காரில் போகும்போது விபத்தில் சிக்கும் பரத், நடக்காத ஒன்றை நடந்ததாக கற்பனை செய்யும் மனநிலைக்குப் போகிறார். தன்னுடன் விபத்தில் சிக்கிய தனது காதலி என்னவானாள் என்று தேடி அலைய, அவரது அண்ணன் சந்தானமும், சிகிச்சை அளிக்கும் மனநல மருத்துவரும் அப்படி ஒரு பெண் இல்லவே இல்லை.. அது உன் கற்பனை என்று சத்தியம் பண்ணாத குறையாக அடித்துச் சொல்கிறார்கள். சந்தர்ப்ப சூழ்நிலைகளைப் பார்த்து நாமும் அந்த மனநிலைக்கு வந்து அவர்கள் சொல்வது உண்மைதானோ என நம்பும் வேளையில்.. அட.. எதிர்பாராத ட்விஸ்ட்.
சொல்லாமலே, ரோஜாக்கூட்டம், பூ என சசியின் படங்களை மனதில் வைத்துக்கொண்டு தியேட்டருக்கு வரும் ரசிகர்கள், சசி இப்படி ஒரு ஆக்ஷன் த்ரில்லர் படத்தை காட்டுவார் என்று கொஞ்சம்கூட யூகித்திருக்க மாட்டார்கள். வழக்கத்திற்கு மாறாக தன்னுடைய மென்மையான ஃபார்முலாவில் இருந்து தைரியமாக அதிரடி ரூட்டிற்கு தாவிய சசிக்கு முதலில் ஒரு பூச்செண்டு கொடுத்து வரவேற்போம்.
சமீபகாலமாக பரத்தின் படங்களை பார்த்து நொந்துபோயிருந்த ரசிகர்கள் இந்தப்படத்திற்கு தாராளாமாக போகலாம். நடிப்பில் மட்டுமல்ல.. ஆக்ஷனிலும் மிரட்டியிருக்கிறார் பரத். மொட்டை போடுவது, எய்ட் பேக்ஸ் உடம்பு என நிறைய உழைத்திருக்கும் பரத், காதல் காட்சிகளில் சாக்லேட் பாயாக மாறவும் தவறவில்லை. தான் காதலிக்கும் பெண்ணை ‘கவர்’, பண்ணுவதற்காக அவர் எடுக்கும் ‘ஸ்பெஷல் பவர்’ அஸ்திரம் சுவராஸ்யமான கவிதை. தன் காதலியைப் பற்றிய மறைக்கப்பட்ட உண்மை தெரிய வந்ததும் அவர் காட்டும் அதிரடி கடைசிவரை சிவகாசிப் பட்டாசாக வெடித்து தள்ளுகிறது.
பொதுவாக சசி தன் படங்களில் கதாநாயகி தேர்வுக்கு ரொம்பவே மெனக்கெடுவார். அதை நிரூபிப்பது போல பரத்தின் காதலியாக வரும் மிருத்திகா பார்ப்பதற்கு அவ்வளவு ‘க்யூட்’டாக இருக்கிறார். பரத்திடம் சூப்பர் பவர் இருப்பதாக நினைத்துக்கொண்டு அவர் ஒவ்வொருமுறையும் ஏமாறும் காட்சிகள் அத்தனையும் ஜாலி கலாட்டா. க்ளைமாக்ஸ் ப்ளாஸ்பேக்கில் ராஜஸ்தான் பெண்ணாக முதல் படத்திலேயே இரட்டை வேடத்தில் வேறு நடித்திருக்கிறார்.
இன்னொரு கதாநாயகியான எரிக்கா ஃபெர்ணாண்டஸும் சரியான தேர்வுதான். அழகான இடத்தில் ஆபத்தும் இருக்கும் என்பதுபோல அவரது கேரக்டரும் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அவரது முடிவு எதிர்பாராத ஒன்று.
முதல் பாதியை கலகலப்பாக நகர்த்த உதவுகிறார் சந்தானம். காமெடியோடு செண்டிமெண்ட்டையும் கலந்து வித்தியாசமான ஆளாக சந்தானத்தை காட்டியிருக்கிறார் இயக்குனர் சசி. அனைத்து படங்களிலும் காலாட்டா பண்ணும் சந்தானத்தையே பார்த்து பழகிய நமக்கு இந்தப்படத்தில் பரத்தின் அண்ணனாக வந்து செண்டிமெண்ட்டிலும் ஸ்கோர் செய்வது புதுசாக இருக்கிறது.
மிருத்திகாவின் அத்தை, பரத்தை டார்ச்சர் பண்ணும் வில்லனாக வருபவர் என ஒவ்வொருவரும் சரியான தேர்வு. அதிலும் வில்லனின் ஃப்ளாஸ்பேக் நம்பமுடியாதது என்றாலும் கொஞ்சம் புதுசுதான்.
ஆரம்ப கார் விபத்துக்காட்சியிலேயே மிரட்டுகிறார் ஒளிப்பதிவாளர் சரவணன் அபிமன்யு. அறிமுக இசையமைப்பாளர் சைமன் முதல்மழைக்காலம் பாடலில் ஸ்கோர் செய்வதோடு க்ளைமாக்ஸில் வரும் ‘எழவு’ பாடலில் ஒரு கானாவையும் போனஸாக தட்டிவிட்டிருக்கிறார். ஆனாலும் சசியின் படங்களில் வழக்கமாக பாடல்கள் ஹிட்டாவதுபோல இந்தப்படத்தில் இல்லை என்பது குறைதான்.
இயக்குனர் சசி இந்தப்படத்திற்காக தன்னை நிறைய மாற்றிக்கொண்டிருக்கிறார் என்பது பல காட்சிகளில் தெரிகிறது. பரத்துக்கும் மிருத்திகாவுக்குமான காதலை டெவலப் செய்வது, காதலியே இல்லை என சொல்லிச்சொல்லி பரத்தை மனநோயாளியாக்குவது, இடைவேளையில் வரும் எதிர்பாராத திருப்பம் என பல இடங்களில் வேகம் குறையாமல் திரைக்கதை அமைத்திருக்கும் சசி, வில்லனுக்கான ஃப்ளாஸ்பேக்கில் மட்டும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். அதேபோல கடைசியில் வரும் துப்பாக்கிச் சண்டையும் இயக்குனர் சசிக்கு ஆக்ஷன் ஏரியா புதுசு என்பதை காட்டுகிறது. ஆனால் போரடிக்காமல் படத்தை விறுவிறுப்பாக கொண்டு சென்றதற்காக இயக்குனர் ச்சியை பாராட்டியே ஆகவேண்டும்.
நடிகர்கள் : பரத், மிருத்திகா, எரிக் ஃபெர்ணாண்டஸ், சந்தானம் மற்றும் பலர்
ஒளிப்பதிவு : சரவணன் அபிமன்யு
இசை : சைமன்
இயக்கம் : சசி