நடிகர்கள் : ஏகன், பிரிகிடா சகா, யோகி பாபு, சத்யா தேவி, லியோ சிவக்குமார், ஐஸ்வர்யா தத்தா, நவீன், குட்டிப்புலி தினேஷ்,
இசை : என்.ஆர்.ரகுநந்தன்
ஓளிப்பதிவு : அசோக்ராஜா
இயக்கம் : சீனு ராமசாமி
தயாரிப்பு : டாக்டர்.டி.அருளானந்து, மேத்தீவ் அருளாந்து
கணவன் – மனைவிக்கு இடையே ஏற்படும் பிரச்சனையால் சிறுவயதில் நாயகன் ஏகனும், அவரது தங்கையும் கைவிடப்படுகிறார்கள். ஆதரவளித்த பாட்டியும் இறந்துவிட, அவர்களுக்கு கோழிப்பண்ணை நடத்தும் யோகி பாபு அடைக்கலம் கொடுக்கிறார். பெற்றோர் இல்லாத குறை தெரியாமல் தங்கையை வளர்க்க நினைக்கும் நாயகன் ஏகனின் வாழ்க்கையில் புது புது உறவுகள் வருகிறார்கள். அவர்கள் மூலம் அவர் நினைத்தது நடந்ததா? இல்லையா?, விட்டுச் சென்ற பெற்றோர் என்ன ஆனார்கள்? என்பதை மனித உணர்வுகளை மேம்படுத்தும் படைப்பாக கொடுத்திருப்பது தான் ‘கோழிப்பண்ணை செல்லதுரை’.
செல்லதுரை என்ற கதாபாத்திரத்தில் நாயகனாக நடித்திருக்கும் ஏகன், அறிமுகம் படம் போல் அல்லாமல் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். அசல் கிராமத்து இளைஞராக வலம் வருபவர், பாசம், காதல், சோகம் ஆகிய அனைத்து உணர்வுகளையும் வெளிப்படுத்தக்கூடிய கனமான கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் பிரிகிடா சாகாவுக்கு சின்ன வேடம் தான் என்றாலும், அதை நிறைவாக செய்து மக்கள் மனதில் இடம் பிடித்துவிடுகிறார்.
யோகி பாபு தனது வழக்கமான காமெடி கலாட்டாவை ஒதுக்கி வைத்துவிட்டு, அழுத்தமான கதாபாத்திரத்தில் நேர்த்தியாக நடித்து, தன்னால் இப்படிப்பட்ட குணச்சித்திர வேடங்களையும் கையாள முடியும் என்று நிரூபித்திருக்கிறார்.
நாயகனின் தங்கையாக நடித்திருக்கும் சத்யாதேவி, கதையின் மையம் என்பதை உணர்ந்து நடித்திருக்கிறார்.
ஐஸ்வர்யா தத்தா, லியோ சிவக்குமார், நவீன், குட்டிப்புலி தினேஷ் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் தங்களது பங்களிப்பை சரியாக செய்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் அசோக்ராஜ தனது கேமரா மூலம் பார்வையாளர்களுக்கு கதை நடக்கும் கிராமத்தில் பயணித்த அனுபவத்தை கொடுத்திருக்கிறார்.
என்.ஆர்.ரகுநந்தன் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசை அளவு.
தனது ஒவ்வொரு படங்களிலும் மனித உணர்வுகள் பற்றி பேசி வரும் இயக்குநர் சீனு ராமசாமி, இந்த படத்தில் மனித உணர்வுகளுடன், ஒரு மனிதனின் வாழ்க்கை பயணத்தை வைத்துக்கொண்டு ஒரு தெய்வீக பயண உணர்வை பார்வையாளர்களிடம் கடத்த முயன்றிருக்கிறார். அவரது முயற்சி சில இடங்களில் தொய்வடைவது படத்தின் பலவீனம்.
படத்தில் சில குறைகல் இருந்தாலும், அதை தவிர்த்து பார்த்தால் ஒரு மனிதனின் வாழ்க்கை எளிமையாகவும், எதார்த்தமாகவும் காட்சிப்படுத்தியிருக்கும் இயக்குநர் இயக்குநர் சீனு ராமசாமி, இந்த ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ மூலம் பார்வையாளர்களை கண்ணீர் சிந்த வைத்துவிடுகிறார்.
ரேட்டிங் 3/5
Comments are closed.