வீரம்’ பற்றி சில புது விஷயங்கள் – மனம் திறக்கிறார் சிறுத்தை சிவா

127

இன்னும் 48 மணி நேரத்தில் ‘வீரம்’ ரிலீஸ் ஆகப்போகிறது(ஜில்லாவும் தான்). படம் ரிலீஸ் சம்பந்தமான வேலைகளுக்காக லேப் பக்கம் வந்த ‘வீரம்’ இயக்குனர் ‘சிறுத்தை’ சிவா கண்ணில் பட்டார். ஆசை யாரைவிட்டது.? படம் ரிலீஸ் ஆவதற்குள் அவரிடம் இருந்து ஸ்பெஷலாக ஏதாவது செய்தி வாங்கிவிட வேண்டும் என்று அவரை விடாப்பிடியாக பிடித்துக்கொண்டோம்.

இதோ ‘வீரம்’ பற்றிய சில சுவராஸ்யங்களை அவர் வாயாலேயே கேட்போம்.

என்னுடைய பயத்தை வென்றது அஜித்தின் பிடிவாதம்

“அஜித் சார் பங்குபெறும் ரயில் சண்டைக்காட்சி படத்தின் ஹைலைட்டாக இருக்கும். கதை சொல்லும்போது இந்தக்காட்சியைப் பற்றி ஏகப்பட்ட பில்ட்-அப்புடன் சொல்லிவிட்டேன். ஆனால் படமாக்கும்போது எனக்கு பயம் வந்துவிட்டது. காரணம், அஜித் சார் ரயிலில் கம்பியை பிடித்து சண்டை போட்டுக்கொண்டிருக்கும்போதே அதை விட்டுவிட்டு ஒருமுறை சுழன்று பின் மீண்டும் இன்னொரு கம்பியை பிடிக்கவேண்டும். ஆனால் இது நிச்சயம் ரிஸ்க் என்பது மட்டும் எனக்கு புரிந்தது. நானும் ஸ்டண்ட் மாஸ்டரும் சேர்ந்து அஜித் சாருக்கு பதிலாக டூப் போட்டு எடுத்துவிடலாம் என அவரிடம் சொல்லாமலேயே சில ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்துவிட்டோம். ஆனால் எங்களின் நடவடிக்கைகளை கவனித்த அஜித் சார் எங்களை அழைத்து என்ன செய்கிறீர்கள் என கேட்க வேறு வழியில்லாமல் தயங்கியபடியே அவரிடம் விஷயத்தை சொன்னோம்.

அதற்கு அவர் என்னைப் பார்த்து, கதை சொல்லும்போது யாரிடம் சொன்னீர்கள்.? என்னிடம் தானே.. அப்போ நான் தானே அந்தக் காட்சியில் நடிக்க வேண்டும். ஹீரோவா நடிக்கிறது நான்.. டான்ஸ் ஆடுவது நான்.. அப்புறம் சண்டைக்காட்சிக்கு மட்டும் டூப் போடுவது என்றால் அது என்ன நியாயம்?” என்றார்.
இல்லை சார் இது நூறு சதவீதம் ரிஸ்க். அதனால் தான்” என்று நான் தயங்கினேன். உடனே அவர், “சரி.. அப்படின்னா அதே ரிஸ்க், டூப் போடுகிறவருக்கும் இருக்கு இல்லையா..? அப்புறம் ஏன் நானே அதை பண்ணக்கூடாது” என்று கடைசி வரை தான் சொன்னதில் உறுதியாக நின்று அந்தக்காட்சியில் டூப் போடாமல் நடித்தார்.
பொதுவாகவே அஜித் சார் சண்டைக் கலைஞர்களிடம் மிகுந்த அன்பு கொண்டவர். ஒரு காட்சியில் ஸ்டண்ட் வீரர் ஒருவர் அடிவாங்கி விழுந்துவிட்டார் என்றால் உடனே அவரிடம் ஓடும் அஜித்’ “உங்களுக்கு ஒண்ணும் ஆகலையே” என்று கேட்டபடி பதறிப்போவார். ஒரு பக்கம் பார்ப்பதற்கு வேடிக்கையாக இருந்தாலும் அவர்களின் மேல் அவர் காட்டும் அக்கறை அபரிமிதமானது

