
அரசாங்க வேலை பார்த்துக்கொண்டு கிணற்று தவளையாக இருக்கும் ஜோதிகாவை விட்டுவிட்டு, அவரது கணவர் ரகுமானும் அவரது மகளும் வேலை மற்றும் படிப்புக்காக வெளிநாடு செல்கிறார்கள். கணவன் குழந்தை மட்டுமே உலகம் என வாழ்ந்த ஜோதிகாவுக்கு அதற்கப்பாலும் ஒரு உலகம் இருக்கிறது என தன்னம்பிக்கை தருகிறார் தோழி அபிராமி.. புதுமைப்பெண்ணாக உருமாறும் ஜோதிகா தேசத்தையே தன்னை கவனிக்கும் வைக்கும் அளவுக்கு உருமாறுகிறார்.. இதுதான் படத்தின் கதை
கணவன், குழந்தைகளுக்காகவே தங்களது வாழ்க்கையை அர்ப்பணித்துக்கொள்ளும் பெண்களுக்கு 36 வயதோடு வாழ்க்கை முடிந்துவிடுகிறதா..? அவர்களுக்கென கனவுகளே இல்லையா..? பளிச் என ஜோதிகா மூலம் பதில் சொல்லியிருக்கும் படம் தான் ‘36’ வயதினிலே..
பெண்களை பெருமைப்படுத்தும் விதமாகவும் அவர்களுக்கு தன்னம்பிக்கை தரும் விதமாகவும் படத்தை தயாரித்த சூர்யாவுக்கும் படத்தில் நடித்த ஜோதிகாவுக்கும் முதலில் பாராட்டுக்களை சொல்லிவிடுவோம்.. இன்றைக்கும் நிறைய பெண்கள் கைநிறைய சம்பாதித்துக்கொண்டு வாழ்வதையே தங்களது கனவு நிறைவேறிவிட்டதாக நினைப்பதை சம்மட்டி கொண்டு அடித்து உடைத்திருக்கிறார்கள்.
ஜோதிகா.. அன்று பார்த்த அதே ஜோதிகா தான் இன்றும்.. நடிப்பில் துளிகூட மாற்றுக்குறையவில்லை. சொல்லப்போனால் நடிப்பில் இன்னும் மெருகேற்றியிருக்கிறார். கணவன் தன்னை உதாசீனப்படுத்தும்போது, மகள் கூட தன்னை விட்டு சுயநலமாக விலகும்போது, ஜனாதிபதியை சந்தித்தபின், மற்றவர்களின் கேலிக்கு ஆளாவது என சராசரி பெண்ணின் மன உணர்வுகளை அட்சரம் பிசகாமல் பிரதிபலித்திருக்கிறார்..
ஜோதிகாவின் நடிப்பிற்கு ஈடுகொடுக்கும் விதமாக ரகுமானும் பாஸ்மார்க்கை தாண்டுகிறார். நவீனமயமாகிவரும் உலகத்தில் தாயிடம் கூட தனது சுயநலத்தை வெளிப்படுத்தும் மகளாக நடித்திருப்பவர் தன் மீது கோபம் வரும்படி நடித்திருப்பது சூப்பர்.
டர்னிங் பாயின்ட் கேரக்டரில் வரும் அபிராமி நான்கு கட்சிகளில் வந்தாலும் ‘நச்’. படத்தில் தேவதர்ஷினி, பிரேம், ஜெயபிரகாஷ், டெல்லி கணேஷ், கலாரஞ்சனி, இட்லிக்கார அம்மா என எல்லோருமே கதையை நகர்த்தி செல்ல கவனமாக உதவியிருக்கிறார்கள்.
சந்தோஷ் நாராயணின் இசையில் ‘வாடி ராசாத்தி’ பாடலை படம் முடிந்து வெளியில் வரும்போது கூட இளசுகள் ஹம்மிங் பண்ணிக்கொண்டு வருகிறார்கள். தமிழுக்கு தகுந்தவாறு இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ் கதைகளில் சில மாற்றங்களை அழகாக செய்திருக்கிறார்.
வெளிநாடு செல்வது தடைபட்டுவிடக்கூடாது என தன் மேல் போடப்படும் வழக்கை, தனது மனைவிமேல் ஒரு கணவன் மாட்டிவிட துணிவானா..? அம்மாவை மட்டம் தட்டி, அப்பாவின் மேல் அதிக பாசம் காட்டினாலும் பதிமூன்று வயது பெண் தன் தாயை விட்டு படிப்புக்காக வெளிநாட்டு செல்வது என்பது நம் தமிழ்நாடு அளவுக்கு வந்துவிட்டதா என சில சந்தேகங்கள் எழத்தான் செய்கின்றன.
ஆனால் இயற்கை விவசாயத்தை நகரத்தில் உள்ளவர்கள் கூட கடைபிடிக்க முடியும் என்றும், பெண்கள் தன்னம்பிக்கையுடன் தங்களுக்கென ஒரு கனவை உருவாக்கி அதன்மூலம் நாட்டுக்கும் பயன்படவேண்டும் என்றும் இரண்டு செய்திகளை சொல்லியிருப்பதற்காக அனைவரும் பார்க்கவேண்டிய படம் என்கிற பட்டியலில் இந்தப்படம் இடம்பிடித்துள்ளது.
Comments are closed.