
‘புலிப்பார்வை’ படத்தின் இசை வெளியீட்டு விழா சில தினங்களுக்கு முன் சத்யம் திரையரங்கில் நடந்தது. இதில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், இயக்குனர் சீமான், இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
சீமான் பேசி முடித்ததும் திடீரென அரங்கில் ஆங்காங்கே உட்கார்ந்திருந்த சில மாணவர்கள் எழுந்து படத்தை தடை செய்யவேண்டும் என மேடையை நோக்கி கோஷம் போட்டுக்கொண்டே முன்னேறியதால் பாதுகாப்பிற்காக அங்கே நின்றிருந்த போலீசார் மாணவர்களை தடியடி நடத்தி அப்புறப்படுத்தி வெளியேற்றினார்கள். இந்த சம்பவம் அப்போது பரபரப்பை ஏற்படுத்தியது.
இன்று ‘புலிப்பார்வை’ படத்தில் சர்ச்சைக்குரிய சீருடைக்காட்சிகள் மாற்றப்பட இருப்பது பற்றி தெரியப்படுத்தவும் அதுகுறித்த பத்திரிகையாளர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கவும் பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் படத்தின் இயக்குனர் பிரவீன் காந்தி, வேந்தர் மூவிஸ் தயாரிப்பாளர் மதன், வேந்தர் மூவிஸ் நிர்வாகி டி.சிவா ஆகியோர் கலந்து கொண்டு விளக்கம் அளித்தனர்.
அப்போது மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து வேந்தர் மூவிஸ் மதனிடம் கேட்டபோது, “மாணவர்கள் எதிர்பாராதவிதமாக இப்படி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் போலீசார் அவர்களை கலைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். நாங்கள் மேடையில் இருந்ததால் எங்களால் உடனே ஒன்றும் செய்ய முடியவில்லை. அந்த சம்பவத்திற்காக மாணவர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்றார் மதன்.
Comments are closed.