நடிகரக்ள் : அஜித் குமார், திரிஷா, அர்ஜூன், ரெஜினா கசாண்ட்ரா, ஆரவ், ரவி ராகவேந்திரா, ரம்யா சுப்பிரமணியன், நிகில்
இசை : அனிருத்
ஒளிப்பதிவு : ஓம் பிரகாஷ்
ஒயக்கம் : மகிழ் திருமேனி
தயாரிப்பு : லைகா புரொடக்ஷன்ஸ் – சுபாஸ்கரன்
பெரும் எதிர்பார்ப்பில் வெளியாகியிருக்கும் அஜித் குமாரின் ‘விடாமுயற்சி’ பெரும் வெற்றிப் படமாக அமையுமா? அல்லது பெயரளவில் முயற்சியாக இருக்குமா?, விமர்சனத்தை பார்ப்போம்.
12 வருடம் தம்பதியாக வாழ்ந்த அஜித்தும், திரிஷாவும் விவாகரத்து பெற முடிவு செய்திருக்கும் நிலையில், இருவரும் காரில் நெடுந்தூரம் பயணம் மேற்கொள்கிறார்கள். வழியில் அவர்களது கார் பழுதுடைந்து விடுகிறது. அந்த வழியாக வரும் லாரியின் உரிமையாளர் அர்ஜூன் மற்றும் அவரது மனைவி ரெஜினா கசாண்ட்ரா, உதவி செய்வதாக கூறி திரிஷாவை மட்டும் உடன் அழைத்துச் செல்கிறார்கள். கார் சரியானதும் அஜித் திரிஷாவை தேடிச் செல்ல, அவர் கடத்தப்பட்டிருக்கும் உண்மை தெரிய வருகிறது. யார்? எதற்காக கடத்தினார்கள் என்பது பற்றி எதுவும் தெரியாத அஜித், மனைவி திரிஷாவை காப்பாற்றினாரா? இல்லையா ? என்பது தான் படத்தின் கதை.
சாதாரண கதைக்கரு தான் என்றாலும், அதற்கான திரைக்கதை மற்றும் காட்சியமைப்பில் ஹாலிவுட் படங்களுக்கு நிகரான மேக்கிங் மூலம் அசத்தலான ஆக்ஷன் சஸ்பென்ஸ் திரில்லர் படமாக ரசிக்க வைக்கிறது.
உச்ச நடிகர் என்ற இமேஜை ஒதுக்கி வைத்துவிட்டு, கதைக்கான நாயகனாக களம் கண்டிருக்கும் அஜித், தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார். மனைவியின் மனதை புரிந்துக்கொண்டு அவரது உணர்வுகளுக்கு மரியாதை அளிப்பதும், அதே மனைவி கடத்தப்பட்டவுடன் காப்பாற்றுவதற்காக துடிப்பது, என அனைத்து இடங்களிலும் உணர்வுப்பூர்வமாக நடித்து அசத்தியிருக்கிறார். நடனம் மற்றும் ஆக்ஷன் காட்சிகளை மிக சாதாரணமாக கையாண்டாலும், தனது ஸ்டைலான அசைவுகள் மூலம் பார்வையாளர்களை ரசிக்க வைத்துவிடுகிறார்.
திரிஷா, அழகாக இருக்கிறார். கணவனை பிரிவது, தனக்கு வேறு ஒரு நபருடன் பழக்கம் ஏற்பட்டதை கணவனிடம் தெரிவிப்பது, என்று பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தை மிக நாகரீகமாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்கிறார்.
அர்ஜூன் கதாபாத்திரம் எதிர்பார்த்தபடி வில்லனாக வந்தாலும், படத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் பயணித்திருக்கிறது. ரெஜினா கசாண்ட்ராவும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்.
ஆரவ், ரம்யா சுப்பிரமணியம், ரவி ராகவேந்திரா, நிகில் சஜித், சஞ்சய் கணேஷ் சரவணன் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்களும் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ், படத்திற்கு மிகப்பெரிய பலமாக பயணித்திருக்கிறார். அஜர்பைஜான் சாலைகளின் ஆபத்தையும், அழகையும் ஒருசேர காட்சிப்படுத்தியிருப்பவர், வெறிச்சோடிய சாலைகளின் பயணத்தை பதற்றத்துடன் பார்க்க வைத்திருக்கிறார்.
அனிருத்தின் இசையில் பாடல்கள் ஆட்டம் போட வைக்கிறது. பின்னணி இசை எந்தவித இரைச்சலும் இன்றி பயணித்திருக்கிறது.
ஒரு நாளில், ஒரே சாலையில் நடக்கும் கதையை வேகமாகவும், விறுவிறுப்பாகவும் தொகுத்து படத்தை தொய்வில்லாமல் நகர்த்திச் சென்றிருக்கிறார் படத்தொகுப்பாளர் என்.பி.ஸ்ரீகாந்த்.
சண்டைக்காட்சிகளை வடிவமைத்திருக்கும் சுப்ரீம் சுந்தரின் பணி படத்தின் தரத்தை அதிகரிக்கச் செய்திருக்கிறது. அதிலும், காருக்குள் நடக்கும் சண்டைக்காட்சியை மிக நேர்த்தியாக படமாக்கி ரசிக்க வைத்திருக்கிறார்.
திரிஷா கடத்தலுக்கு பின்னணியில் இருப்பவர்கள் யார்? என்பதை ரசிகர்கள் யூகித்தாலும், அவரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடும் அஜித்தின் போராட்டம் மற்றும் முயற்சிகள் அனைத்தும் பார்வையாளர்களை சீட் நுணியில் உட்கார வைத்துவிடுகிறது.
அஜித்தை மாஸாக காட்டவில்லை என்றாலும், ஸ்டைலிஷாக காட்டியிருக்கும் இயக்குநர் மகிழ் திருமேனி, சாதாரண கருவை பல திருப்பங்களுடன் கூடிய திரைக்கதை மூலம் படத்தை சுவாரஸ்யமாக இயக்கியிருக்கிறார்.
படத்தின் மேக்கிங், சண்டைக்காட்சிகள் ஆகியவை படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கும் வகையில் அமைந்திருக்கிறது. அதிலும், அஜித் எந்தவித ஹீரோயிசமும் காட்டாமல், ஒரு கதாபாத்திரமாக நடித்திருப்பது புதிதாக இருப்பதோடு, கதையோடு பார்வையாளர்களை ஒன்றிவிடவும் செய்கிறது.
ரேட்டிங் 3.7/5
Comments are closed.