’பிளாஸ்ட்’ விமர்சனம்

9

நடிகர்கள் : அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன், ஜான் கொக்கேன், அர்ஜுன் சிதம்பரம், பவன், பாலா ஹாசன், வினோத் சாகர்
இசை : ரவி பஸ்ரூர்
ஒளிப்பதிவு : அருண் ராதாகிருஷ்ணன்
இயக்கம் : சுபாஷ் கே.ராஜ்
தயாரிப்பு : ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட்

கராத்தே மாஸ்டரான அர்ஜுன், தன் மகள் ப்ரீத்தி முகுந்தனுக்கு சிறு வயதில் இருந்தே கராத்தே சொல்லிக் கொடுப்பதோடு, எங்கு தப்பு நடந்தாலும் தட்டி கேட்க வேண்டும் என்ற தைரியத்தையும் சொல்லிக் கொடுக்கிறார். அவரது மனைவி அபிராமி டிரைலரிங் கலைஞராகவும், அவரது தம்பி விவேக் பிரசன்னா மெடிக்கல் ஷாப் வைத்து நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், மிகப்பெரிய தொழிலதிபரான ஜான் கொக்கேன், ரூ.7000 கோடி மதிப்புள்ள ஒரு டீலிங்கை முடிப்பதற்காக அமைச்சருக்கு ரூ.1000 கோடியை லஞ்சமாக கொடுக்க சம்மதித்து, அந்த பணத்தை அர்ஜுன் சிதம்பரம் மூலம் அமைச்சரின் வங்கி கணக்கில் மாற்றும் பணியை மேற்கொள்கிறார்.

இந்த நிலையில், ப்ரீத்தி முகுந்தனிடம் சயின் பறிக்க முயற்சிக்கும் ஒரு குற்றவாளியை அவர் அடித்து துவைத்து போலீஸில் பிடித்து கொடுக்கிறார். சிறிய அளவிலான இந்த குற்றத்திற்காக தங்களது தரப்பில் இருந்து ஒரு புகார் அளிக்க அர்ஜுனும், ப்ரீத்தி முகுந்தனும் காவல் நிலையம் செல்லும் போது தான், இது சாதாரண பிரச்சனை இல்லை என்பது தெரிய வருவதோடு, இந்த பிரச்சனைக்கும் தொழிலதிபர் ஜான் கொக்கேனின் திட்டத்திற்கும் தொடர்பு ஏற்படுகிறது. இதனால், அர்ஜுன் குடும்பத்தில் உள்ள அனைவரது உயிருக்கும் ஆபத்து ஏற்பட, தங்களை காப்பாற்றிக் கொள்வதற்காக அதிரடியில் இறங்கும் அஜித் குடும்பத்திற்கு மற்றொரு அதிர்ச்சிகரமான உண்மை தெரிய வருகிறது. அது என்ன ?, அந்த உண்மையை அறிந்து கொண்ட அர்ஜுன் குடும்பத்தார் என்ன செய்தார்கள்? என்பது தான் படத்தின் மீதிக்கதை.

கராத்தே மாஸ்டராக நடித்திருக்கும் அர்ஜுன், இந்த வயதிலும் இப்படி பிட்டாக இருப்பது எப்படி ? என்று யோசிக்க வைப்பதோடு, தனது ஸ்டைலிஷான ஆக்‌ஷன் காட்சிகள் மூலம், தமிழ் சினிமாவில் இவரது இடத்தை நிறப்ப மற்றொருவர் வருவது கடினம் என்பதை நிரூபித்திருக்கிறார். ஆக்‌ஷன் மட்டும் இன்றி, சிறு வயது முதலே தனது மகளுக்கு தைரியம், நம்பிக்கை ஆகியவற்றை சொல்லிக் கொடுத்து வளர்ப்பவர், ஒரு சிறந்த தந்தையாகவும் பார்வையாளர்கள் மனதில் பதிந்து விடுகிறார்.

அர்ஜுனின் மனைவியாக நடித்திருக்கும் அபிராமி, அமைதி மற்றும் பொறுப்பான அம்மாவாக அறிமுகமாகி திடீரென்று அதிரடியில் இறங்குவது திரையரங்கையே அதிர வைக்கிறது.

அர்ஜுன் – அபிராமி தம்பதியின் மகளாக கதையின் நாயகியாக நடித்திருக்கும் ப்ரீத்தி முகுந்தன், உண்மையான கராத்தே வீராங்கனை போன்று சண்டைக்காட்சிகளில் நடித்திருக்கிறார். அவரது ஒவ்வொரு அடியும் எதிராளிகள் மீது இடியாக விழுவது திரையில் தெரிவதோடு, கராத்தே பாணியிலான சண்டைக்காட்சிகள் ரசிக்கும்படி இருக்கிறது. ப்ரீத்தி முகந்தன் முழுமையான ஆக்‌ஷன் மற்றும் சாசக திரைப்படங்களுக்கான நாயகிக்கான சரியான தேர்வு. நிச்சயம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களை தேர்வு செய்தால் இவருக்கான தனி இடம் உறுதி.

