ஷங்கர் டைரக்ஷனில் ஐ’ படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் எமி ஜாக்சன். இந்த சமயத்தில் மூன்று நாட்கள் ஷூட்டிங்கிற்கு ஷங்கர் லீவு விட, கிடைத்த கேப்பில், திடீர் விசிட்டாக கேரளா சென்று வந்திருக்கிறார் எமி. கேரளாவுக்கு போனது ரெஸ்ட் எடுக்க என்று நினைத்துவிடாதீர்கள். கேரளாவில் கால் வைத்ததும் எமி நேராகப் போனது அங்குள்ள கொடநாடு யானைகள் சரணாலயம் மற்றும் புத்துணர்வு மையத்திற்குத்தான்.
ஒருநாள், இரண்டு நாள் அல்ல.. மூன்று நாட்கள் யானைகளுடனேயே தனது நேரத்தை செலவழித்து மகிழ்ந்திருக்கிறார் எமி. பொதுவாக மிருகங்கள் மீது பாசம் காட்டும் எமிக்கு யானைகள் என்றால் தனிப்பிரியம். ‘டஸ்க் ட்ரஸ்ட்’ என்னும் பிராணிகள் விழிப்புணர்வு அமைப்பில் ஏற்கனவே இணைந்து செயல்பட்டு வருகிறார் எமி. இந்த அமைப்பில்தான் பிரிட்டிஷ் இளவரசர் வில்லியம்ஸும் இணைந்து இருக்கிறார்.
“யானைகளுடன் மூன்று நாட்கள் செலவிட்டது மறக்க முடியாத அனுபவம். நான் மிருகவதைக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறேன். சமீபத்தில்கூட இந்தியாவில் இது சம்பந்தமாக நடந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தில் கலந்துகொண்டேன். தந்தங்களுக்காக யானைகள் கொல்லப்படுவது ஆப்பிரிக்காவில் அதிக அளவில் நடக்கிறது. அதற்கடுத்து இந்தியாவில்தான். யானைகளை மட்டுமல்ல, காண்டாமிருகங்களை காப்பற்றுவதற்காகவும் குரல் கொடுத்துவருகிறேன். என் வரையில் எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு மிருகவதைக்கு எதிராக விழுப்புணர்வு ஏற்படுத்த முயற்சி செய்வேன்” என்கிறார் எமி.