’கடைசி உலகப் போர்’ விமர்சனம்

16

நடிகர்கள் : ஹிப் ஹாப் ஆதி, அனகா, நட்டி, நாசர், கல்யாண், அழகம்பெருமாள், முனீஷ்காந்த், சிங்கம் புலி,
இசை : ஹிப் ஹாப் ஆதி
ஒளிப்பதிவு : அர்ஜுன் ராஜா
இயக்கம் : ஹிப் ஹாப் ஆதி
தயாரிப்பு : ஹிப் ஹாப் தமிழா எண்டர்டெயின்மெண்ட் – ஹிப் ஹாப் ஆதி

எதுவும் இல்லாத போது மனிதர்கள் ஒற்றுமையாக இருப்பது போல், அனைத்தும் இருக்கும் போதும் இருந்தால் எப்படி இருக்கும்!, என்ற மகத்தான கற்பனையை கருவாக வைத்துக்கொண்டு மூன்றாம் உலகப் போர் பின்னணியில், உள்ளூர் முதல் உலக அரசியல் வரை பேசியிருக்கும் ஹிப் ஹாப் ஆதியின் வித்தியாசமான முயற்சி தான் ‘கடைசி உலகப் போர்’.

ஐ.நா சபையின் ஆயுத பயிற்சி பெற்றவராக நடித்திருக்கும் ஹிப் ஹாப் ஆதி, அதற்கேற்ற முறுக்குடன் இருந்தாலும், அமைதியான முறையில் அரசியல் பேசுகிறார். காதலி கல்வி அமைச்சராகப் போகிறார் என்றதும் அவர் மூலம் சமூகத்தில் மாற்றத்தைக் கொண்டு வர நினைக்கும் அவரது முயற்சி பாராட்டத்தக்கதாக இருக்கிறது. காதல் காட்சிகள் குறைவாக இருந்தாலும், சண்டைக்காட்சிகளில் கூடுதல் கவனம் செலுத்தி பார்வையாளர்கள் கவர்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் அனகாவின் முகத்தில் தெரியும் முதிர்ச்சி, நடிப்பிலும் தெரிகிறது. கொடுத்த வேலை குறைவு என்றாலும் அதை நிறைவாக செய்திருக்கிறார்.

முதலமைச்சரின் உறவினராக நடித்திருக்கும் நட்டி நட்ராஜ், தன்னை ஒரு கிங் மேக்கர் என்று சொல்லிக் கொண்டு ஆட்சியாளர்களை ஆட்டுவிக்கும் வேலையை அமர்க்களமாக செய்திருக்கிறார். நட்டியின் வழக்கமான பாணி தான் என்றாலும், அது அவரது கதாபாத்திரத்திற்கு பலம் சேர்ப்பதோடு, அவரது கதாபாத்திரம் படத்திற்கும் பலமாக பயணிக்கிறது.

முதலமைச்சராக நடித்திருக்கும் நாசர் தனது அனுபவமான நடிப்பு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. புலிப்பாண்டி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அழகம்பெருமாள், சினிமா நடிகராக நடித்திருக்கும் ஷாரா ஆகியோர் ரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறார்கள்.

முனீஷ்காந்த், சிங்கம்புலி, ஹரீஷ் உத்தமன், கல்யாண், தலைவாசல் விஜய், குமரவேல், இளங்கோ குமணன் ஆகியோர் கொடுத்த வேலையை சரியாகச் செய்திருக்கிறார்கள்.

அர்ஜுன் ராஜா ஒளிப்பதிவு, கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் உடன் இணைந்து திரையில் பிரமாண்டமான மாயாஜாலத்தை நிகழ்த்தியிருக்கிறது.

படத்தொகுப்பாளர் பிரதீப் ஈ.ராகவ் மற்றும் சண்டைப்பாயிற்சியாளர் மகேஷ் மேத்யூ இருவரது பணியும் படத்தின் தரத்தை அதிகரிக்கச் செய்திருக்கிறது.

எழுதி இயக்கி இசையமைத்து தயாரித்திருக்கும் ஹிப் ஹாப் ஆதி, வித்தியாசமான முயற்சி மட்டும் இன்றி விபரீதமான முயற்சியும் இப்படத்தின் மூலம் எடுத்திருக்கிறார்.

உலகின் பல பகுதிகளில் நடக்கும் போர்கள் தொடர்பாக நாம் செய்தி தாழ்களில் படித்தும், தொலைக்காட்சிகளில் பார்த்தும் கடந்திருப்போம். ஆனால், அதை எதிர்கொள்ளும் அம்மக்களின் நிலை எப்ப்படி இருக்கும்?, என்பது குறித்து ஹிப் ஹாப் ஆதி யோசித்ததோடு நின்றுவிடாமல், இத்தகைய போர் இனி எங்கும் வரக்கூடாது என்ற சிந்தனையில் இந்த படத்தின் மூலம் இயக்குநர் ஹிப் ஹாப் ஆதி வித்தியாசமான முயற்சியை மேற்கொண்டுள்ளார்.

பாட்டு, நடனம், நகைச்சுவை என்ற தனது வழக்கமான பாணியை தவிர்த்து, சமூக பொறுப்புணர்வோடு தனது முதல் படத்தை தயாரித்திருக்கும் ஹிப் ஹாப் ஆதியின் இந்த வித்தியாசமான முயற்சியில் சில குறைகள் இருந்தாலும், முழுமையான திரைப்படமாக பார்க்கும் போது அந்த குறைகள் தெரியாமல் ரசிகர்களை திருப்திப்படுத்துகிறது, என்பதை மறுக்க முடியாது.

ரேட்டிங் 3.5/5

Comments are closed.