வித்தையடி நானுனக்கு – விமர்சனம்

196

vithaiyadi naanunakku review

வெறும் இரண்டே கதாபாத்திரங்களை மட்டுமே வைத்து முழு நீள த்ரில்லர் படமாக எடுக்கப்பட்டுள்ள படம் தான் இந்த ‘வித்தையடி நானுனக்கு’ படம்..

முன்னாள் நடிகையின் மகள் சௌரா சையத்.. உன்னால் நடிகையின் மகளான அவர், தனக்கு நடிப்பு வரவில்லை என முதல் நாள் ஷூட்டிங்கிலேயே கோபித்துக்கொண்டு காரில் கிளம்புகிறார். ஆளே இல்லாத சாலையில், வழியில் கார் மக்கர் பண்ணி நின்றுவிட, அந்த வழியாக வரும் ராமநாதன், சௌராவுக்கு லிப்ட் கொடுத்து தனது காட்டு பங்களாவுக்கு அழைத்து செல்கிறார்..

அங்கே போனபின் மறுநாள் காலை முதல் ராமநாதனின் குணாதிசயம் மாற ஆரம்பிக்கிறது.. சௌராவின் சின்னச்சின்ன அலட்சியமான செயல்பாடுகளை கடுமையாக கண்டிக்கிறார். பிரம்பால் அடிக்கிறார். கிட்டத்தட்ட ராமநாதனிடம் ஒரு கைதி மாதிரி சிக்கிக்கொள்கிறார். சௌரா. ராமநாதன் இப்படி சைக்கோத்தனமாக நடந்துகொள்ள காரணம் என்ன..? அவரிடம் இருந்து சௌராவால் தப்பிக்க முடிந்ததா..? இதற்கு பதில் சொல்கிறது டிவிஸ்ட்டான க்ளைமாக்ஸ்.

படத்தின் இயக்குனரான ராமநாதன் கே.பி தான் படத்தின் ஹீரோவும் கூட.. ஐம்பது வயதை தொட்ட ஒரு சீனியர் இயக்குனரின் தோற்றத்தையும் உடல்மொழியையும் வெகு இயல்பாக கொண்டுவந்து நிறுத்துகிறார்.. ஆனால் சில நேரம் கண்ணியமாகவும், சில நேரம் கடுமையாகவும் அவர் நடப்பதற்கான காரணம் புரியாமல் குழம்பி அதற்கான விடை கிளைமாக்ஸில் தெரியவரும்போது உண்மையிலேயே ‘அட’ என ஆச்சர்யப்பட வைக்கிறார்..

கதாநாயகி சௌரா சையத் தமிழுக்கு அந்நியமான முகம் தான். இருந்தாலும், இந்த கதையுடனும் அவரது கதாபாத்திரத்துடனும் ஓரளவு பொருந்தி விடுகிறார்.. எப்போதும் தண்ணி அடித்தது போல ஒருவிதமான போதையுடன் அவர் பேசுவது எரிச்சலை ஊட்டுகிறது.. சாப்பிடவைக்க அவர் நாயை குச்சியால் அடிக்கும்போது, ஓங்கி ஒரு அறைவிடலாமா என கோபத்தை ஏற்படுத்துகிறார்.

வித்தையடி நானுனக்கு என்கிற அழகான தமிழ் தலைப்பிலேயே கதையை ஒளித்து வைத்து படம் முழுதும் கண்ணாமூச்சி ஆட்டம் காட்டியிருக்கிறார் இயக்குனர் ராமநாதன் கேபி. ஒரே வீடு, அதில் இரண்டே கதாபாத்திரங்கள் என்பது உண்மையிலேயே ஆரம்பத்தில் கொஞ்ச நேரம் போரடிக்க ஆரம்பித்தாலும், படம் த்ரில்லர் மூடுக்கு மாறியபின் அந்தக்குறை பெரிதாக தெரியவில்லை.

இடைவேளைக்குப்பின் வரும் த்ரில்லிங் காட்சிகளால் முந்தைய குறைகளை பொருட்படுத்தாமல் காட்சிகளுடன் நாம் ஒன்ற முடிவது திரைக்கதையின் பிளஸ். படத்தில் பின்னணி இசை நம்மை அவ்வப்போது மிரட்டி நகம் கடிக்கவும் வைக்கிறது. படத்தின் மிகப்பெரிய மைனஸ் ஒளிப்பதிவுதான் ராஜேஷ் கடம்கோட்டின் ஒளிப்பதிவு தெளிவில்லையா, அல்லது டெக்னிகல் கோளாறா என புரியாத அளவுக்கு படம் முழுவதும் கலர்புல் காட்சிகளும், கருப்பு வெள்ளை காட்சிகளுமாக நம்மை குழப்புவது உண்மை.. அதை கவனித்து சரி செய்திருந்தால் இன்னும் விறுவிறுப்பு கூடியிருக்கும்.

ஆங்கில வசனங்களை குறைத்து அழகு தமிழில் இன்னும் வசனங்களை சேர்த்து இருக்கலாம். குறைகள் பல இருந்தாலும் கூட, ஒரு புது முயற்சி என்கிற வகையில் இயக்குனர் ராமநாதநின் முயற்சியை வரவேற்கலாம்.

Comments are closed.