நடிகர்கள் : அங்கையற்கண்ணன், ஷரவணசக்தி, பிரனா, மயில்சாமி, டி.எம்.கார்த்திக், சாம்ஸ்
இசை : பிரித்வி
ஒளிப்பதிவு : அருண்குமார் செல்வராஜ்
இயக்கம் : குட்டிப்புலி ஷரவணசக்தி
தயாரிப்பு : முகவை பிலிம் இண்டர்நேஷ்னல்
நாயகன் அங்கையற்கண்ணனும், அவரது மாமா ஷரவணசக்தியும் மதுவுக்கு அடிமையாகி எந்த நேரமும், குவாட்டரும், ஆஃப்பும் என்று வலம் வருகிறார்கள். புதிதாக திருமணமான நாயகன் அங்கையற்கண்ணன், கால்டாக்ஸி ஓட்டி சம்பாதிக்கும் பணத்தை மதுவுக்காகவே செலவு செய்கிறார். வேலைக்கு செல்லாமல் மனைவியின் சம்பாத்தியத்தில் வாழ்ந்து வரும் ஷரவணசக்தி, எந்த நேரமும் மது மயக்கத்திலேயே இருக்கிறார்கள். இவர்களால் இவங்களது குடும்பத்தார் மட்டும் இன்றி, மற்றவர்களும் பாதிக்கப்படுகிறார்கள்.
அதன்படி, மது பழக்கத்தை விட்டுவிடும் மயில்சாமியின் குடும்பத்திலும் சிறு குழப்பத்தை ஏற்படுத்தும் இந்த மாமா – மாப்பிள்ளை குடிகாரர்கள், மயில்சாமியையும் மீண்டும் குடிப்பழகத்துக்கு அடிமையாக்கி விடுகிறார்கள். இவர்களது குடிப்பழக்கத்தால் இவர்களது வாழ்க்கையில் மிகப்பெரிய பிரச்சனை ஒன்று வருகிறது. அதை இவர்கள் எப்படி சமாளிக்கிறார்கள், அதன் பிறகும் இவர்கள் மதுப்பழக்கத்தை விடுகிறார்களா? இல்லையா? என்பது தான் திரைக்கதை.
அறிமுக நாயகன் அங்கையற்கண்ணன், மதுப்பிரியர்கள் செய்யும் அலப்பறைகளை அட்டகாசமாக செய்து ரசிக்க வைக்கிறார். கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்துபவர் எந்த ஒரு இடத்திலும் தடுமாற்றம் இன்றி நடித்து அசத்தியிருக்கிறார்.
இயக்குநர் ஷரவணசக்தி, ஹீரோவுக்கு நிகராக படம் முழுவதும் வருகிறார். மாப்பிள்ளையுடன் சேர்ந்து இவர் போதும் ஆட்டம் அமர்க்களம். அதே சமயம், வழக்கமான தனது பாணியில் நடித்து ரசிக்க வைத்தாலும் சில இடங்களில் கொஞ்சம் ஓவராக நடித்தும் இருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் பிரனா, குடும்ப பாங்காக, எளிமையாக இருந்தாலும் அழகாக இருக்கிறார். கதாபாத்திரத்தை புரிந்து உணர்வுப்பூர்வமாக நடித்து கவர்கிறார்.
ஷரவணசக்தியின் மனைவியாக நடித்திருக்கும் நடிகை, குடிகாரர்களை குணப்படுத்த வந்துவிட்டு அவர்களை விட பெரிய குடிகாரராகும் டி.எம்.கார்த்திக், துபாயில் வேலை செய்துவிட்டு மீண்டும் கிராமத்துக்கு வந்தாலும், கோட் சூட்டுடன் வலம் வரும் சாம்ஸ், மயில்சாமியின் மகளாக நடித்திருக்கும் அபி நக்ஷத்ரா, மயில்சாமி என மற்ற வேடங்களில் நடித்திருக்கும் அனைவரும் குறையில்லாமல் நடித்திருக்கிறார்கள்.
பிரித்வி இசையில், சீர்காழி சிற்பி வரிகளில் பாடல்கள் அனைத்தும் ஆட்டமும், தாளமும் போட வைக்கிறது. அருண்குமார் செல்வராஜின் ஒளிப்பதிவு நேர்த்தி.
தற்போதையக் காலக்கட்டத்தில் மதுப்பழக்கத்தால் பல குடும்பங்கள் எப்படி சீரழிகிறது, என்பதை கமர்ஷியலாகவும், கலர்புல்லாகும் சொல்லியிருக்கும் இயக்குநர் குட்டிப்புலி ஷரவணசக்தி, சமூகத்திற்கு சொல்லப்பட வேண்டிய ஒரு விசயத்தை மிக சிறப்பாகவே சொல்லியிருக்கிறார்.
வாழ்க்கையை சீரழிக்கும் மதுப்பழக்கம் வேண்டாம், என்பதை படத்தின் மையக்கரு சொன்னாலும், திரைக்கதை மற்றும் காட்சிகளில் மது குடிப்பதையே அதிகம் காட்டியிருப்பது சற்று நெருடலாக இருக்கிறது. அந்த ஒரு விசயம் மட்டுமே படத்திற்கு பலவீனமாக இருக்கிறது. அதை தவிர்த்துவிட்டு பார்த்தால், மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர்களின் வாழ்க்கையின் பேராபத்தை அழுத்தமாக சொல்லி மனதில் பதிய வைக்கும் இந்த ‘கிளாஸ்மேட்ஸ்’ முழுமையான கமர்ஷியல் படமாகவும் ரசிக்க வைக்கிறது.
ரேட்டிங் 3/5
Comments are closed.