த இந்த குடும்பம் அமைதியாக வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள். மூத்த மகள் ஒருவரை காதலிக்க, இளையமகளை ஏரியா ரவுடி சாண்டி காதலிக்கிறார். அவரது காதலை ஏற்க மறுப்பதால், அவர் தொடர்ந்து காதல் தொல்லை கொடுக்க, அவரது தாதா அம்மாவும் மகனின் காதலுக்காக ஜெயராம் குடும்பத்தினரை மிரட்ட செய்கிறார். இந்த காதல் தொல்லையால் குடும்பம் தங்களது நிம்மதியை இழந்து தவிக்க, ஒரு கட்டத்தில் சாண்டியை கொலை செய்து விடலாமா ? என்று திட்டம் போடுகிறார்கள்.

அவர்கள் திட்டம் போடும் சில நாட்களில் சாண்டை கொலை செய்யப்படுகிறார். கொலை வழக்கை விசாரிக்கும் காவல்துறை அதிகாரி மிஷ்கினுக்கு, ஜெயராம் குடும்பத்தின் மீது சந்தேகம் ஏற்பட அவர் தன் பாண்யில் விசாரணையை தொடங்குகிறார். மறுபக்கம் குடும்பத்தினரே இவர் தான் கொலை செய்திருப்பாரா…!, என்று ஒருவருக்கொருவர் சந்தேகப்பட தொடங்குகிறார்கள். ஊவசியின் தம்பி மற்றும் ஜெயராமின் தம்பி வருகிறார்கள். அவர்கள் மீதும் போலீஸுக்கு சந்தேகம் வருகிறது.

இப்படி பலர் மீது சந்தேகம் ஏற்படும் சூழலில், எதிர்பார்க்காத திருப்பத்துடன் சாண்டி கொலைக்கான பின்னணியை இயக்குநர் பாண்டிராஜ், சுவாரஸ்யமாகவும், காமெடியாகவும் சொல்வது தான் ‘பரிமளா அண்ட் கோ’ படத்தின் மீதிக்கதை.

ஜெயராம் – ஊர்வசி ஜோடியின் இயல்பான நடிப்பும், டைமிங் காமெடி வசனங்களும் சிரிப்பால் திரையரங்கை அதிர வைக்கிறது. இருவருக்கான கெமிஸ்ட்ரி மிக சிறப்பாக வேலை செய்திருப்பது படத்திற்கு பிளஸாக அமைந்திருக்கிறது.

காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் இயக்குநர் மிஷ்கின், தனது தனித்துவமான நடிப்பு மூலம் மிரட்டியிருக்கிறார். ஆரம்பத்தில் சாதாரணமாக வரும் இவரது கதாபாத்திரம் கிளைமாக்ஸ் நெருக்கத்தில் எதிர்பார்க்காத திருப்பம் மூலம் பார்வையாளர்களை திகைக்க வைக்கிறது.

சாண்டி புதிய பரிணாமத்தில் நடிப்பில் மிளிர்கிறார். நடன இயக்குநர் என்ற பிம்பத்தை தாண்டிய நடிப்பை வெளிப்படுத்தி கவனம் ஈர்க்கிறார். அக்கா, தங்கையாக நடித்திருக்கும் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி மற்றும் அனந்திகா சனில்குமார் ஆகியோரது குறும்புத்தனமான நடிப்பு நடுத்தர குடும்ப இளம் பெண்களை பிரதிபலித்திருக்கிறது. ஜி.கே.எம்.தமிழ்குமரன், யோகி பாபு, பூர்ணிமா ரவி என அனைத்து நடிகர்களும் கதாபாத்திரங்களுக்கு பொறுத்தமான தேர்வாக பயணித்து படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.

ஜார்ஜ் சி.வில்லியம்ஸின் ஒளிப்பதிவில் காட்சிகள் கண்களை கவரும் விதத்தில் மிளிர்கிறது. ஃபாக்ஸன் இசையில் பாடல்கள் அனைத்தும் திரும்ப திரும்ப கேட்கும் துள்ளல் ரகம். பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் பயணித்திருக்கிறது. படத்தொகுப்பாளர் பிரதீப் இ.ராகவ் மற்றும் கலை இயக்குநர் டி.ராமலிங்கம் ஆகியோரது பணி படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

பெண்களுக்கு எதிராக நடக்கும் ஒரு பிரச்சனையை கையில் எடுத்திருக்கும் இயக்குநர் பாண்டிராஜ், அதை சோகமாக சொல்லாமல் நகைச்சுவையாக சொல்லியிருக்கிறார். திருப்பங்கள் நிறைந்த திரைக்கதை, சிறு சிறு கதாபாத்திரங்களில் கூட பரிட்சயமான நடிகர்கள், படம் முழுவதும் குறையாத காமெடி காட்சிகள் என்று பயணிக்கும் கதை, ஆரம்பம் முதல் முடிவு வரை ரசிகர்களை சிரிக்க வைத்து மகிழ்விக்கின்றன.

சமூகத்திற்கான ஒரு முக்கியமான மெசஜை முழுக்க முழுக்க காமெடியாக சொல்லி சிரிக்க வைக்கும் இயக்குநர் பாண்டிராஜ், இறுதியில் இளைஞர்களுக்கான அறிவுரை ஒன்றை சொல்லி சிந்திக்க வைத்திருப்பதோடு, குடும்பத்துடன் பார்த்து மகிழும் ஒரு பொழுதுபோக்கு படமாக ‘பரிமளா அண்ட் கோ’-வை கொண்டாட வைத்திருக்கிஆர்.

ரேட்டிங் 3.5/5

Comments are closed.