
தூத்துக்குடியில் வாங்கிய கடனை திருப்பி தருவதில் ஏற்பட்ட கைகலப்பில் ஒருவனை கொன்றுவிட்டு சென்னைக்கு எஸ்கேப் ஆகிறார் ஆர்யா. அப்பாவின் பஞ்சாமிர்த கடை தனக்கு செட்டாகாது என பழனியில் இருந்து சென்னைக்கு நடிகனாகும் கனவில் பஸ் ஏறுகிறார் கிருஷ்ணா.
வெளிநாடு போய்விடலாம் என நினைக்கும் ஆர்யா, அதற்கு தேவைப்படும் பணத்திற்காக தம்பிராமையா கைகாட்டும் இளம்பெண் தீபா சந்நிதியை கொல்ல ஒப்புக்கொள்கிறார். கிருஷ்ணாவுக்கு, அப்படி இப்படி என அலைந்ததில், எஸ்.ஜே.சூர்யா டைரக்சனில் அஜித்தின் தம்பியாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது.
மறுநாள் பட பூஜை என்கிற நிலையில் இருவரும் ஒரே பகுதியில் வசிப்பதால், ஒரே நேரத்தில் இரண்டு தரப்பினரிடம் இருந்தும் அவர்களை பிக்கப் செய்ய வரும் கார்களில் தவறுதலாக மாறி ஏறிவிடுகின்றனர். அந்த தவறு அவர்கள் வாழ்க்கையையே எப்படி திசை மாற்றுகிறது என்பதை ரொம்பவெல்லாம் சீரியஸாக இல்லாமல் லைட்டர் வெய்னில் சொல்லியிருக்கிறார்கள்.
தூத்துக்குடி சின்னாவாக ஆர்யா, கார்த்திக்காக கிருஷ்ணா இருவருக்குமே சம அளவு ஸ்கோப் கொடுத்திருக்கிறார் இயக்குனர் விஷ்ணுவர்த்தன். அழகான ஆர்யாவை அழுக்காக்கி தலைதெறிக்க ஓடவிட்டிருக்கிறார்கள். இந்தப்படத்தில் அவரது கேரக்டர் புதுசு இல்லையென்றாலும் ஆர்யாவுக்கு இது புதுசுதான்.
கிருஷ்ணா படம் முழுதுமே துறுதுறுப்பு தான். காதலி ஸ்வாதியிடம் குறும்பு, கார் மாறி ஏறி, கொலைக்கும்பலிடம் சிக்கும்போது ஏற்படும் பதட்டம், வாய்ப்பை பறித்ததற்காக ஆர்யாவை பரேடு வாங்குவது என படம் முழுதும் தனது இருப்பை தொடர்ந்து தக்கவைகிறார்.
கதைக்கு ஏற்ற அளவான விதத்தில், ஆனால் படம் முழுவதும் வரும் விதமாக ஸ்வாதி, தீபா சந்நிதி இருவரையும் பயன்படுத்தி இருக்கிறார்கள். மின்னல் தாக்கியதால் தீபாவுக்கு கிடைக்கும் ஸ்பெஷல் சக்தியை இன்னும் கொஞ்சம் புது விதத்தில் பயன்படுத்தி இருக்கலாமோ என தோன்றுகிறது.
அட வில்லன் வேடத்தில் கூட ட்விஸ்ட் வைத்திருக்கிறார்கள்.. பலே.. ‘நான் உன்கிட்ட என்ன சொன்னேன்’ என வாழைப்பழ காமெடி பாணியில் சீரியஸ் காட்டும் வில்லன் அடில் ஹுசைன் நம்மை கவர்கிறார்.. தம்பி ராமையா, ஆர்ஜே பாலாஜி, போதாததற்கு பொன்வண்ணனும் சேர்ந்து கொள்வதால் காமெடி ஏரியா ஒரளவு கலகலப்பாகவே பயணிக்கிறது.
பாடல்களில் பெரிய அளவில் கவனம் செலுத்தாமல், பின்னணி இசையில் தீவிரம் காட்டியிருக்கிறார் யுவன். ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவில் படம் முழுவதும் வியாபிக்கும் சிவப்பு, நீல கலர் டோன் ஒரு புது முயற்சி தான். ஆர்யா, கிருஷ்ணா இருவரும் கார் மாறி ஏறியதும் கதையும் வேறு தளத்திற்கு தாவும் என எதிர்பார்த்தவர்களுக்கு சாதாரண ஆச்சர்யம் கூட சுபாவின் திரைக்கதை. அளிக்கவில்லை என்பது கொஞ்சம் வருத்தம் தான். இருந்தாலும் இளைஞர்களை கவருவான் இந்த யட்சன்.
Comments are closed.