ஏ.ஆர்.முருகதாஸ்-மகேஷ்பாபு என புதிய மெகா கூட்டணியில் உருவாகியுள்ள படம் தான் ‘ஸ்பைடர்’.. மகேஷ்பாபுவை நேரடியாக தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகப்படுத்தும் வேலையை இந்தப்படம் சரியாக செய்திருக்கிறதா..? பார்க்கலாம்.
அரசாங்கத்துக்கு உறுதுணையாக இயங்கும் சைபர் செல் பிரிவில் வேலை பார்க்கிறார் மகேஷ்பாபு.. பொதுமக்களின் போன் கால்களை கண்காணித்து, அதில் யாருக்காவது ஆபத்து என தெரியவந்தால், அந்த நபர்களை பாதுகாக்கும் வேலையையும் தனது பணியுடன் சேர்த்து கவனிக்கிறார் மகேஷ்பாபு..
அப்படி வந்த ஒரு போன்காலை ஒட்டு கேட்கும் மகேஷ்பாபு, தனியாக வீட்டில் இருக்கும் இளம்பெண் ஆபத்தில் இருப்பதை அறிந்து தனக்கு தெரிந்த பெண் போலீஸ் அதிகாரியை அந்த பெண்ணுக்கு உதவ அனுப்பி வைக்கிறார். ஆனால் மறுநாள் அந்த இருவருமே கொல்லப்பட்ட செய்தி தெரிய அதிர்ச்சியாகிறார் மகேஷ்பாபு..
கொலை செய்யப்பட பெண்ணின் கோணத்தில் இருந்து கொஞ்ச கொஞ்சமாக இந்த கேஸை ஆராயும் மகேஷ்பாபு, குற்றவாளியை பிடிக்க பொறி வைக்கிறார். இதில் அவர் தேடிய கொலைகாரனான பரத் சிக்குகிறார்.. ஆனால் பரத்துக்குப்பின்னால் அவரது அண்ணனான உண்மையான கொலைகாரன் எஸ்.ஜே.சூர்யா இருப்பதும் தெரியவருகிறது. பரத்தை சுட்டுக்கொன்று, எஸ்.ஜே.சூர்யாவை வெளியே வர தூண்டுகிறார்.
ஆனால் தம்பியின் மரணத்தால் கோபமான எஸ்.ஜே.சூர்யாவின் அடுத்தடுத்த நடவடிக்கைகள் மிக கொடூரமாக இருக்கின்றன. மகேஷ்பாபுவால் எஸ்.ஜே.சூர்யாவை கண்டுபிடிக்க முடிந்ததா..? அவரது நாச வேலைகளை தடுத்து நிறுத்த முடிந்ததா என்பது மீதிக்கதை.
ஹீரோ-வில்லன் இருவருக்குமே சம வாய்ப்பு கொடுத்து திரைக்கதையை வடிவமைத்துள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ். மகேஷ்பாபு ரொமான்ஸ் தவிர மற்ற ஏரியாக்களில் புகுந்து விளையாடுகிறார். பரத்துடன் மோதுவதாகட்டும், எஸ்.ஜே.சூர்யாவுடன் மோதுவதாகட்டும் சண்டைக்காட்சிகளில் உக்கிரம் காட்டுகிறார். மகேஷ்பாபு
இடைவேளை நேரத்தில்தான் என்ட்ரி கொடுத்தாலும் சைக்கோ வில்லன் கேரக்டரில் நூறு சதவீதம் சரியாக பொருந்தி இருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. மற்றவர்களின் மரணத்தில் சந்தோசம் காணும் அவரது சைக்கோத்தனமும் அப்படி அவர் மாறியதற்கான பின்னணியும் நிஜமாகவே அதிர வைக்கிறது.
ரகுல் பிரீத் சிங் டிபிகல் கதாநாயகியாக மட்டுமே வந்துபோகிறார். பரத் இப்படி ஒரு கேரக்டரில் நடித்தது சரியா, தவறா என்பதை விட, தனது கேரக்டர் தேர்வை நியாயப்படுத்தும் விதமாக தன்னை வெளிப்படுத்தி இருக்கிறார் என்பதே உண்மை. அதிலும் மகேஷ்பாபுவுடனான அந்த தீம் பார்க் சண்டை மிரட்டல். மகேஷ்பாபுவின் அம்மா தீபா ராமானுஜம் அவ்வப்போது சுவாரஸ்யம் கூட்டுகிறார். ஆர்.ஜே.பாலாஜி, ஹீரோவின் கட்டளைகளை நிறைவேற்றும் நண்பனாக கச்சிதம். ஜெயபிரகாஷ், நாகிநீடு, சாயாஜி ஷிண்டே ஆகியோர் வருகிறார்கள்… போகிறார்கள் அவ்வளவே..
பாறை உருண்டு வரும் காட்சி, மருத்துவமனை இடிந்து விழும் காட்சிகளில் சந்தோஷ் சிவனின் கேமரா டபுள் டூட்டி பார்த்திருக்கிறது. ஹாரிஸ் ஜெயராஜின் இசை கைகட்டி வேடிக்கை பார்த்திருக்கிறது. பரத்தை ட்ரேஸ் அவுட் செய்யும் டெக்னிக் எஸ்.ஜே.சூர்யாவிடம் இருந்து தனது அம்மாவை காப்பாற்றும் சாதுர்யம் ஆகியவை படத்தின் சுவாரஸ்யமான விஷயங்கள்.
டிவி நிகழ்ச்சியை வைத்து வில்லனை பிடிக்க வலைவிரிப்பது விறுவிறுப்பு தான் என்றாலும் பெண்களின் சாகச காட்சிகள் நம்பும்படியாக இல்லை.. உருண்டு வரும் பாறையை தடுத்து நிறுத்துவதும் லாஜிக் இல்லாத ஆனால் விறுவிறுப்பு ரகம் தான்.
மகேஷ்பாபு ஈடுபட்டிருக்கும் விஷயத்தின் சீரியஸ்நெஸ் தெரிந்தும் க்ளைமாக்ஸில் வில்லன் பற்றி தனக்கு தெரியவந்த தனக்கு தெரிந்த தகவலை அப்போதே நாயகி வெளிப்படுத்தாததும், அப்படி வெளிபடுத்தும் நேரத்தில் கூட அரைகுறையாக தகவல் சொல்லி போனை சுவிட்ச் ஆப் செய்வதும் எந்தவிதத்தில் நியாயம் என்பது தெரியவில்லை.
அதே போல தெலுங்கு திரையுலகத்தை போல இங்கேயும் பாடல் காட்சிகளை இடையிடையே ஸ்பீட் பிரேக்கர்களாக பயன்படுத்தியதை தவிர்த்திருக்கலாம். இப்படி சில லாஜிக் குறைகள் இருந்தாலும் படத்தின் விறுவிறுப்பு எந்த இடத்திலும் குறையாமல் பார்த்துக்கொண்டுள்ளார் இயக்குனர் முருகதாஸ்..
ஏ.ஆர்.முருகதாஸின் முந்தைய படங்களை விட இதில் காரம், மசாலா குறைவு தான் என்றாலும் ரசிகனுக்கு தேவையான அளவை விட குறையவில்லை என்பதையும் சொல்லியாகவேண்டும்.

Comments are closed.