’தி பெட்’ (The Bed) விமர்சனம்

190

நடிகர்கள் : ஸ்ரீகாந்த், சிருஷ்டி டாங்கே, பிளாக் பாண்டி, விஜே பப்பு, விக்ரம், ஜான் விஜய், ஹரி பிரியா, திவ்யா
இசை : தாஜ்நூர்
ஒளிப்பதிவு : கோகுல்
இயக்கம் : எஸ்.மணிபாரதி
தயாரிப்பு : ஆஞ்சநேயா புரொடக்‌ஷன்ஸ், ஸ்ரீநிதி புரொடக்‌ஷன்ஸ் – கே.கந்தசாமி, கே.கணேசன், வி.விஜயகுமார், வி.லோகேஷ்வரி விஜயகுமார்

ஐடி துறையில் பணியாற்றும் நாயகன் ஸ்ரீகாந்த் மற்றும் அவரது நண்பர்களான பிளாக் பாண்டி, விஜே பப்பு, விக்ரம் ஆகியோர் வார விடுமுறை நாட்களில் ஊட்டிக்கு போக முடிவு செய்வதோடு, ஒரு பெண்ணையும் உடன் அழைத்துச் சென்று அவருடன் உல்லாசமாக இருக்க நினைக்கிறார்கள். அதன்படி, விபச்சார தொழில் செய்யும் நாயகி சிருஷ்டி டாங்கேவை நண்பர்கள் அழைத்துக் கொண்டு ஊட்டி செல்கிறார்கள்.

சிருஷ்டி டாங்கேவின் அழகை நண்பர்கள் அனுபவிக்க துடிக்க, ஸ்ரீகாந்த் மட்டும் அவரது அழகை ரசிப்பதோடு, அவரது நண்பர்கள் அவளை தொடாதவாறு பார்த்துக் கொள்கிறார்கள். இதனால் நண்பர்கள் எப்படியாவது நினைத்ததை அடைந்தே தீர வேண்டும் என்ற அதீத ஆசையோடு இருக்க, திடீரென்று சிருஷ்டி டாங்கே மாயமாகி விடுகிறார். அவருடன் நான்கு நண்பர்களில் ஒருவரும் மாயமிவிடுகிறார்.

மாயமான இருவரையும் ஊட்டி முழுவதும் நண்பர்கள் தேடிக் கொண்டிருக்க, அவர்கள் கிடைத்தார்களா ? இல்லையா ? என்பதை காதலுடன், எதிர்பார்க்காத குற்றத்தையும் சேர்த்து சொல்வது தான் படத்தின் மீதிக்கதை.

நாயகனாக நடித்திருக்கும் ஸ்ரீகாந்த், இன்னும் அதே இளமையுடன் இருக்கிறார். அந்த இளமைத் தனத்திற்கு ஏற்ற கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் சிருஷ்டி டாங்கே, அழகோடு கொஞ்சம் கவர்ச்சியாகவும் வலம் வந்து பார்வையாளர்களை கவர்கிறார். அளவான நடிப்பு மற்றும் கவர்ச்சியில் படம் முழுவதும் ரசிக்க வைத்திருப்பவர், ஸ்ரீகாந்த் நண்பர்களைப் போல் படம் பார்க்கும் பார்வையாளர்களையும் ஏங்க வைத்து விடுகிறார்.

ஸ்ரீகாந்தின் நண்பர்களாக நடித்திருக்கும் பிளாக் பாண்டி, விஜே பப்பு, விக்ரம், போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் ஜான் விஜய், நாயகியின் அம்மாவாக நடித்திருக்கும் திவ்யா, போலீஸ் சப் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் தேவி பிரியா ஆகியோர் அளவாக நடித்து கதாபாத்திரங்களுக்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.

தாஜ்நூர் இசையில் ஒரு பாடல் என்றாலும், முனுமுனுக்க வைக்கும் ரகமாக இருக்கிறது. பின்னணி இசை கதைக்களத்திற்கு ஏற்ப பயணித்திருக்கிறது.

ஒளிப்பதிவாளர் கோகுல், ஊட்டியின் வழக்கமான பகுதிகளை தவிர்த்துவிட்டு, காதல் மற்றும் திரில்லர் ஜானருக்கு ஏற்ற வகையிலான புதிய லொக்கேஷன்களில் காட்சிகளை படமாக்கி கதைக்களத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறார்.

எழுதி இயக்கியிருக்கும் எஸ்.மணிபாரதி, உணர்வுப்பூர்வமான காதல் கதை அதே சமயம் யூகிக்க முடியாத சஸ்பென்ஸ் திரில்லர் என இரண்டு ஜானர்களை அளவாக கையாண்டு இரண்டு மணி நேரம் போனதே தெரியாதவாறு படத்தை நகர்த்தி செல்கிறார்.

பாலியல் தொழில் செய்யும் நாயகியை மையப்படுத்திய கதைக்கரு என்றாலும், எந்தவித ஆபாசமும் இன்றி காட்சிகளை அழகியலோடு படமாக்கியிருப்பவர், தான் சொல்ல வந்த கதையை மிக நாகரீகமாகவும், எளிமையாகவும் திரைக்கதையாக்கி இயக்கியிருக்கிறார்.

ரேட்டிங் 3.5/5

Comments are closed.