அஜித்தின் பைக் பயணம் – தீர்ந்த்து என் சந்தேகம்

ஒவ்வொரு கட்ட படப்பிடிப்பு முடிந்ததும் அஜித் சார் ஹாயாக பைக்கில் சென்னை-பெங்களூர், மும்பை-சென்னை என ஜாலி ட்ரிப் கிளம்பிவிடுவார். ஆனால் இப்படி ஒரு ட்ரிப் அடிக்கப்போகிறேன் என அவர் என்னிடம் சொன்னபோது முதலில் எனக்கு பயமாக இருந்தது. ஆனால் ஒருமுறை அவருடன் காரில் பயணம் செய்யும் வாய்ப்பு கிடைத்த்து. அப்போதுதான் அஜித் சார் சாலைகளில் வாகனங்களை கையாளும் லாவகம் கண்டு பிரமித்துப்போனேன். என் பயம் அர்த்தமற்றது என நிரூபித்தார் அஜித் அதன்பின் அவர் பைக்கில் பயணம் கிளம்பியபோதெல்லாம் ஜாலியாக கையசைத்து வழியனுப்பி வைத்தேன்.

என் தம்பி அஜித்தின் தம்பியானான்

இந்தப்படத்தில் என் தம்பி பாலாவை நடிக்கவைத்தது ஏன் என்று கேட்கிறீர்களா? அது ஒரு பெரிய கதை. என் தம்பி பாலா மலையாளத்தில் இப்போது பிஸியாக நடித்துக்கொண்டு இருக்கிறான். என் படங்களில் நடிக்க கூப்பிட்டால் வரவே மாட்டான். ஆனால் இந்தப்படத்தில் அஜித் சாருக்கு தம்பியாக நடிக்கிறாயா என்று கேட்டதுதான் தாமதம், மலையாளத்தில் சில பட வாய்ப்புகளை தவிர்த்துவிட்டு ஓடி வந்துவிட்டான். அந்த அளவுக்கு அவன் தீவிரமான அஜித் ரசிகன்.

இந்தப்படத்திலும் அஜித்துக்கு சால்ட்-பெப்பர் லுக் ஏன்?

‘மங்காத்தா’, ‘ஆரம்பம்’ படங்களில் நரைத்த தலைமுடி மற்றும் தாடியுடன் சால்ட்-பெப்பர் லுக்கில் நடித்திருந்தார் அஜித் சார். ஆனால் இந்தப்படத்தில் அஜித் சாருக்கு டெஸ்ட் போட்டோ ஷூட் எடுத்துக்கொண்டிருக்கும்போது வேட்டி, சட்டை அணிந்த அஜித் என் பக்கம் திரும்பி ஓகேவா என்றார். அந்த போஸை அப்படியே போட்டோகிராபர் படம்பிடிக்க, அதைப்பார்த்த அஜித் இந்த லுக் நல்லா இருக்கே.. இதையே படத்தில் வைத்துவிடலாமே என கேட்டார். ஆனால் படத்தில் அவர் அப்படி தோன்றுவதற்கு உண்மையிலேயே ஒரு காரணம் இருக்கிறது. அதற்காக ஒரு காட்சியே இருக்கிறது.

திருப்பதியில் நானும் அஜித்தும் மொட்டை போட்டதின் பின்னணி

பொதுவாக ஒரு படம் முடிந்ததும் நான் திருப்பதிக்குச் சென்று மொட்டைபோடுவது வழக்கம். அதேபோல இந்தப்படம் முடிந்ததும் நான் திருப்பதிக்கு கிளம்பினேன்.. என்னுடன் காரில் வந்த அஜித் சார்.. திடீரென நானும் வருகிறேன், வண்டியை திருப்பதிக்கு விடுங்கள். என்றுகூற எங்களுக்கு ஷாக்.. இதுதான் நாங்கள் இருவரும் மொட்டை அடித்ததின் பின்னணியில் இருக்கும் விஷயம்.

“சார் அப்புறம்..” என்று அடுத்த கேள்விக்கு போவதற்குமுன் “ஸாரி சார்.. லேட்டயிடுச்சு.. இன்னும் ரெண்டு நாள் தானே.. படம் ரிலீஸ் ஆனால் இதைவிட உங்களுக்கு நிறைய சுவராஸ்யங்கள் ” என்று கூறியபடியே நழுவினார் ‘சிறுத்தை’ சிவா.

Leave A Reply

Your email address will not be published.