வில்லன்களாக நடித்திருக்கும் ஜான் கொக்கேன், அர்ஜுன் சிதம்பரம், பவன், பாலா ஹாசன், வினோத் சாகர் மற்றும் அர்ஜுன் தம்பியாக நடித்திருக்கும் விவேக் பிரசன்னா ஆகியோரது கதாபாத்திர வடிவமைப்பு மற்றும் அவர்களது திரை இருப்பு திரைக்கதைக்கு பலம் சேர்த்திருப்பதோடு, காட்சிகளின் விறுவிறுப்பை அதிகரிக்கச் செய்திருக்கிறது.

ஒளிப்பதிவாளர் அருண் ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குழுவினரின் உழைப்பு திரையில் தெரிகிறது. படம் முழுவதும் ஆக்‌ஷன் காட்சிகள் இருந்தாலும் அதை பல கோணங்களில் படமாக்கி, ஒவ்வொரு ஆக்‌ஷன் காட்சியையும் ரசிக்க வைத்திருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் ரவி பஸ்ரூரின் பின்னணி இசை திரைக்கதையின் வேகம் மற்றும் காட்சிகளின் விறுவிறுப்புக்கு எக்ஸ்ட்ரா கியரை போட்டு அதிவேகத்தில் நகர்த்தியிருப்பதோடு, மென்மையான இசை மூலம் சண்டைக்காட்சிகளை ரசிக்க வைத்திருக்கிறார். சண்டைக்காட்சிகள் என்றாலே காதை கிழிக்கும் சத்தம் அதிகம் இருக்க வேண்டும் என்ற பழைய பாணியை மாற்றி, மெலோடி கலந்த பின்னணி இசை மூலம் சண்டைக்காட்சிகளையும் காதல் காட்சிகள் போல் கவித்துவமாய் காட்டியிருக்கிறார்.

இயக்குநர் கற்பனை செய்த காட்சிகளுக்கு உயீர் கொடுத்தவர்களின் முக்கியமானவர் சண்டைப்பயிற்சி இயக்குநர் பீனிக்ஸ் பிரபு. அர்ஹுனின் அறிமுக சண்டைக்காட்சி முதல், ஒட்டுமொத்த குடும்பமே இணைந்து மேற்கொள்ளும் ஆக்‌ஷன் வரை படத்தில் இடம்பெறும் அனைத்து ஆக்‌ஷன் காட்சிகளையும் மிரட்டலாக மட்டும் இன்றி வியக்க வைக்கும் விதத்தில் வடிவமைத்திருக்கிறார். குறிப்பாக ப்ரீத்தி முகுந்தன் மற்றும் அபிராமி ஆகியோரை பயன்படுத்திய விதம், அவர்களுக்கான சண்டைக்காட்சிகளை வடிவமைத்த விதம் பாராட்டுக்குரியது. இருவரும் நிஜமாகவே கராத்தே பயிற்சி பெற்றிருப்பார்களோ…!, என்று ஆச்சரியப்படும் அளவுக்கு அவர்களது சண்டைக்காட்சிகள் வியக்க வைக்கிறது.

படத்தொகுப்பாளர் பிரதீப் ஈ.ராகவ், வேகமான காட்சிகளை அதிவேகமாக நகர்த்தும்படி காட்சிகளை தொகுத்திருந்தாலும், அனைத்தையும் ரசிக்க வைக்கிறார். சண்டைக்காட்சிகள் தான் படத்தின் முக்கிய பலம் என்பதை உணர்ந்து பணியாற்றி படத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறார்.

சுவாரஸ்யமான திரைக்கதை, விறுவிறுப்பான காட்சிகள், ரசிக்கும்படியான ஆக்‌ஷன் காட்சிகள், எதிர்பார்க்கத திருப்பங்கள் என்று படத்தின் துவக்கம் முதல் முடிவு வரை ரசிகர்களின் கவனம் முழுவதை ஈர்த்து விடும் அளவுக்கு படத்தை இயக்கியிருக்கும் சுபாஷ் கே.ராஜ், குடும்ப படத்தில் ஒரு அதிரடியான ஆக்‌ஷன் படத்தை கொடுத்து மிகப்பெரிய ஆக்‌ஷன் விருந்து படைத்திருக்கிறார்.

கதாபாத்திரங்களின் வடிவமைப்பு மற்றும் அவர்களை திரைக்கதையோடு பயணிக்க விதம் ஆகியவை படத்தை அணு அணுவாக ரசிக்க வைக்கிறது. குறிப்பாக ப்ரீத்தி முகுந்தனின் ஆக்‌ஷன் காட்சிகளும், அபிராமியின் அதிரடியான விஸ்வரூபமும் திரைக்கதைக்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது.

எந்தவிதமான லாஜிக்கும் பார்க்காமல் இரண்டு மணி நேரம் போனதே தெரியாதபடி இருக்க வேண்டும் என்றால், அதற்கு சரியான படம் ‘பிளாஸ்ட்’.

ரேட்டிங் 4/5

Comments are closed.